மத்தியகால கிறிஸ்தவ மிஷனரி வரலாற்றில், ஃபிரையர் ஜொர்தானஸ் (Friar Jordanus) என்பவர் இந்தியாவின் தானா (Thana) பகுதியிலிருந்து எழுதிய கடிதங்களைப் போல, ஆரம்பகால கிறிஸ்தவப் பணிகளின் சவால்களையும் வெற்றிகளையும் தெளிவாகக் காட்டும் ஆவணங்கள் மிகக் குறைவு. 1321-க்கும் 1323-க்கும் இடையில் எழுதப்பட்ட இந்தக் கடிதங்கள், நான்கு பிரான்சிஸ்கன் (Franciscan) சபைத் துறவிகளின் மரணத்தை மட்டுமல்லாமல், இந்திய மக்கள் இயேசுவின் நற்செய்தியை ஆச்சரியத்தக்க வகையில் ஏற்றுக்கொண்டதையும் பதிவுசெய்கின்றன. வர்த்தகப் பாதைகள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களின் பின்னணியில், ஜொர்தானஸின் கடிதங்கள், கிறிஸ்துவின் செய்தியைத் தொலைதூரக் கரைகளுக்குக் கொண்டுசெல்வதில் ஏற்பட்ட இழப்புகளையும், எதிர்பாராத பலன்களையும் வெளிப்படுத்துகின்றன..

மிஷனரிப் பணிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை

சுமார் 1275-1280 காலகட்டத்தில் தெற்கு பிரான்சில் உள்ள செவெராக்-லெ-சட்டோ (Sévérac-le-Château) அருகே பிறந்த ஜொர்தானஸ் கட்லானி (Jordanus Catalani), டொமினிகன் (Dominican) சபையில் சேர்ந்தபோதே, தொலைதூர தேசங்களுக்குச் சென்று கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற தாகத்துடன் இருந்தார். அவர் தனது ஆரம்பகாலப் பணியை பெர்சியாவில் (Persia) நிறைவேற்றினார். அங்கு, ஆசிய வர்த்தகத்தின் பொது மொழியாக இருந்த பெர்சிய மொழியில் தேர்ச்சி பெற்றார். இதுவே, அவரது எதிர்காலப் பணிகளில் வரவிருந்த மொழி மற்றும் கலாச்சார சவால்களை எதிர்கொள்ள அவரைத் தயார்படுத்தியது. திறம்பட ஊழியம் செய்ய உள்ளூர் மொழிகளையும் பழக்கவழக்கங்களையும் ஆழமாகப் புரிந்துகொள்வது அவசியம் என்பதை ஜொர்தானஸ் உணர்ந்திருந்தார்.

1320-1321-ல், அவர் நான்கு பிரான்சிஸ்கன் சபை நண்பர்களுடன் ஒரு பயணத்தைத் தொடங்கினார். தாமஸ் (Thomas of Tolentino), ஜேம்ஸ் (James of Padua), பீட்டர் (Peter of Siena) மற்றும் டிமெட்ரியஸ் (Demetrius of Cremona) ஆகியோருடன் அவர் மேற்கொண்ட இந்தப் பயணம், அவருடைய வாழ்க்கையையே மாற்றியமைத்தது. அவர்களின் உண்மையான இலக்கு சீனாவாக இருந்தது. ஆனால், ஒரு புயல் காற்று அவர்களுடைய கப்பலை இந்தியாவின் தானா (இன்றைய மும்பை அருகே உள்ள தானே) கடற்கரையில் ஏப்ரல் 1321-ல் தரைதட்ட வைத்தது. இந்த நிகழ்வு, இந்தியாவில் லத்தீன் கிறிஸ்தவத்தின் பாதையை முழுமையாக மாற்றியது.

இரத்தத்தால் பாய்ச்சப்பட்ட விசுவாச விதைகள்:

ஏப்ரல் 7, 1321, வியாழக்கிழமை அன்று நடந்த நிகழ்வுகள், இந்தியாவில் லத்தீன் மிஷனரிப் பணியின் தொடக்கத்தை என்றென்றும் குறித்தன. அந்த நான்கு பிரான்சிஸ்கன் சபைத் துறவிகளும், ஒரு சட்டப் பிரச்சனையின்போது முகமது நபியை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தானாவின் முஸ்லிம் ஆளுநரின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டனர்.

தானாவில் ஒரு நெஸ்டோரியன் கிறிஸ்தவரின் வீட்டில் தங்கியிருந்தனர். அந்த வீட்டு உரிமையாளருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஒரு சண்டை ஏற்பட்டது. மனைவி, கணவனைக் கட்டுப்படுத்த காதி (Qadi - இஸ்லாமிய நீதிபதி)யிடம் உதவி கேட்டாள். அப்போது, அந்த வீட்டில் தங்கியிருந்த துறவிகளும் காதி முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். விசாரணையின்போது, கிறிஸ்து மற்றும் முகமது நபியைப் பற்றி ஒரு இறையியல் விவாதம் எழுந்தது. அப்போது, துறவிகளில் ஒருவரான தோமஸ் (Thomas of Tolentino), இயேசுவே உண்மையான தேவகுமாரன் மாறும் மெய்யான கடவுள் என்றும், முகமது நபி ஒரு தவறான தீர்க்கதரிசி என்றும் தைரியமாக வாதிட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்ட காதியும், ஆளுநரும் (Governor) கோபமடைந்து, இது மாபெரும் இறை நிந்தனை (Blasphemy) என்று கூறி, அவர்களுக்கு மரண தண்டனை விதித்தனர். குற்றச்சாட்டின் பேரில் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் நகரத்திற்கு வெளியே விலங்குகளுக்கு இரையாக வீசப்பட்டன. ஆனால், ஓடோரிக்கின் குறிப்பின்படி, 14 நாட்களுக்குப் பிறகும் அவர்களின் உடல்கள் எந்த விலங்கினாலும் தீண்டப்படாமல், அழியாமல் அப்படியே இருந்தன. இந்தச் செய்தியைக் கேட்டு, ஃபிரையர் ஜொர்தானஸ், நெஸ்டோரியன் கிறிஸ்தவர்களின் உதவியுடன் இரவோடு இரவாக அந்த உடல்களை மீட்டு, சோபரா என்ற இடத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் அடக்கம் செய்தார்.

இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது, ஜொர்தானஸ் உள்ளூர் நெஸ்டோரியன் (Nestorian) கிறிஸ்தவர்களுடன் தங்கியிருந்ததால், அவர் மட்டுமே அந்த மிஷனரி குழுவில் உயிர் பிழைத்தார். ஆழ்ந்த துக்கத்துடனும், அசைக்க முடியாத உறுதியுடனும், அவர் தனது தியாகிகளான தோழர்களின் உடல்களை மீட்டு, சோபரா (Sopara, இன்றைய நாலசோபரா- மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது மும்பைக்கு அருகில் உள்ளது ) என்ற இடத்தில் அடக்கம் செய்தார்.

இரண்டு கடிதங்கள்

குஜராத்திலிருந்து முதல் கடிதம் (அக்டோபர் 12, 1321)

அக்டோபர் 12, 1321 அன்று குஜராத்தில் உள்ள கோகோ (Gogo) என்ற இடத்திலிருந்து எழுதிய தனது முதல் கடிதத்தில், ஜொர்தானஸ் பெர்சியாவில் உள்ள தனது டொமினிகன் சபை சகோதரர்களுக்கு உருக்கமான செய்தியை அனுப்பினார். அக்கடிதத்தில், இந்தியாவில் ஒரு ஏழை பயணியாக நான் தனியாக விடப்பட்டுள்ளேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று தொடங்குகிறார்

"ஆசீர்வதிக்கப்பட்ட அந்தத் இரத்த சாட்சிகளின் பாடுகளுக்குப் பிறகு உயிர்வாழ அனுமதிக்கப்பட்ட ஒருவன்" என்று தன்னை விவரித்த அவரது வார்த்தைகளில் துக்கமும் நம்பிக்கையும் கலந்திருந்தன.

இந்தியாவின் தானா நகரில், குருத்தோலை ஞாயிறுக்கு முந்தைய வியாழக்கிழமை அன்று நிகழ்ந்த அந்த மரணத்திற்கு பிறகு தனிமையில் இருந்தபோதிலும், அவரது உழைப்பின் பலன்கள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. தானாவிலிருந்து பத்து நாட்கள் பயண தூரத்தில் உள்ள பரோக்கோ (Parocco) என்ற இடத்தில் சுமார் 90 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் மனந்திரும்பியதாகவும், தானாவுக்கும் சோபராவுக்கும் இடையில் மேலும் 35 பேர் மனந்திரும்பியதாகவும் அவர் அறிவித்தார்.

எனக்கு ஒரு துணை மட்டும் இருந்திருந்தால், நான் இன்னும் சிறிது காலம் இங்கு தங்கியிருப்பேன் என்று அவர் ஏங்கினார். இறுதியாக, எதிர்காலத்தைப் பற்றிய தனது திட்டத்தைக் குறிப்பிடும்போது, "இனி வரவிருக்கும் சகோதரர்களுக்காக நான் ஒரு ஆலயத்தை ஆயத்தம் செய்வேன். என்னுடைய பொருட்களையும், தியாகிகளுடைய பொருட்களையும், நம்முடைய புத்தகங்கள் அனைத்தையும் இங்கே விட்டுச் செல்வேன் என்று எழுதுகிறார்.

தானாவிலிருந்து இரண்டாவது கடிதம் (ஜனவரி 24, 1323/4)

கி.பி. 1323, ஜனவரி மாதம் ஃபேபியன் மற்றும் செபாஸ்டியன் ( Fabian and Sebastian) திருவிழா நாளில் எழுதப்பட்ட இரண்டாவது கடிதம், லத்தீனியர்களாகிய நம்மைப் பற்றி நாமே நினைப்பதை விட, இந்திய மக்களிடையே நம் புகழ் அதிகமாக மதிக்கப்படுகிறது என்று ஜொர்தானஸ் குறிப்பிட்டார். இந்த ஆச்சரியமான கூற்று, அவரது தோழர்களின் மரணம், லத்தீன் கிறிஸ்தவர்களின் நற்பெயரை இப்பகுதியில் குறைப்பதற்குப் பதிலாக அதிகரித்தது என்பதைக் காட்டுகிறது.

மிகவும் சுவாரஸ்யமாக, "அவர்களது புத்தகங்களில் முன்னறிவிக்கப்பட்டபடி," உள்ளூர் மக்கள் லத்தீனியர்களின் வருகையை எதிர்பார்த்திருந்ததாக ஜொர்தானஸ் குறிப்பிடுகிறார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு தீர்க்கமான திட்டத்தையும் அவர் முன்வைக்கிறார். "நம் போப் இந்தப் கடற்கரையில் இரண்டு போர்க்கப்பல்களை மட்டும் நிறுத்தினால், அது எவ்வளவு பெரிய ஆதாயமாக இருக்கும்! ஓ! அது அலெக்சாந்திரியாவின் சுல்தானுக்கு எவ்வளவு பெரிய சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்தும்! ஓ! இதை யார் நம் போப்பரசரிடம் சொல்வார்கள்?" என்று அவர் கேட்கிறார். கடிதத்தின் முடிவில், அவரது தனிப்பட்ட தாழ்மையும், ஜெபத்தின் மீதான நம்பிக்கையும் வெளிப்படுகிறது. உங்கள் ஜெபங்களில் இந்த பயணியை நினைவுகூருங்கள். கிறிஸ்துவின் இந்த பயனிக்காக ஜெபியுங்கள் என்று வேண்டிக்கொள்கிறார்.

இலக்கியப் பங்களிப்பு: மிராபிலியா டெஸ்கிரிப்டா (Mirabilia Descripta)

தனது கடிதங்களைத் தவிர, ஜொர்தானஸ் சுமார் 1330-ல் "கிழக்கின் அதிசயங்கள்" (Mirabilia Descripta) என்ற நூலையும் எழுதினார். ஆசியாவின் மக்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றிய இந்த விரிவான பதிவு, பதினான்காம் நூற்றாண்டில் இந்தியாவைப் பற்றிய மிக விரிவான ஐரோப்பிய புத்தகங்களில் ஒன்றாகும். பின்னர் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல், ஒரு மிஷனரி வழிகாட்டியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களுக்கிடையேயான புரிதலுக்கான ஒரு பாலமாகவும் செயல்பட்டது.

ஃபிரையர் ஜொர்தானஸ் கட்லானியின் கடிதங்கள், பெரும் சவால்களுக்கு மத்தியிலும் விசுவாசமுள்ள சாட்சியின் வல்லமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக நிற்கின்றன. ஃபிரையர் ஜொர்தானஸ் ஒரு டொமினிகன் சபையைச் சேர்ந்த துறவியாகத் தனது பணியைத் தொடங்கினார். இது ஒரு குறிப்பிட்ட சபையில் இறைப்பணிக்காக தங்களை அர்ப்பணித்தவர்களைக் குறிக்கும். அவரது சிறப்பான மிஷனரிப் பணியைப் பாராட்டி, அன்றைய போப் இரண்டாம் ஜான் (Pope John XXII), ஃபிரையர் ஜொர்தானஸை இந்தியாவின் முதல் கத்தோலிக்க மறைமாவட்டமான கொய்லான் (Quilon - இன்றைய கொல்லம்) மறைமாவட்டத்தின் முதல் பேராயராக (Bishop) நியமித்தார்.

கிடைத்திருக்கும் வரலாற்று ஆவணங்களின்படி, ஃபிரையர் ஜொர்தானஸின் வார்த்தைகள், செயல்கள், மற்றும் அவர் சார்ந்திருந்த சபையின் நோக்கம் அனைத்துமே அவர் இயேசு கிறிஸ்துவை மட்டுமே இரட்சகராக பிரசங்கித்தார் என்பதைத் திட்டவட்டமாக நிரூபிக்கின்றன. அவரது கடிதங்களில் கிறிஸ்துவைப் பற்றிய நேரடிக் குறிப்புகள் உள்ளன, ஆனால் மரியாவை வணங்குவது மற்றும் மற்ற பரிசுத்தர்களை வணங்குவது பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1தீமோத்தேயு 2: 5

தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!!!

தொடர்ந்து பயணிப்போம்....

படைத்தவரின் பாதையில்,

திருமதி. ரெமினா சுஜித்

குறிப்புகள்:

Yule-Cordier, Cathay and the Way Thither, Vol. III pp. 76 ff.

Moffett, S. H. (1998). A History of Christianity in Asia, Vol. I: Beginnings to 1500 (pp. 141–145). Maryknoll, NY: Orbis Books.

Occisi sunt Kalendis Aprilis tres, Fr. Thomas de Tolentino, Fr. Jacobus de Padua et Fr. Demetrius Laicus: triduo post Fr. Petrus de -Senis an. Ch. 1321.