கடந்த சில அத்தியாயங்களில், கிறிஸ்தவம் எவ்வாறு இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் வேரூன்றியது என்பதையும், கிறிஸ்துவின் பிள்ளைகள் பலர் இங்கு வந்து அவருடைய அன்பை எவ்வாறு பறைசாற்றினார்கள் என்பதையும், அதன் ஒளிமயமான வரலாற்றையும் விரிவாகப் பார்த்தோம். ஆனால், வரலாறு என்பது வெற்றிகளையும் தியாகங்களையும் மட்டுமல்ல, சில சமயங்களில் வேதனையான தவறுகளையும் உள்ளடக்கியது. அந்த வகையில், இந்த அத்தியாயத்தில் நாம் வரலாற்றின் மற்றொரு பக்கத்தைத் திறக்கவிருக்கிறோம். இங்கு, கிறிஸ்துவின் பெயராலேயே நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்தவத்தின் வரலாறு ஒரு ஒரு அன்பின் வரலாறு. தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை, இந்த உலகத்தை மீட்பதற்காகக் கொடுத்தார். இயேசு கிறிஸ்து பூமியில் வாழும்போது, பிணியாளிகளைக் குணமாக்கினார், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களுடன் உணவருந்தினார், மேலும் கிருபை, மன்னிப்பு மற்றும் மனத்தாழ்மை மற்றும் நியாயத்தீர்ப்பின் காரியங்கள் ஆகியவற்றின் செய்திகளை போதித்தார். இருப்பினும், வரலாறு என்பது சிக்கலானதும், வேதனையானதுமான ஒரு ஆசான். இயேசுவைப் பின்பற்றுபவர்கள், அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தேடியபோது, தங்கள் இரட்சகரின் போதனைகளுக்கே முற்றிலும் எதிரான அமைப்புகளை உருவாக்கிய தருணங்களை அது நமக்குக் காட்டுகிறது. அப்படியான ஒரு இருண்ட அத்தியாயம், 1543-ஆம் ஆண்டில் கோவாவில் (Goa) அரங்கேறியது. ஜெரோனிமோ டயஸ் (Jeronimo Dias) என்ற மனிதனுக்கு என்ன நடந்தது என்ற அந்தப் பதிவு, நமது விசுவாசத்தை நாம் உற்றுநோக்கவும், ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கவும் நம்மைத் தூண்டுகிறது: கிறிஸ்துவின் செய்தி, மனிதர்களின் பாரம்பரியங்களாலும் அதிகாரத்தாலும் மாற்றப்படும்போது என்ன நடக்கும்?

ஜெரோனிமோ டயஸ் செய்த தவறு:

இந்த வரலாற்றுப் பதிவின் மையத்தில் ஜெரோனிமோ டயஸ் (Jeronimo Dias) என்ற மனிதர் இருக்கிறார். அவர் ஒரு "மருத்துவப் பட்டதாரி" மற்றும் ஒரு "புதிய கிறிஸ்தவர்". தன் நண்பர்களுடனான பழக்கமான உரையாடல்களின்போது, ஜெரோனிமோ நமது பரிசுத்த விசுவாசத்திற்கு எதிரான சில காரியங்களைப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவர் பழைய சட்டத்தின் அம்சங்களையும், யூத மரபுகளையும் பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதாவது மோசேயின் சட்டமே உண்மையான இரட்சிப்பைக் கொடுக்கும்" என்று கூறியதாகவும், இயேசு கிறிஸ்துவைக் குறித்த சில விசுவாசக் கோட்பாடுகளை மறுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி விவாதித்ததற்காகவே, அவர் பேராயரிடம் (Bishop) காட்டிக்கொடுக்கப்பட்டார். அங்கு மென்மையான அல்லது கடினமான திருத்தமோ, போதக உரையாடலோ, அவரைப் புரிந்துகொள்ளும் முயற்சியோ இருக்கவில்லை. பேராயரின் உடனடி எதிர்வினை, அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர், ஜெரோனிமோ டயஸ் ஒரு யூதர் என்றும், வேதப்புரட்டாளர் (heretic) என்றும் அந்த நடவடிக்கைகள் விரைவாக முடிவு செய்தன.

ஆலயத்தில் அல்ல, மாறாக ஆளுநரின் (Governor) பிரம்மாண்டமான இல்லத்தில் ஒரு சபை கூடியது. பேராயர், ஆளுநர், டியோகோ (போர்பா) [Diogo (Borba)] என்ற ஆசிரியர், ஒரு டொமினிகன் (Dominican) போதகர் மற்றும் தலைமை குரு (Vicar General) ஆகியோர் அங்கு இருந்தனர். ஒன்றாக, அவர்கள் தங்கள் தீர்ப்பை அறிவித்தனர். அந்தத் தீர்ப்பு முழுமையானதாகவும், கொடூரமானதாகவும் இருந்தது: "நமது பரிசுத்த கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிரான வேதப்புரட்டலுக்காக, பொது அறிவிப்பின் மூலம் உனது உடல் உயிருடன் எரிக்கப்பட்டுச் சாம்பலாக்கப்பட வேண்டும்."

புதிய ஏற்பாட்டின் சாரத்திற்கு முற்றிலும் நேர் எதிராக அதிர்ச்சியூட்டும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்திருந்தது. ஜெரோனிமோ டயஸ் கற்பனை செய்ய முடியாத மிகக் கொடூரமான மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்த தண்டனை என்னவென்றால் அவரை உயிரோடு எரிக்க வேண்டும் என்பது.

அதிகாரத்தின் வெளிப்பாடு:

அந்தத் தண்டனையில் ஒரு விசித்திரமான கருணை இருந்தது. ஜெரோனிமோ மன்னிப்புக் கேட்டு, மனந்திரும்பி, ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவராக இறக்க ஒப்புக்கொண்டால், அவர் முதலில் கழுத்தை நெரித்துக் கொல்லப்படுவார், பின்னர் எரிக்கப்படுவார், அப்போதுதான் நெருப்பின் வேதனையை அவர் உணரமாட்டார் என்பதே. இது ஒரு கருணையாகக் கருதப்பட்டது மேலும் ஒரு விரைவான மரணமாகும். இப்படி கடுமையாகக் கண்டிக்கப்பட்ட பிறகு, அவர் மனந்திரும்பி, தான் செய்தது பாவம் என்று பகிரங்கமாக அறிக்கையிடச் செய்யப்பட்டார். அவர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பொது வெளியில் தூக்கு மரக் கட்டையில் (pillory) நிறுத்தப்பட்டு, இறுதியாகத் தூக்கிலிடப்பட்டார். இந்த கோரத்தில் இரக்க செயலாக, அவருடைய உடல் சாம்பலாக்கப்படுவதற்கு முன்பு, கழுத்து நெரிக்கப்பட்டது.

இந்தக் கொடூரமான நிகழ்வு அத்துடன் முடிவடையவில்லை. அடுத்த ஞாயிற்றுக்கிழமை, பேராலயத்தில் (Cathedral Church) வேதப்புரட்டல்களைப் பற்றி அறிந்திருந்தும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காத எவரும் சபையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு தண்டனையை (excommunication) பெற்றுக்கொள்வார்கள் என்று அவர் ஒரு அதிகாரப்பூர்வ உத்தரவை வாசித்தார். இது முழு மக்களையும் உளவாளிகளின் வலையமைப்பாக மாற்றியது. இது அப்போஸ்தலர் நடபடிகளில் விவரிக்கப்பட்ட, அன்பினால் அனைத்தையும் பகிர்ந்துகொண்ட விசுவாசிகளின் ஐக்கியம் அல்ல. மேலும் இது அச்சத்தின் மீது கட்டப்பட்ட ஒரு கண்காணிப்பு அமைப்பாக மாறியது. இங்கு அயலான் அயலானுக்கு எதிராகத் திருப்பப்பட்டான், அனைத்தும் திருச்சபையின் கண்காணிப்புக் கண்ணின் கீழ் நடந்தது.

திருச்சபையும் அரசும் இணைந்த இந்த பரிசுத்தமற்ற கூட்டணி, மதத் தலைவர்கள் தங்கள் கோட்பாடுகளைத் திணிக்க அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தியது, இந்த காரியம் இயேசு கிறிஸ்து தெளிவாகத் தவிர்த்த ஒன்றாகும். ரோம ஆளுநரான பொந்திப் பிலாத்துவின் முன் நின்றபோது, இயேசு, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் போர்ச்சேவகரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க, என் ராஜ்யம் இவ்விடத்தைச் சேர்ந்ததல்ல என்றார்" (யோவான் 18:36). கோவாவில், திருச்சபை இதை மறந்துவிட்டது. அது இவ்வுலக ராஜ்யமாக மாறி, இவ்வுலகக் கருவிகளான வன்முறை, பலவந்தம் மற்றும் பொதுப் பயங்கரவாதத்தைப் பயன்படுத்தியது.இந்த நிகழ்வு, வரவிருந்த கொடூரமான மத விசாரணைக் காலத்தின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது

ஒரு வேதனையான பாடம்:

ஜெரோனிமோ டயஸின் வரலாறு, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், குறிப்பாக இந்தியாவில் உள்ள நமக்கு ஒரு அவசியமான பாடமாகும். சிலுவையே நமது விசுவாசத்தின் சின்னம். அது நம்மோடு உடன்படாதவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு பட்டயம் அல்ல. 1543-இல் கோவாவில் நடந்த நிகழ்வுகள், சிலுவையின் உண்மையான அர்த்தத்தை ஒரு பூலோக சிம்மாசனத்தின் அதிகாரத்திற்காக விற்றுவிட்ட திருச்சபையைக் காட்டுகின்றன.

கட்டாயத்தின் பேரில் ஒருவரை கிறிஸ்தவராக்குவது என்பது, விதைக்காமலேயே அறுவடை செய்ய முயற்சிப்பதைப் போன்றது. உண்மையான மனமாற்றம் என்பது, பரிசுத்த ஆவியானவர் ஒருவரின் இருதயத்தில் கிரியை செய்வதால், சுயமாகவும் விருப்பத்துடனும் எடுக்கப்படும் ஒரு முடிவு.

ஒருவர் கட்டாயத்தின் பேரில் ஞானஸ்நானம் எடுத்தாலோ, சிலுவையை அணிந்தாலோ, ஆலயத்திற்குச் சென்றாலோ, அவருடைய இருதயம் மாறாமல் அது வெறும் வெளிவேஷமாகவே இருக்கும். இயேசு பரிசேயர்களைக் கடிந்துகொண்டதே இந்த வெளிவேஷத்திற்காகத்தான்.

நம்முடைய திருச்சபை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான நீதிமன்றமாக அல்ல, உடைந்த உள்ளங்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக, கிருபை, மன்னிப்பு மற்றும் அன்பிற்கான இடமாக இருக்க வேண்டும். ஒரு திருச்சபையின் உண்மையான பலம், அதன் பிரம்மாண்டமான கட்டிடங்களிலோ, அதன் அரசியல் செல்வாக்கிலோ இல்லை. மாறாக, அது கிறிஸ்துவின் குணத்தை—அதாவது மனத்தாழ்மை, இரக்கம், நீடிய பொறுமை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு எவ்வளவு தூரம் வெளிப்படுத்துகிறது என்பதில்தான் இருக்கிறது.