மிஷனின் நிர்வாக மாற்றம் மற்றும் நாசரேத்து மக்களின் விசுவாச வாஞ்சை

முந்தைய பகுதிகளில் திருநெல்வேலி மிஷனை S.P.C.K. எவ்வாறு நிர்வகித்தது என்பதையும், குருவானவர் ஹஃப் ஐயரின் பிரியாவிடையையும் கண்டோம். 1821-ல் ஹஃப் ஐயர் சென்ற பிறகு, சில ஆண்டுகள் திருநெல்வேலியில் ஐரோப்பிய மிஷனரிகள் எவரும் S.P.C.K. சார்பாக இருக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், திருச்சபையின் நிர்வாகம் மாபெரும் திருப்புமுனையைச் சந்தித்தது. அது என்ன என்பதை இந்தப் பகுதியில் காண்போம்.

மாபெரும் நிர்வாக மாற்றம் (S.P.C.K. -யில் இருந்து S.P.G. -க்கு):1824 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள S.P.C.K. சங்கத்தின் பொதுக்குழு ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. இந்தியாவில் தங்கள் சங்கம் செய்து வரும் சபைப் பராமரிப்பு மற்றும் மிஷனரிப் பணிகளை, S.P.G. - Society for the Propagation of the Gospel in Foreign Parts என்ற அமைப்பிடம் ஒப்படைப்பதாகத் தீர்மானித்தனர்.

இதன் அர்த்தம் S.P.C.K. திருநெல்வேலியைக் கைவிட்டது என்பதல்ல; மாறாக, தங்கள் கவனத்தை முழுவதும் வேதப் புத்தகங்கள், ஜெபப் புத்தகங்கள் அச்சிடுவது மற்றும் பள்ளிகளைப் பராமரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும், S.P.G. அமைப்பு நேரடியாகச் சபைகளைப் பராமரிக்கும் பொறுப்பை (Pastoral Care) ஏற்கும் என்றும் பிரிக்கப்பட்டது. இதற்காக, 1824 ஜூன் 7-ஆம் தேதி லண்டனில் அதிகாரப்பூர்வமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக, 1826 ஆம் ஆண்டு மே மாதம் 15-ஆம் தேதி மெட்ராஸ் செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் S.P.G. அமைப்பின் மெட்ராஸ் மாவட்டக் குழுவின் (Madras District Committee - M.D.C.) முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் மெட்ராஸ் பேராயர் வான் (Archdeacon Vaughan), நீதிபதி சர் ராபர்ட் கோமின், குருவானவர்கள் ராய், ராபின்சன், ராட்லர், ஹாஃப்ரோ மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உட்பட 23 பேர் கலந்துகொண்டனர்.

இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், இந்தக் கூட்டம் நடப்பதற்குச் சற்று முன்புதான் (ஏப்ரல் 3, 1826) இந்தியத் திருச்சபையின் மாபெரும் தலைவரான பிஷப் ஹெபர் (Bishop Heber) மரணமடைந்திருந்தார். இது திருச்சபைக்கு ஒரு பேரிடியாக இருந்தாலும், கர்த்தருடைய பணி எந்தச் சூழ்நிலையிலும் நிற்கக்கூடாது என்ற வைராக்கியத்தோடு இந்த அமைப்பை அவர்கள் உருவாக்கினார்கள். திருநெல்வேலியில் உள்ள பள்ளிகளுக்காக மாதம் 40 ரூபாய் மானியம் வழங்க இந்தக் குழு ஒப்புதல் அளித்தது.

பணியாளர் பற்றாக்குறையும், தஞ்சாவூர் மிஷனரிகளின் கதறலும்:S.P.G. அமைப்பிற்கு நிர்வாகம் மாறிய போதிலும், திருநெல்வேலியின் நிலைமை உடனடியாகச் சீரடையவில்லை. 1826-ஆம் ஆண்டின் குறிப்பின்படி, திருநெல்வேலியில் ஒரு ஐரோப்பிய மிஷனரி கூட இல்லை; 22 உள்ளூர் உபதேசியர்கள், 15 பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், விசுவாசிகளின் எண்ணிக்கையோ 4,161 ஆக இருந்தது!

இவ்வளவு பெரிய மந்தையை மேய்க்க ஆளில்லாததால், தஞ்சாவூரில் இருந்த மிஷனரிகளான கோல்ஹாஃப் மற்றும் ஸ்பெர்ஷ்னைடர் (Kohlhoff and Sperschneider) ஆகியோர் 1826 ஆகஸ்ட் 29-ஆம் தேதி M.D.C.-க்கு ஒரு அவசரக் கடிதம் எழுதினார்கள். அதில், "திருநெல்வேலி மிஷன் எங்களுக்குப் பெரும் பாரமாக உள்ளது. நிதியினால் அல்ல, ஆவிக்குரிய பணியாளர்களின் பற்றாக்குறையால்தான்! 6,000-க்கும் மேற்பட்ட மக்களும் 70 சபைகளும் உள்ள ஒரு மாவட்டத்தில் வெறும் 3 உள்ளூர் குருவானவர்கள் மட்டுமே உள்ளனர். உடனடியாகத் தகுதியானவர்களைக் குருவானவராக அபிஷேகம் செய்ய எங்களுக்கு அனுமதி தாருங்கள்" என்று மன்றாடினர்.

கல்வியின் மந்தநிலையும் பள்ளிகளின் வரவு-செலவும் (1828):1828-ஆம் ஆண்டின் இறுதியில் திருநெல்வேலிப் பள்ளிகள் குறித்த அறிக்கை M.D.C.-யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இருந்த நிர்வாகக் கணக்குகள் அக்காலகட்டத்தின் உண்மை நிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அப்போது மொத்தம் 15 பள்ளிகள் செயல்பட்டன (பாளையங்கோட்டை, பற்பநாதபுரம், நாசரேத், சாயர்புரம், முதலூர், எடையன்குடி உள்ளிட்டவை).

  • பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 3 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டது (உதாரணமாக, ஜெருசலேம் பள்ளி ஆசிரியர் பாக்கியநாதப் பிள்ளைக்கு 7 ரூபாயும், சாயர்புரம் ஆசிரியர் சவரிமுத்துவுக்கு 5 ரூபாயும்).
  • இந்த 15 பள்ளிகளிலும் மொத்தம் படித்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 279 மட்டுமே. இதில் கிறிஸ்தவக் குழந்தைகள் 183 பேர்தான்.
  • இதில் மிகவும் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், இந்த 279 மாணவர்களில் வெறும் 6 பேர் மட்டுமே பெண் பிள்ளைகள்! (பாளையங்கோட்டையில்-2, பூவாணியில்-1, கிறாக்காரந்தட்டில்-1, பற்பநாதபுரத்தில்-1, மீதம் 1). அதுவும் மிஷனரி ஏஜெண்டுகளின் மகள்களாகவே அவர்கள் இருந்திருக்கக் கூடும்.

நாசரேத்து மக்களின் விசுவாச வாஞ்சை (1829):ஒருபுறம் வறுமை, மறுபுறம் சரியான மேய்ப்பன் இல்லாத தவிப்பு. இத்தனைக்கும் மத்தியில் நாசரேத்து மக்கள் செய்த ஒரு காரியம், S.P.G. கமிட்டியையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாசரேத்தில் உள்ள சிறிய ஓலைக்குடிசை ஆலயம், 500-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் ஆராதிக்கப் போதவில்லை. பலர் ஆலயத்திற்கு வெளியே வெயிலில் நின்றே தேவ வார்த்தையைக் கேட்க வேண்டிய நிலை இருந்தது. எனவே, ஒரு பெரிய, உறுதியான தேவாலயத்தைக் கட்ட விரும்பிய நாசரேத்து மக்கள், C.M.S. மிஷனரிகளான ரேனியஸ் மற்றும் ஷ்மிட் ஐயர்களின் மூலம் ஒரு கோரிக்கை மனுவை M.D.C.-க்கு அனுப்பினார்கள்.

அந்தக் கடிதத்தில் (பிப்ரவரி 1829) நாசரேத்து மக்கள் (யேசடியான் முக்கண்டன், வேதமுத்து முக்கண்டன், ஞானக்கண்ணு முக்கண்டன் ஆகியோர் கையொப்பமிட்டு) இவ்வாறு எழுதியிருந்தனர்: "புதிய ஆலயம் கட்ட 1,500 ரூபாய் தேவைப்படுகிறது. வறுமையில் வாடும் நாங்கள், எங்கள் மாமிசத் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு, கர்த்தருடைய மகிமைக்காக எங்களால் முடிந்த 350 ரூபாயைச் சேகரித்துள்ளோம். மீதமுள்ள தொகையைச் சங்கம் எங்களுக்கு வழங்கி உதவ வேண்டும்."

ஏழைக் கிறிஸ்தவர்கள் தங்கள் பசியைப் பொறுத்துக்கொண்டு ஆலயத்துக்காக 350 ரூபாய் சேர்த்ததைக் கண்ட கமிட்டியினர், நெகிழ்ந்துபோய் அவர்களுக்கு மீதிப் பணத்தை வழங்க ஒப்புதல் அளித்தனர்.

டேவிட் ரோசன் ஐயரின் நியமனம் (1829):இப்படிப்பட்ட உற்சாகமான விசுவாசிகளைக் கொண்ட திருநெல்வேலி மிஷனுக்கு ஒரு நிரந்தர ஐரோப்பிய மிஷனரி அவசியம் என்பதை M.D.C. முழுமையாக உணர்ந்தது. ஜூலை 23, 1829-ல் நடந்த கூட்டத்தில், "திருநெல்வேலிக்கு ஒரு ஐரோப்பிய மிஷனரியை அனுப்புவது மிஷனுக்கு மிகவும் அவசியமானது" என்று தீர்மானித்தனர். அதன்படி, டேனிஷ் நாட்டைச் சேர்ந்த அருள்திரு. டேவிட் ரோசன் (Rev. David Rosen) அவர்களைத் திருநெல்வேலிக்கு நியமித்தனர். குறிப்பாக நாசரேத்து ஆலயப் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் 1829-ஆம் ஆண்டின் இறுதியில் திருநெல்வேலியை வந்தடைந்தார்.

பிரியமானவர்களே, மிஷனரிகள் இல்லாத காலம், நிர்வாக மாற்றங்கள், வெறும் 3 உள்ளூர் குருவானவர்களை வைத்து 70 கிராமங்களை நிர்வகிக்க வேண்டிய நெருக்கடி—இத்தனை தடைகள் வந்தாலும், நாசரேத்து மக்களின் விசுவாசம் மட்டும் குறையவே இல்லை. "சாப்பிடக் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, என் தேவனுக்கு ஒரு பெரிய ஆலயம் கட்டியே தீருவோம்" என்று அவர்கள் தங்கள் ஏழ்மையிலும் 350 ரூபாயைச் சேர்த்து வைத்த அந்த வைராக்கியம் தான் திருச்சபைகள் வளர்ந்து பெருக காரணமாக அமைந்தது.

இன்று கோடிக் கணக்கில் நிதிகள் இருந்தாலும், நிர்வாகங்களில் நடக்கும் சச்சரவுகளினால் ஆவிக்குரிய பணிகள் எத்தனை இடங்களில் முடங்கிக் கிடக்கின்றன? அன்று எந்த அமைப்பாக இருந்தாலும், கர்த்தருடைய பணி நடக்க வேண்டும் என்று லண்டனில் இருந்து மெட்ராஸ் வரை ஒன்றாக இணைந்து செயல்பட்டனர். அந்த அர்ப்பணிப்பும், ஒருமனமும் திருச்சபைகளிலும், நிர்வாகங்களிலும் தேவை.

வரலாற்றின் பக்கங்களிலிருந்து மீண்டும் கர்த்தருடைய ஆவியானவர் நம்மோடு பேசுவாராக!

தொடர்ந்து பயணிப்போம்…

படைத்தவரின் பாதையில்,திருமதி. ரெமினா சுஜித்