கிறிஸ்தவத்தின் ஆரம்பகாலப் பரவல், அப்போஸ்தலர்களின் வரலாற்றில் மிக முக்கியமான அத்தியாயங்களில் ஒன்றாகும். இயேசு தம் சீடர்களிடம், "நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்" (மத்தேயு 28:19) என்று கட்டளையிட்டார். இந்தக் கட்டளையை ஏற்று, 12 அப்போஸ்தலர்களும் நற்செய்தியை கொண்டு சென்றனர். அதில் குறிப்பாக தோமாவும், பர்த்தொலொமேயுவும், அறியப்பட்ட உலகின் கடைசி எல்லைகளான இந்தியா வரை நற்செய்தியைக் கொண்டுவந்தனர். மயிலாப்பூரில் (Mylapore) உள்ள அப்போஸ்தலரான தோமாவின் கல்லறை மற்றும் மேற்கு கடற்கரையோரம் அப்போஸ்தலரான பர்த்தொலொமேயுவுடன் தொடர்புடைய விவசாயப் பாரம்பரியங்கள், தென்னிந்தியாவில் கிறிஸ்தவத்தின் பழமையான இருப்பிற்கு வலுவான சான்றுகளாக விளங்குகின்றன.
ஈராக்கிய வரலாற்று ஆசிரியர் அம்ர் இப்னு மத்தாவின் (ʿAmr ibn Mattā) பதிவு:
14 ஆம் நூற்றாண்டில், ஈராக்கில் உள்ள திர்ஹான் (Ṭīrhān) பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ அரபு வரலாற்று ஆசிரியரான அம்ர் இப்னு மத்தா என்பவர்,அவர் கிழக்கு சிரிய திருச்சபையைச் (நெஸ்டோரியன்) சேர்ந்தவர் என்று குறிப்பிடுகிறார்கள். "கிதாப் அல்-மஜ்தல்" (Kitāb al-Majdal - கோபுரத்தின் புத்தகம்) என்ற முக்கியமான வரலாற்று நூலை எழுதினார். இந்த நூல், இந்தியாவின் பழமையான கிறிஸ்தவ பாரம்பரியங்களுக்கும் இடைக்கால இஸ்லாமிய உலகத்திற்கும் இடையே ஒரு வரலாற்றுப் பாலமாக அமைகிறது.
இவரது குறிப்புகளில், இந்தியாவில் அப்போஸ்தலரான தோமாவின் கல்லறை மெய்லான் (Meilan) தீவில், அதாவது இன்றைய மயிலாப்பூரில், இருந்ததைப் பற்றிய தெளிவான பதிவு உள்ளது. அங்குள்ள கிறிஸ்தவ மடாலயத்தில், பலிபீடத்தின் வலதுபுறத்தில் அப்போஸ்தலரின் கல்லறை அமைந்திருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். இது, 14 ஆம் நூற்றாண்டிலேயே முறையான ஆராதிக்கும் சபையுடன் ஒரு கிறிஸ்தவ மக்கள் அங்கு இருந்ததைக் காட்டுகிறது.
மேலும், அப்போஸ்தலரான பர்த்தொலொமேயுவின் பயணம் குறித்தும் அம்ர் இப்னு மத்தா பதிவு செய்துள்ளார். பர்த்தொலொமேயு, ஆர்மீனியா வழியாகப் பயணம் செய்து இந்தியாவுக்குச் சென்றார் என்றும், அங்கு அவர் தோலூரிக்கப்பட்டு இரத்தசாட்சியாக மரித்தார் என்றும் குறிப்பிடுகிறார். இந்த வரலாற்றுப் பதிவுகள், வாய்மொழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்த இந்திய கிறிஸ்தவ மரபுகளுக்கு ஓர் எழுத்துப்பூர்வ ஆதாரத்தை வழங்குகின்றன.
போர்த்துகீசியர் கால புனரமைப்பும் அதன் முக்கியத்துவமும்
மார்கோ போலோ (Marco Polo, 1292), ஜான் ஆஃப் மான்டிகார்வினோ (John of Montecorvino, 1291) மற்றும் நிக்கோலோ கோன்டி (Niccolò Conti, 1425-30) போன்ற இடைக்காலப் பயணிகள் இந்த இடத்திற்கு வருகை தந்து, இங்கு நடந்த அற்புத சுகமளித்தல்கள் பற்றி பதிவு செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் ஒரு சிறிய ஆலயமாக இருந்த இந்த கல்லறை, மார்கோ போலோவின் குறிப்புகளால் ஈர்க்கப்பட்ட போர்த்துகீசியர்களால் 1523ல் பெரிய ஆலயமாக புனரமைக்கப்பட்டது. இது வெறும் கட்டிடப் பணி மட்டுமல்ல, அந்த இடத்தின் ஆவிக்குரிய முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் முயற்சியாகவும் இருந்தது. பின்னர், புகழ்பெற்ற கத்தோலிக்க மிஷனரியான பிரான்சிஸ் சேவியர் (St. Francis Xavier), 1545ல் கிழக்காசிய நாடுகளுக்குத் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆலயத்தில் தங்கி ஜெபித்தார். . 1896ல் ஆங்கிலேயர்களால் இந்த ஆலயம் நியோ-கோதிக் (Neo-Gothic) பாணியில் மீண்டும் கட்டப்பட்டது.
இன்று, சாந்தோம் பேராலயம் அப்போஸ்தலரான தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கம்பீரமாக நிற்கிறது. அதன் சுரங்கப்பாதையில் அமைந்துள்ள கல்லறை அறைக்குச் சென்று, தோமாவின் பொருட்களையும், அவர் பயன்படுத்தியதாக நம்பப்படும் மரத்துண்டையும் மக்கள் இன்றும் தரிசித்து வருகின்றனர்.
அப்போஸ்தலரான பர்த்தொலொமேயுவின் பாரம்பரியம்:
அப்போஸ்தலரான தோமாவின் வரலாறு தென்னிந்தியாவில் ஆழமாகப் பதிந்திருந்தாலும், அப்போஸ்தலரான பர்த்தொலொமேயுவின் நற்செய்தி பணியும் மிகவும் முக்கியமானது. "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" (யோவான் 1:47) என்று இயேசுவால் பாராட்டப்பட்ட பர்த்தொலொமேயு, இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு நற்செய்தியைக் கொண்டு வந்ததார்.
கி.பி. 325ல், யூசிபியஸ் (Eusebius) என்ற வரலாற்று ஆசிரியர், பாண்டேனஸ் (Pantaenus) என்பவர் இந்தியாவுக்குச் சென்றபோது, அப்போஸ்தலரான பர்த்தொலொமேயு விட்டுச் சென்ற மத்தேயு நற்செய்தியின் எபிரேய மொழிப் பிரதியைக் கண்டதாகப் பதிவு செய்துள்ளார் இதைக்குறித்து முந்தய அத்தியாயங்களில் விரிவாக பார்த்தோம். 4 ஆம் நூற்றாண்டில், ஜெரோம் (St. Jerome) தனது நூலிலும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இது, இந்தியாவின் முதல் கிறிஸ்தவ சபைகள் யூத-கிறிஸ்தவ வேர்களைக் கொண்டிருந்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கோவா (Goa) மற்றும் மகாராஷ்டிராவில் (Maharashtra) உள்ள மரபுகள்:
கோவாவின் வாய்மொழி மரபுகளின்படி, பர்த்தொலொமேயு (உள்ளூர் பெயர்: பெத்தல் - Bethal) கி.பி. 55ல் இந்தியாவுக்கு வந்து, கோவா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் போதித்தார். வரலாற்று ஆய்வாளர் ஏ.சி. பெருமாள் (A.C. Perumalil) போன்றோர், அவர் இன்றைய மகாராஷ்டிராவில் உள்ள கல்யாண் (Kalyan) பகுதியைச் சுற்றியுள்ள கொங்கண் கடற்கரையில் ஊழியம் செய்ததாகவும், அங்குள்ள மன்னன் பாலிமியஸ் (Polymius) கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
விவசாயத்தோடு இணைந்த பாரம்பரியம்:
சில வாய்மொழி பாரம்பரியங்கள் பர்த்தொலொமேயுவின் பாரம்பரியம் இன்றும் கோவாவின் விவசாயப் பழக்கவழக்கங்களில் உயிர்ப்புடன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி, அப்போஸ்தலரான பர்த்தொலொமேயுவின் திருவிழா அன்று, அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை ஆசீர்வதிக்கும் வழக்கம் அங்கு பின்பற்றப்படுகிறது. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்த விவசாயம் சார்ந்த, கிறிஸ்தவ நம்பிக்கை எவ்வாறு உள்ளூர் கலாச்சாரத்தோடு தன்னை இணைத்துக்கொண்டது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கோவாவின் இந்த புகழ்பெற்ற பாரம்பரியம் "கோன்செம் ஃபெஸ்ட்" (Konsachem Fest) என்று அழைக்கப்படுகிறது. கொங்கனி மொழியில், 'Kons' என்றால் நெற்கதிர் (sheaf of corn/paddy), 'Fest' என்றால் திருவிழா. எனவே, இது "நெற்கதிர்களின் திருவிழா" என்று பொருள்படும். இந்தத் பாரம்பரியம் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது என்ற கூற்று, நேரடி எழுத்துப்பூர்வ ஆதாரங்களை விட, வாய்மொழி மற்றும் கலாச்சாரத் தொடர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதுவரலாற்று ரீதியாக, கோவாவில் ஆகஸ்ட் மாதத்தில் அறுவடைத் திருவிழா கொண்டாடும் வழக்கம் கிறிஸ்தவத்திற்கு முன்பே இருந்துள்ளது. இது இயற்கையையும், நிலத்தையும் வணங்கும் ஒரு உள்ளூர் விவசாயப் பண்டிகையாக இருந்தது.
அப்போஸ்தலரான பர்த்தொலொமேயுவின் நற்செய்தி அங்கு பரவியபோது, கிறிஸ்தவ விசுவாசம் இந்த உள்ளூர் கலாச்சாரத்தை அழித்துவிடவில்லை. மாறாக, அதைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. பழைய அறுவடைத் திருவிழா, அப்போஸ்தலரான பர்த்தொலொமேயுவின் திருவிழாவுடன் இணைக்கப்பட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. படைப்பை வணங்குவதற்குப் பதிலாக, படைத்த தேவனுக்கு நன்றி செலுத்தும் ஒரு விழாவாக இது உருமாறியது என்று நம்பப்படுகிறது. இத்தகைய பாரம்பரியங்கள் நம்பப்பட்டு வருகின்றன, இதைக் குறித்து ஆய்வு செய்து இதி இருக்கும் வரலாற்று பூர்வமான ஆதரங்களையும் அல்லது இது குறித்ததான தகவல்களையும் வருகின்ற பதிவுகளில் காண்போம்.
அப்போஸ்தலர்களான தோமா மற்றும் பர்த்தொலொமேயுவின் வரலாறுகள், தென்னிந்திய கிறிஸ்தவத்தின் ஆழமான வேர்களை நமக்குக் காட்டுகின்றன. மயிலாப்பூரில் உள்ள தோமாவின் கல்லறை ஒரு வரலாற்று ஆதாரமாக நிற்பது போல, பர்த்தொலொமேயுவின் நற்செய்தியும் மக்களின் அன்றாட விவசாயப் பழக்கவழக்கங்களில் கலந்து வாழ்கிறது. ஆனால் அன்றய காலக்கட்டத்தில் தோமா மற்றும் பர்த்தொலொமேயு இருவருமே திருத்துவத்தையும் கிறிஸ்துவின் பிரசங்கங்களையும், கிறிஸ்துவே மெய்யான தேவன் என்பதையுமே போதித்திருப்பார்கள். கிறிஸ்துவின் கட்டளைகளையும் மற்றும் உவமைகளையும் மற்றும் கர்த்தர் அவர்களுக்கு கற்றுக்கொடுத்த காரியங்களையும் போதித்திர்ப்பர்கள். வரலாற்றை ஆய்ந்துப் பார்த்தால், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை மட்டுமே ஆராதித்திருக்கின்றனர் என்பதை உணர முடிகிறது. ஆனால் பின்னர் காலப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அதுவே புனிதர்களையும் மரியாளையையும் வணங்கும் பழக்கத்திற்கு வழிவகுத்திருக்கக்கூடும். இதுபற்றிய விரிவான விளக்கங்களை நாம் வரும் அத்தியாயங்களில் காண்போம். தென்னிந்திய கிறிஸ்தவம் என்பது சமீபத்திய மிஷனரி பணிகளின் விளைவு மட்டுமல்ல, அது கிறிஸ்துவின் சீடர்களாலேயே நேரடியாக இடப்பட்ட அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டது என்பதை இந்த பாரம்பரியங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த அப்போஸ்தல பாரம்பரியம், இன்றும் இந்திய கிறிஸ்தவர்களுக்கு உத்வேகம் அளித்து, அவர்களின் விசுவாசத்தை வலுப்படுத்தி வருகிறது.
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; எபிரெயர் 12:1
தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!!!
தொடர்ந்து பயணிப்போம்....
படைத்தவரின் பாதையில்,
திருமதி. ரெமினா சுஜித்
குறிப்புகள்:
Joseph Simon Assemani, Bibliotheca Orientalis, Vol. IV. 34. Cited in A. C. Perumalli, The Apostles in India, p. 73.
Gomes, P. (2017, September 10). Tracing St Bartholomew’s footsteps to Betalbatim. The Times of India.
Rodrigues, P. (2023, December 24). A tale for Christmas: Here is why the Apostle Bartholomew is associated with agriculture in Goa. Down To Earth. - TWO RITUAL CALENDARS IN SOUTHERN GOAWikipedia contributors. (n.d.). Talk:Amr ibn Matta. Wikipedia.
