"தோமாவின் நடபடிகைகள்" (The Acts of Thomas) என்ற இந்த நூல் முதலில் சிரியாக் மொழியில் எழுதப்பட்டு, பின்னர் கிரேக்க மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. இது பொதுவாக கி.பி. 180 முதல் 230-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் ஆசிரியர் பர்தெசானெஸ் (Bardesanes) என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது பெரும்பாலும் பல புராணக்கதைகளைக் கொண்டிருந்தாலும், சில வரலாற்று உண்மைகளும் இதில் காணப்படுகின்றன. இந்த முழு ஆவணமும் பதின்மூன்று பாகங்களை கொண்டுள்ளது. இதில் அப்போஸ்தலர் தோமாவின் எருசலேமிலிருந்து (Jerusalem) இந்தியாவுக்கான பயணம், அங்கு அவர் செய்த பணி முதல் அவருடைய இரத்தசாட்சி மரணம் வரையிலான வரலாற்று நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன.
மேலான அழைப்பு
தோமாவின் நடபடிகைகள் அவர், “அந்நாட்களில் அப்போஸ்தலர்களாகிய நாங்கள் அனைவரும் எருசலேமில் இருந்தோம்: சீமோன் பேதுரு (Simon Peter) மற்றும் அவன் சகோதரன் அந்திரேயா (Andrew), செபெதேயுவின் மகன் யாக்கோபு (James) மற்றும் அவன் சகோதரன் யோவான் (John), பிலிப்பு (Philip) மற்றும் பர்தொலொமேயு (Bartholomew), தோமா (Thomas) திதிமு (Didymus) என்றும் அழைக்கப்பட்டார் மற்றும் வரிவசூலிக்கும் மத்தேயு (Matthew), அல்பேயுவின் மகன் யாக்கோபு (James) மற்றும் கனானியன் சீமோன் (Simon the Cananaean), மற்றும் யாக்கோபின் சகோதரன் யூதா (Judas); கர்த்தராகிய இயேசுவின் கட்டளையின் படி (நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் மாற்கு 16:15) நாங்கள் உலகத்தின் பல பகுதிகளில் பிரிந்து சென்று ஊழியம் செய்வதற்க்காகப் பிரித்துக்கொண்டோம். ஒவ்வொருவரும் தங்களுக்குச் சீட்டில் விழுந்த பகுதிக்கும், கர்த்தர் அனுப்பிய தேசத்திற்கும் செல்ல வேண்டும்” என்பதற்காக என்று குறிப்பிடுகிறார்.
மேலும் அதில் சீட்டுப் போட்டதில், இந்தியா யூதா தோமாவுக்கு (Judas Thomas) விழுந்தது. ஆனால், மாம்ச பலவீனத்தின் காரணமாக தன்னால் பயணம் செய்ய முடியாது என்று கூறி, அவர் இந்தியாவிற்கு செல்ல விரும்பவில்லை. மேலும், "எபிரேயனாகிய நான் எப்படி இந்தியர்களிடையே சென்று கிறிஸ்துவின் சத்தியத்தைப் பிரசங்கிக்க முடியும்?" என்றார். அவர் இவ்வாறு சிந்தித்துச் சொல்லிக்கொண்டிருக்கையில், இரட்சகராகிய கர்த்தர் இரவில் அவருக்குத் தோன்றி, "தோமாவே, பயப்படாதே, இந்தியாவுக்குச் சென்று அங்கே கர்த்தருடைய வசனத்தைப் பிரசங்கி, ஏனெனில் என் கிருபை உன்னுடன் இருக்கிறது" என்றார். ஆனால் அவர் கீழ்ப்படிய மறுத்து, "உமக்கு சித்தமான இடத்திற்கு என்னை அனுப்பும் - ஆனால் வேறு எங்காவது! நான் இந்தியர்களிடம் செல்ல மாட்டேன்" என்றார்.
கர்த்தருடைய சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தல்
தோமா இவ்வாறு மறுதலித்து சிந்தித்துக் கொண்டிருந்த அதே வேளையில், கர்த்தர் தமது திட்டத்தை நிறைவேற்ற, ஒரு வழியை ஆயத்தப்படுத்தியிருந்தார். அது தற்செயல் அல்ல, மாறாக தேவனுடைய ஆழமான வழிநடத்துதலாகும். இந்தியாவிலிருந்து வந்த அப்பன் (Abban) என்ற ஒரு வணிகன் அங்கே இருந்தான். அவன் கோண்டோபெர்னஸ் (Gundaphorus) அரசனால், ஒரு தச்சனை தன்னுடன் அழைத்து வரும்படி கட்டளை பெற்றிருந்தான்.
இரவு முழுவதும் கர்த்தருடன் போராடிய தோமா, பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலால் மறுநாள் காலையில், தனது சுயத்தை முழுமையாக அர்ப்பணித்து ஜெபித்தார். அது ஒரு கீழ்ப்படிதலின் ஜெபமாக இருந்தது: "கர்த்தராகிய இயேசுவே, இனி என் சித்தமல்ல, உம்முடைய சித்தமே நிறைவேறட்டும்! நீர் விரும்பும் இடத்திற்குச் செல்கிறேன்" என்று கூறி, விசுவாசத்தோடு ஒரு அடி எடுத்து வைத்து, வணிகனான அப்பனுடன் சென்றார். இது இயேசுவின் கெத்சமனே ஜெபத்தை நினைவூட்டுகிறது மற்றும் உண்மையான சீடத்துவத்தின் அடையாளமாகும். தோமா இந்தியாவிற்கு வந்து கிறிஸ்துவை பிரசங்கிக்க வேண்டும் என்பது கர்த்தரின் திட்டமாயிருந்ததால் அதற்கானவழியையும் கர்த்தரே திறந்தார்.
சுவிசேஷப் பயணத்தின் துவக்கம்
நீண்டதும் சவாலானதுமான கடல் பயணத்திற்குப் பிறகு, கர்த்தருடைய கிருபையால் அப்போஸ்தலர் தோமாவும், வணிகனான அப்பனும் இந்தியாவின் நகரங்களை அடைந்தனர். உடனே, அப்பன் அரசன் கோண்டோபெர்னஸ் (Gundaphorus) சந்தித்து வணங்கி, தான் அழைத்து வந்த தச்சனைப் பற்றி அரசருக்குத் தெரிவித்தான். இதுவே, இந்தியாவின் மண்ணில் கிறிஸ்துவின் நாமம் விதைக்கப்படுவதற்கான முதல் படியாக அமைந்தது என்று விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் சுவிசேஷத்தின் சாட்சி
அப்போஸ்தலர் தோமா, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு இந்தியா முழுவதும் கிறிஸ்துவின் நற்செய்தியைத் தைரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அவருடைய வாழ்க்கை, அவர் பிரசங்கித்த வார்த்தைகளுக்கு சாட்சியாக விளங்கியது. இதன் விளைவாக, மிஸ்தேயு (Misdaeus/Mazdai) அரசனின் ஒரு படைத்தலைவன் அவரிடம் வந்து, பின்வருமாறு சாட்சி கூறினான்:
"உம்மைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீர் யாரிடமிருந்தும் பணத்தையோ வேறு எந்த சன்மானத்தையோ வாங்குவதில்லை, மாறாக உம்மிடம் உள்ளதை எல்லாம் ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் கொடுத்துவிடுகிறீர். இதுவே நீர் தேவனுடைய மனிதர் என்பதற்கான அடையாளம். நீர் உலகப் பிரகாரமான பலனை அனுபவிப்பவராக இருந்தால், நான் அதிகப் பணத்தை அனுப்பியிருப்பேன், நானே இங்கு வந்திருக்க மாட்டேன். ஏனெனில், அரசன் என்னை ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுப்பதில்லை. எனக்குப் பல சொத்துக்கள் உள்ளன, நான் ஒரு பணக்காரன், இந்தியாவின் செல்வந்தர்களில் ஒருவன். ஆயினும், உமது வாழ்வில் நான் காணும் கிறிஸ்துவின் எளிமை என்னை உம்மிடம் கொண்டு வந்துள்ளது என்றார்."
விசுவாசத்தின் விலை: இரத்தசாட்சியின் கிரீடம்
கிறிஸ்துவின் சத்தியத்தின் வெளிச்சம் இருளைக் கடிந்துகொண்டதால், எதிர்ப்புகள் எழும்பின. கிறிஸ்துவின் நாமத்திற்காகப் பாடுகளை அனுபவிப்பது அப்போஸ்தலர்களுக்குக் கொடுக்கப்பட்ட சிலாக்கியமாக கருதினார். அந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, அப்போஸ்தலனாகிய தோமா சிறையிலடைக்கப்பட்டார்.
பரமனின் மேலான இந்த சுவிசேஷ ஒளியை அடக்க நினைத்த மிஸ்தேயு அரசன், தோமாவை எவ்விதம் கொல்லலாம் என்று தீய ஆலோசனையுடன் சிந்தித்துக் கொண்டிருந்தான். பின்னர் அவன் எழுந்து, அப்போஸ்தலர் தோமாவை தன்னுடன் நகருக்கு வெளியே அழைத்துச் சென்றான்; ஆயுதம் ஏந்திய சில வீரர்களும் பின்தொடர்ந்தனர். அங்கே தோமா தன் ஜீவனைப் பணயமாக வைத்தார்.
உடனடியாக அந்த நால்வரும் அவரைத் தாக்கி, கொன்றுவிட்டனர். கர்த்தருக்காக ரத்த சாட்சியாக மரித்தார். அவர் சிந்திய இரத்தம், இந்திய மண்ணில் திருச்சபை வளர்வதற்கான விதையாக மாறியது. அங்கு கூடியிருந்த சகோதரர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். அவருடைய சரீரத்தை நல்ல ஆடைகளாலும், விலையுயர்ந்த மெல்லிய வஸ்திரங்களாலும் சுற்றி, பழைய காலத்து அரசர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் மிகுந்த மரியாதையுடன் வைத்தனர். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். யோவான் 12:24. என்ற இயேசு கிறிஸ்துவின் வசனத்தின்படி தோமாவின் ரத்தம் சிந்துதல் அதிகமான பலனைக் கொடுத்தது.
மரித்தும் பேசும் விசுவாசம்
நீண்ட காலத்திற்குப் பிறகு, கர்த்தர் தமது வல்லமையை ஒரு அற்புதத்தின் மூலம் வெளிப்படுத்தினார். முன்பு தேவனுடைய மனிதனைக் கொன்ற அதே அரசன், இப்போது அதே தேவனுடைய வல்லமையை நாடினான். மிஸ்தேயுவின் மகன்களில் ஒருவன் பிசாசினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தான்; யாராலும் அவனைக் குணப்படுத்த முடியவில்லை. அப்போது மிஸ்தேயு சிந்தித்து, "நான் சென்று கல்லறையைத் திறந்து, தேவனுடைய அப்போஸ்தலரின் எலும்புகளில் ஒன்றை எடுத்து, என் மகனின் மீது கட்டுவேன், அவன் குணமடைவான் என்று நான் அறிவேன்" என்றான்.
ஆனால் அவன் கல்லறையைத் திறந்தபோது, அங்கே தோமாவின் எலும்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில், சகோதரர்களில் ஒருவர் அவற்றை எடுத்து, கிறிஸ்துவின் சுவிசேஷம் பரவ வேண்டியிருந்த மேற்குப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். கர்த்தருடைய சாட்சியானது எலும்புகளில் அல்ல, அவர் வாழும் சரீரமாகிய சபையிலேயே தங்கியிருக்கிறது என்பதன் அடையாளமாக இது விளங்கியது.
அப்போஸ்தலர் தோமாவின் வரலாறு, தேவனுடைய மகத்துவத்தையும் வல்லமையும் பறைசாற்றுகிறது. மாம்ச பலவீனத்தையும், தயக்கத்தையும் காட்டிய ஒரு மனிதனை, மேலும் இவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் கூட சந்தேகித்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம் ஆனாலும் தேவன் தமது கிருபையால் அவரை தேர்ந்தெடுத்து, விசுவாசத்தின் சிகரமாக மாற்றினார். ஆரம்பத்தில் மறுத்தாலும், இறுதியில் தேவ சித்தத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்ற பூமி யின் கடைசி எல்லைவரை சென்றார்.
அவருடைய ஊழியம் மற்றும் இரத்தசாட்சி மரணம், இந்தியத் துணைக்கண்டத்தில் கிறிஸ்துவின் திருச்சபைக்கான அசைக்க முடியாத அஸ்திபாரத்தை இட்டது. சந்தேகப்பட்ட ஒரு சீடன், தனது ஆண்டவருக்காக மரித்து, பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு விசுவாசத்தின் முன்னோடியாக மாறினார். அவருடைய வாழ்க்கை, அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை நமக்குக் காட்டுகிறது:
"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன், இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்படிருக்கிறது." (2 தீமோத்தேயு 4:7). தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாகுவதாக!!!
தொடர்ந்து பயணிப்போம்....
படைத்தவரின் பாதையில்,
திருமதி. ரெமினா சுஜித்
Bibliography and Additional References:
· Klijn, A.F.J. The Acts of Thomas. Leiden: Brill, 1962.
· Drijvers, H.J.W. "The Acts of Thomas." In New Testament Apocrypha, vol. 2, edited by W. Schneemelcher, 322-411. Louisville: Westminster John Knox, 1992.
· Brock, Sebastian P. "Bardaisan and the Acts of Thomas." In Syriac Perspectives on Late Antiquity, 1-20. London: Variorum, 1984.
· Attridge, Harold W. "The Original Language of the Acts of Thomas." In Of Scribes and Scrolls, edited by Harold W. Attridge, 241-50. Lanham: University Press of America, 1990.
· Ramelli, Ilaria. "The Acts of Thomas and the Doctrine of Reincarnation." Journal of Early Christian Studies 18, no. 1 (2010): 47-73.
