கடந்த 7 பதிவுகளில் இந்தியாவில் கிறிஸ்தவம் எவ்வாறு வந்தது,அப்போஸ்தலர் தோமா மற்றும் பர்தொலோமேயு செய்த சுவிசேஷப் பணி,பாஸ்ராவின் பிஷப் டூடி மற்றும் பாண்டேனஸின் இந்தியப் பயணம், தோமாவின் இந்தியத் தொடர்பைப் பற்றிய எப்ராயிமின் பாடல்கள், இவை அனைத்தையும் நாம் பார்த்தோம். இவர்கள் மூலமாக கர்த்தரின் வல்லமை இந்திய மண்ணில் வெளிப்பட்டதையும் நாம் உணர்ந்தோம். இன்றைய பதிவில் அதன் தொடர்ச்சியை காண்போம்.
கிரிகோரி நாசியன்சென் (Gregory Nazianzen) (கி.பி. 329-390) என்ற தேவ ஊழியர், ஆதி திருச்சபையில் 380 முதல் 381 வரை கான்ஸ்டாண்டினோபிளின் (Constantinople) பிரதம பேராயராக (Archbishop) பணியாற்றினார். அப்போஸ்தலர் தோமாவை இந்தியாவுடன் இணைத்து எழுதியுள்ளார். அவருடைய "ஏரியன்களுக்கு எதிராக" (Against Arians) ( Contra Aranos et de Seipso Oratio)என்ற புத்தகத்தில், முப்பத்து மூன்றாம் அதிகாரம், பதினோராம் பிரிவில் இந்தக் குறிப்பு உள்ளது.
அதாவது ஏரியர்களின் விசுவாசம் என்பது திருத்துவத்திற்கு எதிரான ஒன்றாகும் (Arianism - a theological doctrine that denied the divinity of Jesus Christ). ஏரியஸ் (Arius, 4ஆம் நூற்றாண்டு) என்பவர்கூறியதாவது: "இயேசு கடவுளால் படைக்கப்பட்டவர் (created being). அவர் 'உண்மையான தேவன் அல்ல, ஆனால் ஒரு உன்னதமான மனிதர். இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கும் ஒன்று, கிறிஸ்து என்பவர் மனிதனாக இவ்வுலகில் பிறந்து நமக்காக பாடுகள் பட்டு உயிர்த்தெழுந்தார் என்பதை விசுவாசியாதவர்கள். சுருக்கமாக திருத்துவத்தில் குமரன் என்ற ஒருவர் இல்லை என்பதே. இதை கிரிகோரி நாசியன்சென் (Gregory Nazianzen) முற்றிலுமாக எதிர்த்தார். இந்த காலத்திலும்யெகோவாவின் சாட்சிகள் (Jehovah’s Witnesses) போன்றோர் இதே கருத்தை பரப்புகின்றனர்.
பண்டைக் காலத்தின் சாட்சியங்கள்
மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட "தோமாவின் நடபடிகள்" (Acts of Thomas) என்ற புத்தகம், அப்போஸ்தலர் தோமாவின் இந்திய சுவிசேஷப் பணியைப் பற்றி விரிவாகச் சொல்கிறது. பல வரலாற்றுப் பதிவுகளும், வழிவழியாக வரும் செய்திகளும், கி.பி. 52-ல் தோமா கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தார் என்று கூறுகின்றன இது குறித்த முழுமையான தகவல்களை இரண்டாம் அத்தியாயத்தில் பார்த்தோம்.
இந்திய கிறிஸ்தவர்களின் பாரம்பரியம்
நீண்ட காலமாக பாரம்பரியம் கூறி வருவதன்படி, அப்போஸ்தலர் தோமா தென்னிந்தியாவில் தேவனுடைய வார்த்தையைப் போதித்து, சபைகளை நிறுவினார். அவர் நிறுவிய சபைகள் இன்றுவரை "தோமா கிறிஸ்தவர்கள்" (St. Thomas Christians) என்று அழைக்கப்படுகின்றன. வழிவழியாக வரும் செய்திகளின்படி, கி.பி. 52-ல் கேரளாவின் மலபார் கடற்கரைக்கு (Malabar Coast) தோமா வந்தார். பின்னர், கி.பி. 72-ல் இந்தியாவில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்.
அப்போஸ்தலர்களின் பணி இடங்கள்
கிரிகோரி நாசியன்சென் (Gregory Nazianzen) தனது புத்தகத்தில் இப்படியாக குறிப்பிடுகிறார்:
"பேதுருவுக்கு யூதேயா ஒதுக்கப்பட்டது போல, பவுலுக்கு புறஜாதியாருடன் (Gentiles) என்ன தொடர்பு? லூக்காவுக்கு அகாயாவுடன் (கிரேக்கத்தின் ஒரு பகுதி) என்ன தொடர்பு? அந்திரேயாவுக்கு எப்பிரஸ்சுடன் (தற்கால கிரேக்கம்-அல்பேனியா பகுதி) (Epirus) என்ன தொடர்பு? யோவானுக்கு எபேசு பட்டணத்துடன் (Ephesus) ( தற்கால துருக்கியில் உள்ள ஒரு பழைய நகரம்) என்ன தொடர்பு? தோமாவுக்கு இந்தியாவுடன் என்ன தொடர்பு? மாற்குவுக்கு இத்தாலியுடன் (Italy) (குறிப்பாக ரோம் நகரம்) என்ன தொடர்பு? மற்றவர்களுக்கு - விரிவாகச் சொல்லாமல் - அவர்கள் சென்ற இடங்களுடன் என்ன தொடர்பு?"
இந்த வார்த்தைகள் வெறும் ஒரு வரலாற்றுக் குறிப்பு மட்டும் அல்ல. மாறாக, இது தேவனுடைய அற்புதமான திட்டத்தைப் பற்றிய ஒரு ஆழமான சிந்தனை. கர்த்தர் ஒவ்வொரு அப்போஸ்தலரையும் உலகின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பினார் என்பதை இது காட்டுகிறது. மேலும் இங்கே ஒவ்வொரு அப்போஸ்தலரும் ஒரு குறிப்பிட்ட இடத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்கள். அதுபோல, பேதுரு யூதேயாவில் உள்ள பெத்துவுடன் (அவருடைய சொந்த ஊர்) எவ்வளவு நெருக்கமாக இருந்தாரோ, அவ்வளவு நெருக்கத்தை மற்ற அப்போஸ்தலர்களும் தங்கள் கர்த்தருக்காக சுவிசேஷ பணி புரிந்த இடங்களுடன் கொண்டிருந்தனர். இவை ஒவ்வொரு அப்போஸ்தலர்களும் கர்த்தரின் கட்டளையின் படி உலகமெங்கிலும் சென்று கிறிஸ்துவை பிரசங்கித்ததை பறை சாற்றுகிறது.
ஜெரோமின் (Jerome) சாட்சியம்
இதே கருத்தை ஜெரோம் (Jerome) என்பவர், மார்செல்லாவுக்கு (Marcella) எழுதிய கடிதத்திலும் இந்த பதிவை உறுதிசெய்கிறார். (Jesus dwelt in all places; with Thomas in India, with Peter in Rome, with Paul in Illyricum, with Titus in Crete with Andrew in Achaia, with each apostolic man in each and all countries.)இவர் லத்தீன் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்தார். வேதாகம அறிஞர் மற்றும் 150க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியவர்.
மார்செல்லா ஒரு ரோமானிய பெண்மணி, ஜெரோமின் உதவியாளர். இவருக்கு ஜெரோம் பல கடிதங்கள் எழுதியுள்ளார்.அப்போஸ்தலர்களின் உலகளாவிய பணியைப் பற்றி விவாதிக்கிறார். கிரிகோரி நாசியன்சென் பயன்படுத்திய அதே போன்ற வாதத்தை இவரும் முன்வைக்கிறார்
பிற பழைய சாட்சியங்கள்
சிரியாவைச் சேர்ந்த எப்பிரேம் (Ephrem the Syrian) எழுதிய பல பாடல்களிலும், தோமாவின் இந்தியப் பணியைப் பற்றிய நம்பிக்கை காணப்படுகிறது. "ஒரு வியாபாரி அவருடைய எலும்புகளை எதேசாவுக்கு (Edessa) கொண்டு வந்தார்" என்றும், "இந்தியாவில் நான் கொன்ற அப்போஸ்தலன் இவன்தான்" (சாத்தான் சொல்வது போல இந்த பாடல்வரிகள் அமைந்துள்ளது) என்று அப்போஸ்தலர் தோமாவைக் குறிப்பிடுவதாகவும் அந்தப் பாடல்களில் உள்ளது. இதற்கு முந்தய அத்தியாயத்தில் இந்த பாடலின் குறிப்புகள் முழுவதுமாக உள்ளது.
டூர்ஸைச் சேர்ந்த கிரிகோரி (Gregory of Tours) இவ்வாறு சாட்சி கூறுகிறார்: "அப்போஸ்தலர் தோமாவின் மரணத்தைப் பற்றிய குறிப்புகளின்படி, அவர் இந்தியாவில் பாடுகள் பட்டு கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சியாக மரித்தார் என்று சொல்லப்படுகிறது."
பழைய காலத்தில் வாழ்ந்த இந்த தேவ ஊழியர்களின் சாட்சிகள், அப்போஸ்தலர் தோமாவின் இந்தியப் பணி குறித்த ஆவிக்குரிய உண்மையை உறுதி செய்கின்றன. பழைய திருச்சபை எழுத்துக்கள் தொடர்ந்து தோமாவை இந்தியாவுடனும், பார்த்தியாவுடனும் (Parthia) இணைத்துக் கூறுகின்றன. அவர் இந்தியாவுக்குச் சென்றார் என்ற சாட்சியம், ஆரம்ப காலம் முதலே ஒரே விதமாகவும், தொடர்ச்சியாகவும் இருந்து வருகிறது. கர்த்தர் தம்முடைய அப்போஸ்தலர்களை உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பி, தம் பெயரை அறிவிக்கச் செய்தார். முதல் நூற்றாண்டில், ரோமப் பேரரசுக்கும் (Roman Empire) இந்திய துணைக்கண்டத்திற்கும் (Indian subcontinent) இடையே வியாபார வழிகள் நன்றாக அமைந்திருந்தன. கப்பல்கள் தொடர்ந்து கடல் வழியாகப் பயணம் செய்தன. இது அப்போஸ்தலர்கள் பயணம் செய்ய வசதியாக இருந்ததுமகிமையை அன்றைக்கு அப்போஸ்தலர்கள் . கர்த்தருடைய மகிமையும் வல்லமையும் ஜனங்களுக்கு போதித்தார்கள். அவர்களுடைய வாழ்வில் இருந்து நாம் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும். வேதத்தில் இவ்வாறாக ஒரு வசனம் உள்ளது:
"ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய ஆச்சரியமான செயல்களையும் விவரித்துச் சொல்லுங்கள்”. சங்கீதம் 96:3
தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!!!
தொடர்ந்து பயணிப்போம்....
படைத்தவரின் பாதையில்,
திருமதி. ரெமினா சுஜித்
குறிப்புகள்:
- Gregory Nazianzen, Against Arians, XXXIII, Para XI. Nicene and Post-Nicene Fathers, Vol.VII, p.332
- Jerome's letter to Marcella, No.LIX, 395/396. Nicene and Post-Nicene Fathers, Vol.VI, p.123
