வரலாற்றில் திருநெல்வேலி

“வளர்ந்து பெருகுக” என்று இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கும் நமது திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு இனிமையானதும் பல்வேறு சுவாரசியங்களையும், தியாகங்களையும் உள்ளடக்கியதாகும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறைக் காண்பதற்கு முன் அது வேர் பற்றி இருக்கும் திருநெல்வேலி மண்ணின் வரலாற்றை சுருக்கமாக காண்போம்.

[பேராயர் எப்.ஜே வெஸ்டர்ன் (Rt.Rev. F.J Western) அவர்களின் குறிப்புகளில் இருந்து திருநெல்வேலியின் வரலாறு]

தென்னிந்தியாவின் தென் கோடியின் கிழக்குப் பகுதியில், மக்களும் பாரம்பரியமும் மிளிரும் திருநெல்வேலி (Tinnevelly) மாவட்டம் அமைந்துள்ளது. இதன் மேற்கே திருவாங்கூர் (Travancore) மாவட்டம் உள்ளது. இவற்றிற்கிடையே அழகான காடுகள் மற்றும் நீர்நிலைகள் வளம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகள் (Western Ghauts) கன்னியாகுமரி வரை நீண்டுள்ளன. திருநெல்வேலியின் நீளம் சுமார் 120 மைல்கள். அகலம் கன்னியாகுமரியில் இருந்து மதுரை எல்லை வரை 75 மைல்கள் வரை அதிகரிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்திலிருந்து கிழக்கே கடல் வரை நிலப்பரப்பு மெதுவாக சரிந்து செல்கிறது. மாவட்டத்தின் நடுவே அழகான இயற்கை மயங்கும் தாமிரபரணி நதி பாய்கிறது. நதியின் இருபுறமும் ஒரு மைல் தூரம் வளமான வண்டல் மண் நிலம் உள்ளது. இங்கு நெல் பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யப்படுகிறது. பச்சை நெல் பயிர்கள் இந்தியாவின் மிகப் பிரகாசமான நிறங்களில் ஒன்றாகும்.

திருநெல்வேலியின் தெற்குப் பகுதியில் கடற்கரைக்கு அருகே அகன்ற மணற்பாங்கான பகுதி உள்ளது. இது பெரும்பாலும் சிவப்பு நிற மணலால் ஆனது. இவை தேரி (téris) என்று அழைக்கப்படும் பெரிய மணல் மேடுகளாக உள்ளன. தென்மேற்கு பருவக்காற்றின் கடுமையான காற்று மலையடிவாரத்தில் உள்ள வறண்ட சிவப்பு களிமண் நிலத்திலிருந்து தூசியை கிளப்பி கடற்கரைக்கு அருகே கொண்டு வந்து குவிப்பதால் இந்த மணல் மேடுகள் உருவாகின்றன. நீர் மற்றும் உரம் கிடைக்கும்போது இந்த சிவப்பு மணல் விரைவில் கருமையான வளமான மண்ணாக மாறுகிறது.

தேரி பகுதியின் சிறப்பு என்னவென்றால் அது பனை மரங்கள் அதிகம் காணப்படும் ஒரு சோலை வனமாகும். இவற்றின் வேர்கள் 40 அடி ஆழம் வரை சென்று தனக்கு தேவையான ஊட்டச்சத்தை உறிஞ்சுகின்றன. இப்பகுதி பனை வனம் என்றே அழைக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதிகள் பெரும்பாலும் காடுகளாகவும் புதர்களாகவும் இருந்தன. தற்போதைய காலக் கட்டத்தில் பனை மரங்கள் வெட்டப்பட்டு திறந்த வெளிகளாக மாறியுள்ளன. இங்கு பருத்தி பயிரிடப்படுகிறது. சில பகுதிகள் பாறைகளாகவும் தரிசு நிலங்களாகவும் உள்ளன. மலைப்பகுதிகளில் இன்னும் காடுகள் உள்ளன. அங்கு புலிகளும் காட்டு விலங்குகளும் வாழ்கின்றன. சில நேரங்களில் அவை சமவெளிப் பகுதிகளுக்கும் வருகின்றன.

திருநெல்வேலி நிலநடுக்கோட்டிற்கு 8-10 டிகிரி வடக்கே உள்ளது. கடலுக்கு அருகில் இருப்பதால் வெப்பநிலை 75° முதல் 95° ஃபாரன்ஹீட் வரை இருக்கும். இங்கு மழைப்பொழிவு குறைவு மற்றும் காற்றில் ஈரப்பதம் சற்று அதிகரித்துக் காணப்படும் ஆனால் மத்திய, தெற்கு இலங்கை அல்லது இந்தியாவின் மேற்குக் கடற்கரையைப் போல அதிக ஈரப்பதம் இருக்காது. இந்தியாவின் உள்நாட்டுப் பகுதிகளைப் போல மிகவும் வறண்டதாகவும் இருக்காது.

இத்தகைய சிறப்பம்சங்கள் நிறைந்த வளமிக்க திருநெல்வேலியின் வரலாற்றை சுருக்கமாக காணலாம். கி.மு. 600 முதல் கி.பி. 1500 வரை பாண்டிய, சோழ அரசர்கள் ஆட்சி செய்தனர். கொற்கை (Korkai) என்ற இடம் முத்து வர்த்தகத்தின் முக்கிய துறைமுகமாக இருந்தது. கிரேக்கர்கள் இதனை கொல்கோய் (Kolkhoi) என்று அழைத்தனர். அதற்கு பின்னரே காயல் (Kayal) துறைமுகம் முக்கியத்துவம் பெற்றது. 1292ல் மார்கோ போலோவும் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

16, 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் மதுரை நாயக்கர் வம்சத்தினர் திருநெல்வேலியை ஆட்சி செய்தனர். அவர்களின் கீழ் பல நிலப்பிரபுக்கள் இருந்தனர். இவர்கள் பாளையக்காரர்கள் (Poligars) என்று அழைக்கப்பட்டனர். 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திருநெல்வேலியில் 32 பாளையக்காரர்களும், மதுரையில் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலும் இருந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் கோட்டைகளில் தங்கி தங்களுக்கு என்று தனிப் படைகளை வைத்து இருந்தனர்.

1751ல் கிழக்கிந்திய கம்பெனி நவாப்புக்கு உதவி செய்யத் தொடங்கியது. பாளைக்காரர்களை கட்டுப்படுத்த பல போர்கள் நடத்தப்பட்டன. 1783 மற்றும் 1799ல் நடந்த இரண்டு பெரிய போர்கள் கட்டபொம்மன் (Kattabomman) மீது நடத்தப்பட்டன. அவரது பாஞ்சாலங்குறிச்சி (Pinjalamkurichi) கோட்டை மிகவும் வலிமையானது. 1801ல் கர்நாடக பகுதி முழுவதும் கிழக்கிந்திய கம்பெனிக்கு உரிமையானது. இதன் பிறகு ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கியது.

திருநெல்வேலி பகுதியில் பல ஜாதிகள் உள்ளன. அவற்றில் மூன்று முக்கியமானவை:

1. வெள்ளாளர் (Vellalas) - இவர்கள் பெரும் விவசாயிகள். ஆச்சாரங்களில், சமூக படிநிலையில் பிராமணர்களுக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுபட்டர்கள்.

2. மறவர் (Maravas) - பாளையக்காரர்களின் படைவீரர்களாக இருந்தவர்கள். தற்போது விவசாயிகளாக உள்ளனர். இராமநாதபுரம் (Ramnad) பகுதி 'மறவர் நாடு' என்று அழைக்கப்பட்டது.

3. நாடார் (Nadars) - முன்பு சாணார் (Shanars) என்று அழைக்கப்பட்டனர். பனை மரம் ஏறுவதே இவர்களின் தொழில். சாதி அமைப்பில் கீழ் நிலையில் உள்ளவர்கள். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர்களில் பலர் கிறிஸ்தவத்திற்கு மாறினர்.

அன்றையக் காலக்கட்டத்தில், பனை மரம் முக்கிய பணப்பயிராக இருந்தது. மக்கள் பனை மரத்தின் “பாளை” வெட்டி பதநீர் எடுத்துக் கொண்டு, அதிலிருந்து சர்க்கரை மற்றும் கள் போன்றவற்றை தயாரித்தனர். மேலும், அவற்றின் ஓலைகளை வைத்து கூரை வேய்ந்தனர், பாய், கூடை பின்னினர், மற்றும் பனை மரத்தை வீட்டு தூண்களாகவும், பலகைகளாகவும் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த நூற்றாண்டில் பல ஜாதியினர் தங்கள் பாரம்பரிய தொழிலை விட்டு வேறு தொழில்களுக்கு மாறினர். குறிப்பாக நாடார்கள் பலர் வியாபாரம், ஆசிரியர் பணி போன்ற தொழில்களுக்கு மாறினர்.

சாதி அமைப்பிற்கு வெளியே “தீண்டத்தகாதவர்கள்” என்று அழைக்கப்பட்ட மக்கள் இருந்தனர். இவர்களை தொடுவதும், பார்ப்பதும் கூட பிராமணர்களுக்கு தீட்டாக கருதப்பட்டது. இவர்களில் பள்ளர், பறையர் (Parayas) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். "பறையர்" என்ற சொல்லிலிருந்துதான் ஆங்கிலத்தில் "pariah" என்ற வார்த்தை வந்தது.

ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்தில் ஒரு சாதாரணமாக கிராமமாக இருந்த திருநெல்வேலி (தற்போதைய நகரம்) அக்காலத்தில் எப்படி இருந்தது என்பதை கற்பனை செய்து பார்க்கலாம்:

  • 70 குடும்பங்கள் நிலக்கிழார்கள் ( பிராமணர்கள் அல்லது சூத்திரர்கள்).
  • 83 குடும்பங்கள் - விவசாய வேலை செய்பவர்கள்.
  • 140 குடும்பங்கள் - கைவினைஞர்கள், முடி திருத்துபவர்கள், துணி துவைப்பவர்கள் போன்றோர்.
  • பெரிய சிவன், விஷ்ணு கோவில்கள் - நிலக்கிழார்களுக்காக இருந்தன
  • சிறு தெய்வ கோவில்கள், தெய்வங்களாக மாற்றப்பட்ட மரங்கள் - கீழ் ஜாதியினருக்காக இருந்தன

நிலக்கிழார்கள் கிராமத்தில் தொழில் செய்யும் தொழிலாளிகளைக் கட்டுப்படுத்தினர். தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு முடி திருத்துதல், துணி துவைத்தல் போன்ற சேவைகளை அவர்கள் மறுத்தனர்.

திருநெல்வேலி நகரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இது மாவட்டத்தின் பழைய தலைநகரம். இதற்கு இரண்டு மைல் தூரத்தில் உள்ள பாளையங்கோட்டை (Palamcottah) புதிய தலைநகரமாக உருவானது. பாளையங்கோட்டை என்ற பெயரே "முகாம்-கோட்டை" என்ற பொருளைக் குறிக்கிறது. இது திருநெல்வேலியைப் பாதுகாக்க கட்டப்பட்ட கோட்டையாகும். 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இது முக்கியமான கோட்டையாக இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரம்மாண்டமான இந்து கோவில் தென்னிந்திய இந்து மதத்தின் சாராம்சமாக கருதப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற முக்கிய நகரங்கள்:

1. ஸ்ரீவில்லிபுத்தூர் (Srivilliputhar) - வடமேற்குப் பகுதியில் உள்ளது

2. கோவில்பட்டி (Koilpatti) - திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குச் செல்லும் சாலையில் உள்ளது

3. ஸ்ரீவைகுண்டம் (Srivaigundam) - தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது

4. தூத்துக்குடி (Tuticorin) - கடற்கரை துறைமுகப் பட்டினம்

திருநெல்வேலியின் பொருளாதாரம் விவசாயத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. இங்கு நெல் சாகுபடி முக்கிய இடம் பெறுகிறது, ஏனெனில் தாமிரபரணி நதிக்கரையோரம் வளமான வண்டல் மண் நிலம் காணப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யும் வசதியுடன், விவசாயிகள் அதிக வருவாயை பெற்றுக்கொள்கின்றனர். மேலும், பருத்தி சாகுபடி பரவலாக பயிரிடப்படுகிறது, இது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. பனை மரம், அதன் பல பொருளாதார பயன்களால், வர்த்தகத்தை மேம்படுத்துகிறது. கடற்கரைப் பகுதியில், முத்து வர்த்தகம் முக்கியத்துவம் கொண்டது, இது திருநெல்வேலியின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இத்தகைய பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட மற்றும் காலப்போக்கில் பல மாற்றங்களையும் சந்தித்து வரும் இந்த திருநெல்வேலியில் கிறிஸ்தவம் எவ்வாறு வேருன்றியது என்பதை இனிவரும் தொடர்களில் விரிவாக காண்போம்…

தொடர்ந்து பயணிப்போம்….

பராபரனின் பாதையில்,

ரெமினா சுஜித்