முந்தைய பகுதியில் குருவானவர் ஜேம்ஸ் ஹஃப் (Rev. James Hough) திருநெல்வேலியில் ஏற்படுத்திய கல்வி நிறுவனங்களையும் அதன் வளர்ச்சியையும் கண்டோம். அவர் திருநெல்வேலி திருச்சபையை ஆவிக்குரிய ரீதியில் மட்டுமல்லாமல், நிர்வாக ரீதியாகவும், நிதி ரீதியாகவும் எவ்வாறு ஒரு வலுவான கட்டமைப்பிற்குள் கொண்டுவந்தார் என்பதையும், அவரது கண்ணீர் நிறைந்த பிரியாவிடையையும் இந்தப் பகுதியில் காண்போம்.

மிஷனின் சொத்துக்களும் வரவு-செலவுக் கணக்குகளும் :

அவரது 1821 ம் ஆண்டு அறிக்கையில் உள்ள குறிப்புகள்:1821-ஆம் ஆண்டு S.P.C.K. (Society for Promoting Christian Knowledge) கமிட்டிக்கு குருவானவர் ஹஃப் சமர்ப்பித்த விரிவான அறிக்கையில், மிஷனின் சொத்துக்கள் மற்றும் நிதி நிலைமை குறித்த துல்லியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

பாளையங்கோட்டை கோட்டைக்குள் மிஷனரிகள் தங்குவதற்கு ஏற்ற ஒரு நல்ல வீடும், அதன் அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பு குளோரிந்தாள் அம்மையாரால் கட்டப்பட்ட சிறிய தேவாலயமும் இருந்தது. ஆனால், இந்த ஆலயம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால், பாளையங்கோட்டையில் உள்ள சபையார் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் மட்டுமே இதைப் பயன்படுத்தி வந்தனர். இதுதவிர, ஆழ்வார்திருநகரியிலும் மிஷனுக்குச் சொந்தமான சில கட்டடங்கள் இருந்தன.

திருநெல்வேலி மிஷனின் பெரும்பாலான செலவுகள், மறைந்த மிஷனரி 'ஸ்வார்ட்ஸ் ஐயரின் நிதியிலிருந்து' (Swartz's fund) பெறப்படும் வட்டியைக் கொண்டே ஈடுகட்டப்பட்டன. உபதேசியர்களின் சம்பளம் மற்றும் நாட்டுப்புறக் குருவானவர்களின் பயணப் படிகள் என மிஷனின் மாதாந்திரச் செலவு சுமார் 35 ஸ்டார் பகோடாக்கள் (Star Pagodas) ஆக இருந்தது. நாட்டுப்புறக் குருவானவர் ஆபிரகாமுக்கு S.P.C.K. சங்கம் மாதந்தோறும் 7 ஸ்டார் பகோடாக்களை ஊதியமாக வழங்கி வந்தது.

17 நில ஆவணங்களின் கணக்கெடுப்பு:இந்தக் காலகட்டத்தில், மெட்ராஸ் அரசாங்கம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, S.P.C.K. சங்கத்திற்குச் சொந்தமான நிலங்களின் விவரங்களை உறுதி செய்யும்படி உத்தரவிட்டது. ஆட்சியரின் ஆய்வில், அக்டோபர் 1791 முதல் அக்டோபர் 1810 வரை மிஷனரிகள் ஜேனிக்கே, ரிங்கல்தௌபே, கோல்ஹாஃப், ஹோர்ஸ்ட், குருவானவர் சத்தியநாதன் மற்றும் திரு. சாயர் ஆகியோரால் வாங்கப்பட்ட 17 நிலங்களுக்கான ஆவணங்கள் (Deeds of 17 plots) முறையாகப் பதிவு செய்யப்பட்டு மிஷனின் வசம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

பள்ளிகளுக்கான நிதியுதவியும் நிர்வாக மாற்றங்களும்:பள்ளிகளின் மோசமான நிலையைக் கண்ட குருவானவர் ஹஃப் , அவற்றைச் சீரமைக்க S.P.C.K. கமிட்டியிடம் நிதியுதவி கோரினார். கல்கத்தா பிஷப்பின் ஒப்புதலுடன், 1820 மே 1-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்காக மாதந்தோறும் 40 ரூபாய் ஹஃப் ஐயரின் வசம் S.P.C.K. கமிட்டியால் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு, அதுவரை C.M.S. (Church Missionary Society) ஆதரவில் இயங்கிவந்த 7 பள்ளிகளை S.P.C.K.-யின் மெட்ராஸ் மாவட்ட கமிட்டியின் கணக்கிற்கு குருவானவர் ஹஃப் மாற்றினார். கமிட்டி அளித்த 40 ரூபாயில், மாதந்தோறும் சுமார் 30¼ ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. மீதமுள்ள தொகையைக் கொண்டு நாசரேத் மற்றும் முதலூரில் பள்ளிக் கட்டடங்களைக் கட்ட அவர் திட்டமிட்டார்.

ஆராதனை முறைகளில் மாற்றம் (Liturgy):அதுவரை சபைகளில் ஜெர்மன் மொழி வழியிலான ஆராதனை முறைகளே பின்பற்றப்பட்டு வந்தன. இதை மாற்றி, ஆங்கிலத் திருச்சபையின் 'பொதுவான ஜெபப் புத்தகத்தை' (Book of Common Prayer / English Liturgy) தமிழில் அறிமுகப்படுத்த குருவானவர் ஹஃப் முடிவு செய்தார். அதற்காக S.P.C.K. கமிட்டியிடம் அவர் கோரிக்கை வைக்க, அவர்கள் உடனடியாக 25 புத்தகங்களை அனுப்பி வைத்தனர். இது திருநெல்வேலி சபைகளின் ஆராதனை முறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

காலரா நோய்த்தொற்றும் ஹஃப் ஐயரின் மருத்துவ உதவியும் (1819):1819 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நாசரேத், முதலூர் போன்ற பகுதிகளில் 'காலரா' நோய் மிகக் கொடூரமாகப் பரவத் தொடங்கியது. அந்தப் பகுதியில் முதன்முதலாகத் தோன்றிய இந்த நோயைக் கண்ட மக்கள் மிகுந்த பயமடைந்தனர். புறமதத்தவர்கள், "கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் தெய்வங்களை விட்டுவிட்டதால்தான் இந்தச் சாபம் வந்துள்ளது" என்று கூறி, பழையபடி அவர்களுடைய தெய்வங்களுக்கு பலியிடத் தொடங்கினார்கள்.

இந்தச் சோதனையான நேரத்தில், குருவானவர் ஹஃப் அந்த மக்களுக்கு ஒரு மருத்துவராகவும் மாறினார். எப்படி தெரியுமா? அவருக்கு மருத்துவம் பார்க்க தெரியாதுதான்… ஆனால் அவருக்கு பரலோக மருத்துவரையும், உலகத்தில் உள்ள மருத்துவரையும் தெரியுமே!!!!!!பரலோகத்தின் தேவனிடம் ஜெபித்து விட்டு, அவர் மாவட்ட மருத்துவரிடம் (Zillah Surgeon) இருந்து இந்த நோய்க்கான ஏராளமான மருந்துகளைப் பெற்று, உபதேசியர்கள் மூலமாக மக்களுக்கு வழங்கினார். இந்த உடனடி மருத்துவ உதவியால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன (பத்தில் ஒன்பது நோயாளிகள் பிழைத்துக்கொண்டனர்). மரணத்தின் விளிம்பிலிருந்த பல விசுவாசிகள் சுகமடைந்ததைக் கண்ட மக்கள், இது கர்த்தருடைய கிருபை என்பதை உணர்ந்து மிஷனரிகள் மீது அதிக நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர்.

மொழிபெயர்ப்புப் பணிகளும் அயராத உழைப்பும்பள்ளிகளையும் சபைகளையும் நிர்வகித்ததோடு குருவானவர் ஹஃப் நின்றுவிடவில்லை. நாம் வாசிப்பதையும் விளக்குவதையும் மட்டும் திருநெல்வேலி மக்கள் கேட்டால் போதுமா? அவர்கள் தங்கள் சொந்த மொழியில் சுவிசேஷத்தை, வேதாகமத்தை வாசிக்க வேண்டும் என்பதற்காக மொழிபெயர்ப்புப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்தார். புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கும் மாபெரும் பணியைத் தொடங்கினார். அதுமட்டுமின்றி, தமிழ் அகராதி (Tamil Dictionary) ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அவர் எந்தளவுக்கு உழைத்தார் தெரியுமா? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தனது தமிழ் ஆசிரியரோடு இணைந்து மொழிபெயர்ப்புப் பணிகளில் மூழ்கியிருந்தார். இதற்கிடையே இரண்டு பள்ளிகளைப் பராமரிப்பது, ஆலய ஆராதனைகள், பிரசங்கம் எனத் தன் உடலையும் உயிரையும் கர்த்தருக்காய் உருக்கினார். மிஷனரிகளுக்கும், கமிட்டிகளுக்கும் வழிகாட்டும் விதமாக "The Missionary Vade Mecum" என்ற ஒரு சிறந்த கையேட்டையும், தானியேல் புத்தகத்தின் விளக்கவுரையையும் அவர் எழுதினார்.

ரேனியஸ் ஐயரின் வருகை (1820)தன் உடல்நிலை மிக மோசமாகி வருவதையும், திருநெல்வேலிக்கு ஒரு நிரந்தர ஐரோப்பிய மிஷனரி தேவை என்பதையும் உணர்ந்த குருவானவர் ஹஃப் , மெட்ராஸில் உள்ள C.M.S. கமிட்டிக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். திருநெல்வேலி S.P.C.K. அமைப்பின் களமாக இருந்தபோதும், அங்கு C.M.S. அமைப்பு நுழைந்தது எவ்விதப் போட்டி மனப்பான்மையினாலோ அல்ல; மாறாக, ஊழியர்களின் பற்றாக்குறையால் தவித்த S.P.C.K.-க்கு உதவி செய்வதற்காகவே ஆகும்.

ஹஃப் ஐயரின் ஜெபத்திற்கும் கண்ணீருக்கும் பலனாக, கர்த்தர் ஒரு மாபெரும் தேவ மனிதரைத் திருநெல்வேலிக்கு ஆயத்தம் செய்து அனுப்பினார். அவர்தான் அருள்திரு. C.T.E. ரேனியஸ் (Rev. Charles Theophilus Ewald Rhenius). ரேனியஸ் ஐயர் மற்றும் அவரது சக ஊழியரான பெர்னார்ட் ஷ்மிட் (Rev. Bernard Schmid) ஆகியோர் 1820 ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி பாளையங்கோட்டையை வந்தடைந்தனர். ரேனியஸ் ஐயரின் வருகையைக் கண்ட ஹஃப், "கர்த்தருக்கே துதி உண்டாவதாக! மிஷனரிகள் வந்துவிட்டார்கள். இனி இந்தத் திருச்சபை என்னைவிடச் சிறந்த முறையில் பராமரிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு நான் விடைபெறுகிறேன்" என்று மனநிறைவோடு குறிப்பிட்டார். நான் போனாலும் கர்த்தரின் பணி நின்று விடக்கூடாது என்ற அவரது நோக்கம் மிகவும் உயர்ந்தது, இன்றைய காலக்கட்டத்தில் நம்மில் பலர் நாம் இல்லை என்றால் நாம் செய்ததை வேறு யாரும் செய்யக்கூடாது என்றே நினைக்கிறோம், நம்முடைய இடத்தை வேறொருவர் நிரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!! நாம் கர்த்தருக்காய் எந்த காரியத்தை செய்தாலும் நாம் இல்லை என்றாலும் அவருடைய பணி நிற்க கூடாது என்று செயல்படுவோமென்றால் அதுவே நமது உறுதியான அஸ்திபாரத்திற்கு சான்று!!

இறுதி நாட்கள் (1821)அயராத உழைப்பின் காரணமாக ஹஃப் ஐயரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கல்லீரல் பாதிப்பு மற்றும் தொடர் மயக்கம் அவரை வாட்டியது. "என் எஜமானனின் பணிக்காக நான் முழுமையாகச் செலவழிக்கப்படத் தயாராக இருக்கிறேன்" என்று கூறிய அவர், தன் உடல்நிலை முழுமையாகச் சீர்குலையும் வரை ஓய்வெடுக்க மறுத்தார்.

1821 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அவர் மெட்ராஸுக்கு அருகிலுள்ள பூவிருந்தவல்லிக்கு (Poonamallee) இடமாற்றம் செய்யப்பட்டார். திருநெல்வேலியை விட்டுப் பிரிவது அவருக்கு மரண வலியை விடக் கொடியதாக இருந்தது. அவர் எழுதினார்: "இந்த உள்ளூர் குருவானவர்கள், உபதேசியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விசுவாசிகளை விட்டுப் பிரியும் இந்தத் தருணத்தை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். என்னால் அதை விவரிக்க முடியவில்லை. இதுவரை நான் விதைத்த விதைகளை என் கர்த்தர் காத்துக்கொள்வாராக! நான் ஒரு சிறிய தொடக்கத்தை மட்டுமே செய்துள்ளேன், என் மக்களுக்காக என் ஜெபம் ஒருபோதும் ஓயாது."

குருவானவர் ஹஃப் திருநெல்வேலியை விட்டுச் சென்று பல ஆண்டுகள் கடந்த பின்னும், மக்கள் அவரை மறக்கவில்லை. 1849 ஆம் ஆண்டு, அவருடன் பணியாற்றிய அருள்திரு. ஜான் தேவசகாயம் (Rev. John Devasagayam) என்பவர் ஹஃப் ஐயரின் மகளுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை, இங்கு ஒரு கிராமத்திற்கு ஹஃப்ஐயர்புரம் (Houghayyerpuram) என்று பெயரிடப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் தந்தை செய்த உதவிகளுக்குக் மரியாதையாகவே மக்கள் இந்தப் பெயரை வைத்துள்ளனர். இந்த மக்களின் இதயங்களில் உங்கள் தந்தை என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்."

குருவானவர் ஹஃப் இட்ட அடித்தளத்தின் மீது, ரேனியஸ் ஐயர் எப்படி ஒரு மாபெரும் திருச்சபையைக் கட்டியெழுப்பினார் என்பதை வரும் பகுதிகளில் காண்போம்.

பிரியமானவர்களே, ஐந்தே ஆண்டுகள்... வெறும் ஐந்தே ஆண்டுகள் மட்டுமே குருவானவர் ஹஃப் திருநெல்வேலியில் பணியாற்றினார். ஆனால் அந்த ஐந்தாண்டுகளில் அவர் தனது சுகம், நேரம், உழைப்பு என அனைத்தையும் கர்த்தருக்காக அர்ப்பணித்தார். அதன் பலனாக ஒரு மாபெரும் ஆவிக்குரிய சமுதாயம் உருவானது. இன்றும் அவரது பெயரால் ஒரு கிராமம் அழைக்கப்படுகிறது என்றால், அவரது அன்பு எந்தளவுக்கு மக்கள் மனதில் பதிந்திருக்கும்!

இன்று நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் காலங்கள், திறமைகள், பொறுப்புகளை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்? ஒரு சிறிய கால அவகாசம் கிடைத்தாலும், அதைத் தேவனுடைய ராஜ்யத்திற்காகப் பயன்படுத்த நாம் தயாராக இருக்கிறோமா? ஹஃப் ஐயரைப் போல "என் கர்த்தருக்காக முழுமையாகச் செலவழிக்கப்பட நான் தயார்" என்று சொல்லும் அர்ப்பணிப்பு நம்மிடம் உள்ளதா? சக ஊழியர்களை நம்மைப்போல அவர்களும் ஊழியர்கள் என்று ஏற்றுக்கொள்கிறோமா? நமக்குப் பின் அவருடைய பணிகளை செய்ய ஆட்களை தயார் செய்கிறோமா? சிந்திப்போம்!

வரலாற்றின் பக்கங்களிலிருந்து மீண்டும் கர்த்தருடைய ஆவியானவர் நம்மோடு பேசுவாராக!

தொடர்ந்து பயணிப்போம்…

படைத்தவரின் பாதையில்,திருமதி. ரெமினா சுஜித்