முந்தைய அத்தியாயத்தின் இறுதியில், குருவானவர் ஜேம்ஸ் ஹஃப் (Rev. James Hough) திருநெல்வேலிக்கு வந்ததையும், அவர் தொடங்கிய பள்ளிகள் திருச்சபையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன என்பதையும் காணவிருக்கிறோம் என்று முடித்திருந்தோம். மேய்ப்பனில்லாத மந்தையாகத் தவித்த திருநெல்வேலி மண்ணின் சபைகளுக்கு, குருவானவர் ஹஃபின் வருகை ஒரு வசந்த காலத்தின் தொடக்கமாகவே அமைந்தது. அவர் வெறும் கல்விப் பணிகளோடு நின்றுவிடாமல், திருச்சபையின் ஆவிக்குரிய அடித்தளத்தை எவ்வாறு பலப்படுத்தினார் என்பதை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

1818-ஆம் ஆண்டளவில், பாளையங்கோட்டையில் தங்கியிருந்த ஆபிரகாம் மட்டுமே திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த ஒரே ஒரு இந்திய குருவானவராக இருந்தார். ஆனால், இதற்கிடையே 1817-ஆம் ஆண்டில் குருவானவர் போலே (Rev. Pohle) மேலும் மூன்று உபதேசியர்களைக் குருவானவர்களாக அபிஷேகம் செய்திருந்தார். அவர்கள்: பாக்கியநாதன், நல்லதம்பி மற்றும் விசுவாசநாதன் (இவருக்கும் ஆபிரகாம் என்ற மற்றொரு பெயர் இருந்தது). 1819-ல் விசுவாசநாதன் நாசரேத்து சபைக்கு அனுப்பப்பட்டார்; அதே நேரத்தில் ஆபிரகாம் முதலூருக்குச் சென்றார்.

விசுவாசநாதனைக் குறித்து குருவானவர் ஹஃப் மிகுந்த நன்மதிப்பைக் கொண்டிருந்தார். 1819-ல் அவர் கொடுத்த அறிக்கை ஒன்றில் விசுவாசநாதனைக் குறித்து சில வார்த்தைகள் எழுதியிருக்கிறார்: "அவர் சிறந்த திறமைகளும், மெய்யான ஆவிக்குரிய பக்தியும் கொண்ட ஒரு மனிதராகக் காணப்படுகிறார். அவரது சபையாருக்கு அவர் அளித்த பிரசங்கத்தை நான் கேட்டேன்; அவர் பெற்றிருந்த சாதாரண கல்வியை விட, ஒரு உயர்கல்வி கற்ற குருவானவர் செய்யும் பிரசங்கத்திற்கு இணையான ஆழம் அதில் இருந்தது."

பின்னர் 1824-ல் திருநெல்வேலியை விட்டுச் சென்ற பிறகு குருவானவர் ஹஃப் அவரைப் பற்றி எழுதும்போது, "அவரது பக்தி, திறமை மற்றும் கிறிஸ்தவ சாந்தம் ஆகியவை உள்ளூர் விசுவாசிகளின் அன்பையும், புறமதத்தவர் மற்றும் முகமதியர்களின் மரியாதையையும் அவருக்குப் பெற்றுத்தந்தது" என்று குறிப்பிடுகிறார்.

அந்தக் காலத்தில் ஆபிரகாம் (மற்றும் விசுவாசநாதன்) ஆகியோரின் மாத ஊதியம் சுமார் 'ஏழு ஸ்டார் பகோடாக்கள்' (Star Pagodas - அக்கால நாணயம்) ஆக இருந்தது. உபதேசியர்களின் சம்பளம் மற்றும் ஆபிரகாமின் பயணச் செலவுகள் என மாதம் 35 ஸ்டார் பகோடாக்கள் தேவைப்பட்டன. இவையனைத்தும், குருவானவர் ஸ்வார்ட்ஸ் ஐயர் விட்டுச்சென்ற நிதியின் வட்டியிலிருந்தே வழங்கப்பட்டன.

சபைகளின் வளர்ச்சியும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும்

குருவானவர் ஆபிரகாம் அளித்த தகவல்களின் அடிப்படையில், 1818-ல் திருநெல்வேலி முழுவதும் சிறியதும் பெரியதுமாக 63 சபைகள் இருந்தன என்று குருவானவர் ஹஃப் அறிக்கை அளித்தார். மொத்தக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2830 ஆக இருந்தது. இதுமட்டுமல்லாமல், திருவிதாங்கூரின் பக்கத்து கிராமங்களில் 270 பேர் திருநெல்வேலி மிஷனின் கீழ் இருந்தனர். சில சபைகளில் 400-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் இருந்தனர்.

Rev.ஹஃப் தனது குறிப்பில், "இந்தக் கிறிஸ்தவர்களில் சிலர் விவசாயிகள் போன்ற பின்னணியைக் கொண்டவர்கள்; ஆனால் பெருமளவில் அவர்கள் பனைத்தொழில் செய்பவர்களாகவே காணப்படுகிறார்கள்" என்று பதிவு செய்துள்ளார். (குறிப்பு: பற்பநாதபுரம் மற்றும் பூவாணி சபைகளைப் பற்றி ஹஃப் அப்போது அறிந்திருக்கவில்லை).

1814 முதல் 1818 வரையிலான ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானத்தின் விவரங்கள் ஆச்சரியமளிக்கின்றன:

ஆவிக்குரிய வறட்சியும், ஹஃபின் மனவேதனையும்:

தனது முதல் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக Rev. ஹஃப் சில கிராமப்புற சபைகளைப் சென்று பார்த்தார். ஆனால், அங்குள்ள பள்ளிகளின் நிலையையும், சபையின் ஆவிக்குரிய நிலையையும் கண்டு அவரால் திருப்தியடைய முடியவில்லை. அவரது வேதனை நிறைந்த வார்த்தைகள் இதோ:

"பள்ளிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன; முறையான ஆசிரியர்கள் இல்லாததால், அவை உபதேசியர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களோ கவனக்குறைவாக இருக்கிறார்கள். பள்ளிகளில் ஒரு புத்தகம் கூட இல்லை; ஓலைச்சுவடிகளையே பயன்படுத்துகிறார்கள்... இதனால் பெரும்பாலான மக்கள் புறமதத்தினரைப் போல ஆவிக்குரிய இருளிலேயே வாழ்கின்றனர். தாங்கள் ஏன் கிறிஸ்தவர்கள் என்பதே பலருக்குத் தெரியவில்லை; கிறிஸ்தவத்தின் அடிப்படைகளே அவர்கள் காதுகளுக்குப் புதியதாக இருக்கின்றன. இதனால், இவர்களது நடத்தை புறமதத்தினரை ஈர்ப்பதற்குப் பதிலாக முகம் சுளிக்கவே வைக்கிறது. தங்களுக்குள்ளேயே வெளிச்சம் இல்லாதபோது, 'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' என்ற வார்த்தையின்படி அவர்களால் எப்படி வாழ முடியும்?"

இதைக் கண்ட Rev. ஹஃப் சும்மா இருக்கவில்லை. உடனடியாக மெட்ராஸ் குழுவினரைத் தொடர்புகொண்டு, மாதம் 1½ பகோடா சம்பளத்தில் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வற்புறுத்தினார். மேலும், புதிய ஏற்பாடு, மோட்சப் பிரயாணம், பாமாலைகள் மற்றும் உபதேச வினாவிடைப் புத்தகங்கள் (Catechisms) ஆகியவற்றைத் தமிழில் அனுப்புமாறு கெஞ்சிக் கேட்டார். புத்தகங்கள் வந்தன; மக்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர்.

நாசரேத் மற்றும் முதலூரில் ஒரு மறுமலர்ச்சி!

1819 செப்டம்பரில் நாசரேத் மற்றும் முதலூருக்கு Rev. ஹஃப் சென்றபோது கண்ட காட்சி, மிஷனரிகளின் உழைப்பு ஒருபோதும் வீண்போகாது என்பதை அவருக்கு உணர்த்தியது. "அங்குள்ள மக்கள் தங்கள் குருவானவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார்கள்... அங்கே சென்றபோது மக்கள் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மிஷனரிகள் இல்லாத இத்தனை காலத்திலும், கிறிஸ்து மற்றும் கிறிஸ்தவத்தின் சாந்தமும் சமாதானமும் அவர்களை ஒற்றுமையாகக் காத்து வந்ததைக் காணும்போது அவருக்கு நெகிழ்ச்சியாக இருந்தது."

அங்கு ஒரு தென்னை மரத்தின் நிழலில், பெண்கள் சிலர் பருத்தி நூற்றுக்கொண்டே லூத்தரன் பாமாலைகளைப் பாடிக்கொண்டிருந்தனர். ஆராதனைக்குப் பின்னரும் மக்கள் கலைந்து செல்லாமல், தேவாலயத்தின் வாசலில் அமர்ந்து வெகுநேரம் பாமாலைகளைப் பாடினர். 20 ஆண்டுகளுக்கு முன்பு மிஷனரி கெரிக்கே (Gericke) ஐயரால் ஞானஸ்நானம் பெற்ற இரண்டு முதியவர்கள், கெரிக்கே ஐயர் தங்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடல்களை ஹஃப் ஐயருக்காகப் பாடிக்காட்டினர்.

ஹஃப் ஐயர் எழுதுகிறார்: "மிஷனரிகளின் உழைப்பு வீணாகிவிட்டது என்று கூறுபவர்களுக்கு இந்தக் கிராமங்களே சிறந்த சாட்சி. இங்கிலாந்தில் உள்ள நகரங்களில் கூட இவ்வளவு ஆழமான ஆவிக்குரிய கிறிஸ்தவ பக்தியை நான் கண்டதில்லை. ஒரு புறமதத்தவர் என்னிடம் வந்து, 'இது மிகவும் அமைதியான, நல்ல இடம்' என்று உண்மையாகவே சாட்சியளித்தார்."

கல்விப்பணியின் விரிவாக்கம்:

1819-ஆம் ஆண்டில் Rev. ஹஃப் அவர்கள் C.M.S. (சர்ச் மிஷனரி சொசைட்டி) நிதியின் கீழ் திருநெல்வேலி, திருநெல்வேலி பேட்டை, குறிச்சி, நாசரேத் மற்றும் முதலூர் ஆகிய இடங்களில் தமிழ்வழி கல்விப் பள்ளிகளைத் திறந்தார். மேலும், நாசரேத்தில் இரண்டாவது பயிற்சிப் பள்ளியையும் (Seminary) அவர் தொடங்கினார். அந்த ஆண்டின் இறுதியில், பாளையங்கோட்டை பயிற்சிப் பள்ளியில் மொத்தம் எட்டு மாணவர்கள் பயின்று வந்தனர். அவர்களில் மூவர் சுமார் 17 வயதுடையவர்கள், மற்றவர்கள் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். பாளையங்கோட்டையைச் சேர்ந்த உபதேசியாரும், ஆலயப் பராமரிப்பாளருமே (sexton) இவர்களுக்கு ஆசிரியர்களாகச் செயல்பட்டனர். நாசரேத் பயிற்சிப் பள்ளியில் அப்போது மூன்று மாணவர்கள் மட்டுமே இருந்தனர், அவர்களுக்கு விசுவாசநாதன் என்பவர் கற்பித்தார். ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் அரை பகோடா கல்வி உதவித்தொகையாக (Scholarship) வழங்கப்பட்டது.

1820-ஆம் ஆண்டில், S.P.C.K.-யின் மெட்ராஸ் குழு, கல்கத்தா பிஷப்பின் மனமார்ந்த ஒப்புதலுடன், திருநெல்வேலியில் நடைபெறும் பள்ளிப் பணிகளுக்காக மே மாதம் முதல் மாதம் ரூ.40 மானியமாக வழங்க முன்வந்தது. எனவே, S.P.C.K. கிராமங்களில் C.M.S. ஆதரவில் செயல்பட்டு வந்த பள்ளிகளை S.P.C.K. கணக்கின் கீழ் மாற்றுவதற்குத் குருவானவர் ஹஃப் C.M.S. கடிதத் தொடர்பு குழுவுடன் பேசி ஏற்பாடு செய்தார். அந்த காலகட்டத்தில், குலசேகரன்பட்டினம் மற்றும் தருவை ஆகிய இடங்களில் புதிதாகப் பள்ளிகள் தொடங்கப்பட்டிருந்தன. மேலும், மக்களிடம் எடுத்துச்சொல்லி சம்மதத்தைப் பெற்ற பிறகு, நாசரேத் மற்றும் முதலூரில் பெண்பிள்ளைகளுக்கென பிரத்தியேகப் பள்ளிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த உதவியைப் பெற்றுக்கொண்ட குருவானவர் ஹஃப், C.M.S. (Church Missionary Society) குழுவினருடன் இணைந்து ஒரு சிறப்பான நிர்வாக ஏற்பாட்டைச் செய்தார். அதன்படி, C.M.S. ஆதரவில் S.P.C.K. கிராமங்களில் செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்தும் S.P.C.K. அமைப்பின் பராமரிப்பிற்கு மாற்றப்பட்டன.

இதில் மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வு என்னவென்றால், குலசேகரன்பட்டினம் மற்றும் தருவை ஆகிய இடங்களில் புதிதாகத் தொடங்கப்பட்ட பள்ளிகள் மட்டுமல்லாமல், நாசரேத் மற்றும் முதலூரில் பெண்களுக்கென பிரத்தியேகமாகத் தொடங்கப்பட்ட பள்ளிகளும் இதில் அடங்கும். அக்காலகட்டத்தில் பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு காரியமாக இருந்தது. மக்களிடம் பல கட்டங்களில் மன்றாடி, அவர்களைப் பேசிச் சம்மதிக்க வைத்து, பெரும் போராட்டத்திற்குப் பிறகே இந்தப் பள்ளிகளை ஹஃப் ஐயர் தொடங்கினார்.

ஆகஸ்ட் 1820-ல் S.P.C.K. அமைப்பிற்கு ஹஃப் தனது மூன்றாவது அறிக்கையைச் கொடுத்தபோது, இந்தப் பள்ளிகளின் பொறுப்பு மாற்றங்கள் முழுமையாக முடிவடைந்திருந்தன. அதுமட்டுமல்லாமல், S.P.C.K. கிராமங்களில் கர்த்தருடைய கிருபையால் மேலும் இரண்டு புதிய பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தன. அந்தப் பள்ளிகளின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் அடங்கிய பட்டியலையே அவர் தனது அறிக்கையில் சமர்ப்பித்தார்.

மாணவர்களின் எண்ணிக்கை (S.P.C.K. பள்ளிகள்):

1819 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்த C.M.S. பள்ளிகளின் விவரங்கள்:

ஆங்கிலப் பள்ளிகள்:

தமிழ் பள்ளிகள்:

பிரியமானவர்களே, ஒருபுறம் பள்ளிகள் இல்லாமல் ஓலைச்சுவடிகளில் படித்த காலம், கையில் வேதப்புத்தகம் இல்லாததால் இருளில் வாழ்ந்த மக்கள். ஆனால் கர்த்தரோ குருவானவர் ஹஃப் என்ற ஒரு தனி மனிதனின் ஆத்தும பாரத்தின் மூலமாக ஒரு மாபெரும் எழுப்புதலை நமது திருநெல்வேலி திருமண்டலத்தில் கொண்டுவந்தார். எவ்விதப் போட்டி பொறாமையோ, சுயநலமோ இன்றி, தேவனுடைய ராஜ்யம் கட்டப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அந்த மிஷனெரிகளும் குருவானவர்களும் உபதேசியாரும் கர்த்தருக்காக உழைத்ததே இன்று நாம் காணும் மாபெரும் திருச்சபை! அன்று கர்த்தரின் பணியைச் செய்த மிஷனரிகளும், குருவானவர்களும், உபதேசியாரும் எவ்விதப் போட்டி பொறாமையுமின்றிப் பணியாற்றினார்கள். ஊழியர்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் நன்னடத்தைகளை மனதாரப் பாராட்டும் குணமும், சோர்வடையும் போது தட்டிக் கொடுத்து ஊக்கமளிக்கும் பண்பும் தவறு செய்யும்போது கண்டிக்கும் பண்பும் நிறைந்திருந்தது. இன்று அந்த ஆதி அன்பின் ஐக்கியம் காணப்படுகிறதா? சிந்திப்போம்!

இன்று நம் சபைகளிலும், வீடுகளிலும் அந்த ஆவிக்குரிய பாடல்களும், ஐக்கியமும், வேத வாசிப்பும் எங்கே சென்றன? அன்று அவர்கள் வெறும் ஓலைச்சுவடியை வைத்துக்கொண்டு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தார்கள்; ஒரு கிராமத்தையே சாந்தமான இடமாக மாற்றினார்கள். ஆனால் இன்று, நம் கைகளில் முழு வேதாகமம் இருந்தும், நவீன வசதிகள் அனைத்தும் இருந்தும் நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? ஒரு மிஷனரிக்காகப் பல ஆண்டுகள் ஏங்கித் தவித்த அந்த மக்களின் தாகம் இன்று நம்மிடம் உள்ளதா? சிந்திப்போம்.

வரலாற்றின் பக்கங்களிலிருந்து மீண்டும் கர்த்தருடைய ஆவியானவர் நம்மோடு பேசுவாராக!

தொடர்ந்து பயணிப்போம்…

படைத்தவரின் பாதையில்,திருமதி. ரெமினா சுஜித்