இந்தியாவில் கிறிஸ்தவம் எப்போது, எப்படி வந்தது என்பது குறித்துப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். "இது அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்தே உள்ளது" எனக் கூறும்போது, "அது பிற்கால மிஷனரிகள் உருவாக்கிய கட்டுக்கதை" எனச் சிலர் மறுக்கின்றனர். ஆனால், வரலாற்று ஆதாரங்கள் வேறுபட்ட ஒரு சித்திரத்தை அளிக்கின்றன.
கிறிஸ்தவத்தின் முதல் நூற்றாண்டுகளிலேயே இந்தியாவில் அதன் பிரசன்னம் இருந்தது என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது, ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் கிரிகோரி ஆஃப் டூர்ஸ் (Gregory of Tours) என்பவரின் பதிவு. அப்போஸ்தலர் தோமா இந்தியாவில் ஊழியம் செய்து, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார் என்பதை அவர் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார். இந்த வரலாற்றுப் பதிவு, கர்த்தராகிய இயேசுவின் கட்டளையான "பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" (அப்போஸ்தலர் 1:8) என்ற வார்த்தையின் நேரடி நிறைவேற்றமாக விளங்குகிறது.
ஆறாம் நூற்றாண்டின் சாட்சியம்: கிரிகோரி ஆஃப் டூர்ஸ் (Gregory of Tours) பதிவு
கிரிகோரி ஆஃப் டூர்ஸ் (Gregory of Tours, கி.பி. 538–594) என்பவர், ஆரம்ப காலத்தின் (Early Middle Ages) மிக முக்கியமான வரலாற்றாசிரியர்களில் ஒருவர். பிரான்ஸ் (France) நாட்டின் டூர்ஸ் (Tours) பகுதியின் பேராயராக (Bishop) பணியாற்றிய இவர், தனது காலத்தின் நிகழ்வுகளை மிகுந்த கவனத்துடன் பதிவு செய்தார். வதந்திகளையோ புராணக்கதைகளையோ எழுதாமல், நம்பகமான சான்றுகளின் அடிப்படையில் எழுதியதால், இவர் ஒரு நம்பகமான வரலாற்றுச் சாட்சியாகக் கருதப்படுகிறார். இவரது "மிராகுலோரம் லிபர்" (Miraculorum Liber - அதிசயங்களின் புத்தகம்) என்ற நூலில், அப்போஸ்தலர் தோமாவைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"அவருடைய (தோமாவின்) மீபொருட்கள் (Relics) நீண்ட காலத்திற்குப் பிறகு சிரியாவில் (Syria) உள்ள எடேசா (Edessa) நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே அடக்கம் செய்யப்பட்டன."
இந்தத் தகவலை, இந்தியாவிலுள்ள தோமாவின் கல்லறைக்கு நேரில் சென்று பார்வையிட்ட தியோடர் (Theodore) என்ற பயணி தமக்குத் தெரிவித்ததாக கிரிகோரி (Gregory) குறிப்பிடுகிறார். பிரான்சில் வாழ்ந்த ஒரு மதிப்புமிக்க வரலாற்றாசிரியர், இந்தியாவிலுள்ள அப்போஸ்தலர் தோமாவின் கல்லறை குறித்து, நேரில் கண்ட சாட்சியின் அடிப்படையில் எழுதியிருப்பது, இது உள்ளூர் கட்டுக்கதை அல்ல, மாறாக அக்காலத்தில் எல்லாராலும் அறியப்பட்ட ஒரு வரலாற்று உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது.
தியோடர் (Theodore) என்பவரின் பயணம்
தோமா அவரை நோக்கி ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். (யோவான் 14:5) இந்த கேள்வியை இயேசுவிடம் கேட்ட தோமா ஆனால் பிற்காலத்தில், கிறிஸ்துவே வழியும் உண்மையும் ஜீவனுமாக இருப்பதை நேரடியாக அனுபவித்து, அதே வழியை இந்தியாவின் மண்ணில் வாழும் மக்களுக்குக் காட்டினார். தன் இரத்தசாட்சி மரணத்தின் மூலம் அவர் செய்த சாட்சிப் பணி, கிறிஸ்துவின் மெய்யான வழியை இந்தியர்களுக்குக் காண்பித்த ஆவிக்குரிய பயணமாக அமைந்தது.கிரிகோரியின் (Gregory) பதிவிற்கு அங்கீகாரமாக அமைந்தது தியோடர் (Theodore) என்ற பயணியின் நேரடிச் சாட்சியம். ஆரம்பகாலக் கிறிஸ்தவத்தில், அப்போஸ்தலர்களுடன் தொடர்புடைய இடங்களுக்கு பயணம் செய்வது ஒரு முக்கியமான ஆவிக்குரிய பயணமாகக் கருதப்பட்டது. அக்காலத்தில் பயணங்கள் கடினமானதாகவும் ஆபத்துகள் நிறைந்ததாகவும் இருந்தன. அப்படியிருந்தும், தியோடர் (Theodore) போன்ற ஒருவர் வெகு தொலைவிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்து தோமாவின் கல்லறையைப் பார்வையிட்டது, அந்த இடம் உலகளாவிய கிறிஸ்தவர்களால் அறியப்பட்டிருந்தது என்பதையும், அதற்கு சர்வதேச அங்கீகாரம் இருந்தது என்பதையும் காட்டுகிறது.
தியோடரின் (Theodore) சாட்சியம் ஒரு கண்கண்ட சாட்சியம் ஆகும். அவர் அந்த இடத்திற்குச் சென்று, அங்கே இருந்த மடாலயத்தையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார். இது, பிற்காலத்தில் காணப்படும் தெளிவற்ற குறிப்புகளைப் போலல்லாமல், சரிபார்க்கக்கூடிய, திட்டவட்டமான விவரங்களை அளிக்கிறது.
இந்தியாவிலிருந்து சிரியாவிற்கு: அப்போஸ்தலர் தோமாவின் மீபொருட்களின் பயணம்
அப்போஸ்தலர் தோமாவின் எலும்புகள் இந்தியாவிலிருந்து சிரியாவில் (Syria) உள்ள எடேசா (Edessa) நகருக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கிரிகோரி (Gregory) குறிப்பிடுகிறார். அப்போஸ்தலர்களின் நினைவுப் பொருட்களை இடம் மாற்றுவது (Translation of Relics) என்பது ஆரம்பகாலத் திருச்சபையில் ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது. ஆனால், அது எளிதாகச் செய்யப்படும் காரியமல்ல. அதற்குத் திருச்சபையின் உயர் மட்ட அங்கீகாரமும், அந்த நபரின் உண்மையான அடக்க ஸ்தலம் குறித்த மறுக்கமுடியாத பாரம்பரியமும் தேவை.
இன்றைய துருக்கியில் (Turkey) அமைந்துள்ள எடேசா (Edessa), ஆரம்பகால கிறிஸ்தவத்தின் ஒரு முக்கிய மையமாக விளங்கியது. தோமாவின் எலும்புகள் அந்த முக்கிய நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அவரது இந்தியப் பணிக்குக் கிடைத்த மற்றுமொரு வலுவான சான்றாகும். தோமா இந்தியாவில் ஊழியம் செய்யாமலோ அல்லது அடக்கம் செய்யப்படாமலோ இருந்திருந்தால், "இந்தியாவிலிருந்து" அவரது எலும்புகள் கொண்டுவரப்பட்டதாக ஒரு வரலாற்றுப் பதிவு இருந்திருக்காது.
நம்பிக்கையின் நினைவுச்சின்னம்
கிரிகோரியின் (Gregory) பதிவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு அம்சம், இந்தியாவில் இருந்த அந்த மடாலயம் அற்புதமான அளவில் (Striking Dimensions) இருந்தது என்ற குறிப்பாகும். இந்த கட்டிடக்கலைச் சான்று, ஆரம்பகால இந்தியக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை பற்றிய ஆழமான பார்வையை வழங்குகிறது.
அற்புதமான அளவில் ஒரு மடாலயத்தைக் கட்டுவதற்கு, வளங்கள், அமைப்புரீதியான திறன்கள் மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான விசுவாசிகளைக் கொண்ட ஒரு சமூகம் தேவை. ஆரம்பகால இந்தியக் கிறிஸ்தவம் என்பது ஒரு சிறிய, ஒடுக்கப்பட்ட குழுவாக இருந்தது என்ற பொதுவான கருத்திற்கு இந்தச் சான்று சவால் விடுகிறது. மாறாக, சர்வதேசப் பார்வையாளர்களைக் கவரும் அளவிற்கு ஒரு பெரிய ஆலயத்தை எழுப்பும் திறன் கொண்ட, நன்கு நிறுவப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமூகம் அங்கு இருந்தது என்பதை இது நிரூபிக்கிறது. இது அப்போஸ்தலர் தோமாவின் இந்தியப் பணி, தனிநபர்களை மாற்றுவதோடு நின்றுவிடாமல், செழித்து வளரும் திருச்சபைகளை நிறுவியது என்பதற்கான ஒரு சான்றாகும்.
ஆறாம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் கிரிகோரி ஆஃப் டூர்ஸ் (Gregory of Tours), தியோடரின் (Theodore) நேரடிச் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கிய பதிவு, அப்போஸ்தலர் தோமாவின் இந்தியப் பணிக்கான மறுக்கமுடியாத ஒரு வரலாற்று ஆதாரமாக விளங்குகிறது. இது இந்தியக் கிறிஸ்தவத்தின் அப்போஸ்தலிக அடித்தளத்தை உறுதி செய்வதுடன், தோமாவின் இந்திய மிஷன் என்பது பிற்காலப் புனைவு என்ற வாதத்தையும் வலுவிழக்கச் செய்கிறது.
இந்த வரலாற்றுச் சான்றை நாம் சிந்திக்கும்போது, இயேசு தோமாவிடம் கூறிய வார்த்தைகள் நமக்கு நினைவூட்டப்படுகின்றன: "நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாமலிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்" (யோவான் 20:29). தோமாவிடமிருந்து நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட இந்தியக் கிறிஸ்தவர்களும், பல நூற்றாண்டுகளாக அந்த விசுவாசத்தைக் காத்துக்கொண்ட எண்ணற்ற தலைமுறையினரும், இந்த கர்த்தருடைய வார்த்தையின் நிறைவேற்றமாகத் திகழ்கின்றனர். அவர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைத் தங்கள் கண்களால் கண்டதால் விசுவாசிக்கவில்லை, மாறாக, அப்போஸ்தலரின் சாட்சியத்தைப் பெற்றுக்கொண்டு, அதன் வல்லமையால் மாற்றப்பட்டதால் விசுவாசித்தார்கள்.
தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!!!
தொடர்ந்து பயணிப்போம்....
படைத்தவரின் பாதையில்,
திருமதி. ரெமினா சுஜித்
குறிப்புகள்:
Gregory of Tours, Miraculorum Liber, 1.32, Patrologia Latina, 71.733. Gregory received this information from a pilgrim named Theodore, who had visited the tomb of St. Thomas in India. (Cited in A.C. Perumalil, The Apostles in India, p.75).
