முந்தைய அத்தியாயத்தில், மிஷனரி ரிங்கல்தௌபே திருநெல்வேலியின் கடற்கரையோரக் கிராமங்கள் வழியாக மேற்கொண்ட ஆரம்பகால பயணங்களையும், அங்கு அவர் கண்ட சவால்களையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, உவரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அவர் ஆற்றிய பணிகள், திருவிதாங்கூர் நோக்கிய அவரது பயணம் மற்றும் அவரது ஊழியத்தின் இறுதி நாட்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகளை இந்த மாதத் தொடர்ச்சியில் காண்போம்.
உவரி மற்றும் கடற்கரையோரக் கிராமங்களில் ஊழியம்:
ரிங்கல்தௌபே தனது பயணக் குறிப்பில் இவ்வாறு எழுதுகிறார்:“சூரியன் மறையும் நேரத்தில் நான் உவரியை அடைந்தேன். கடலோரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய கிராமத்தில் மூன்று ரோமன் கத்தோலிக்கத் ஆலயங்கள் உள்ளன. பொதுவாக எங்கும் காணப்படாத அளவிற்கு மக்களின் கடின உழைப்பை இங்கு காண முடிந்தது. மக்கள் கடற்கரைக்கு இணையாக ஓடும் ஒரு குறுகிய மணற்பாங்கான நிலத்தில் விவசாயம் செய்யப் பெரும் முயற்சி எடுத்துள்ளனர். செழிப்பான புகையிலைத் தோட்டங்களும், வாழை மற்றும் வெள்ளரித் தோட்டங்களும், செம்மண் பாலைவனத்தைக் கண்டு சோர்ந்துபோன கண்களுக்கு விருந்தாக அமைந்தன. இங்கேயே தங்கிவிட வேண்டும் என்று நான் நினைத்தேன். மாலையில் பிரசங்கம் செய்தேன்; மறுநாள் நீண்ட காலமாக மிகவும் மோசமாக நடந்து கொண்ட ஒரு உபதேசியாரை வேலையை விட்டு நீக்கி பல விரும்பத்தகாத விவகாரங்களை முடிவுக்குக் கொண்டுவந்தேன். சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு பிரசங்கித்த சாணார் மக்கள் கூட்ட தலைவராக ஐரோப்பாவில் அறியப்பட்ட அதே நபர் இவர்தான். சமீபத்திய உபத்திரவத்தில் 500 பேர் பின்வாங்கிவிட்டார்கள், ஆனால் ஞானஸ்நானம் பெற்ற இருநூறு பேர் உறுதியாக நிற்கிறார்கள்.”
6 -ஆம் தேதி மாலையில், உவரியிலிருந்து சில மைல் தொலைவில் உள்ள கடற்கரை கிராமமான குண்டல் சென்றேன். அங்கு ஒரு அழகான ஆலயம் உள்ளது. அங்கே பிரசங்கம் செய்து பல குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். பிரசங்கத்திற்குப் பிறகு, ஒரு மனிதர் தானாகவே முன்வந்து, தான் ஒரு பெரிய பாவி என்றும், தனக்கு அறிவுரை கூறி வழிநடத்த யாரையாவது அனுப்ப வேண்டும் என்றும் கூறினார். ஒரு இந்தியரிடமிருந்து இதுபோன்ற தன்னிச்சையான அறிவிப்பை நான் முதல்முறையாகக் கேட்டதில் மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு நம்முடைய எல்லாம் வல்ல இரட்சகரைச் சுட்டிக்காட்டினேன். அவர் பெயர் ஒளிவு (அதாவது பிரகாசம்). அவரைப் பற்றி இனி வரும் காலங்களில் ஒரு நல்ல செய்தியைச் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
எட்டாம் தேதி, வேறொரு கடற்கரை கிராமமான மாறுகால்குறிச்சிக்குச் சென்றேன். அங்கே பிரசங்கம் செய்து, குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். உவரி சபையைத் தற்காலிகமாகக் கவனித்துக்கொள்ளும்படி தஞ்சாவூரைச் சேர்ந்த நல்ல உபதேசியாரான மெய்ஞானம் என்பவரைக் கேட்டுக்கொண்டேன். இங்கே ஆசிரியர்களாகப் பயிற்றுவிக்கப்படக்கூடிய நம்பிக்கைக்குரிய இளைஞர்கள் சிலர் உள்ளனர்.
இங்கிருந்து நான் அதே வகையான மற்றொரு கிறிஸ்தவ கிராமமான நாவலடிக்குச் சென்றேன். தஞ்சாவூர் செமினரியைச் சேர்ந்த தானியேல் என்ற உறுதியான இளைஞர் இங்கிருக்கிறார். மேலும் எழுதப் படிக்கத் தெரிந்த பல நல்ல சிறுவர்களும் உள்ளனர். இங்கு ஒரு செமினரியை (வேதாகம கல்லூரி) உருவாக்குவது மிகவும் எளிதான காரியம். மாலையில் நான் உள்ளூரில் உள்ள பொட்டல்குளத்திற்குச் சென்றேன், ஆனால் அங்குள்ள சபையின் நிலை எனக்குப் பிடிக்கவில்லை என்று ரிங்கல்தௌபே குறிப்பிட்டுள்ளார்.
திருவிதாங்கூர் பயணம் மற்றும் சபைகளின் நிலை:
ரிங்கல்தௌபே பாளையங்கோட்டைக்குத் திரும்பி ஈஸ்டர் வரை அங்கு தங்கினார். பின்னர் ஏப்ரல் 13 ஆம் தேதி திருவிதாங்கூருக்குப் புறப்பட்டார். தெற்கே உள்ள நிலையங்களை மீண்டும் பார்வையிடுவதில் பதினொரு நாட்கள் செலவிட்டார். குறிப்பாக சமராபுரம் மற்றும் வடக்கன்குளம் பற்றி அவர் குறிப்பிடுகிறார்; அங்கு சுமார் முப்பது புராட்டஸ்டன்ட்டுகளைக் கண்டார், ஆனால் கத்தோலிக்கர்கள் பலர் விரோதமாக இருந்தனர். 25 ஆம் தேதி அவர் திருவிதாங்கூருக்குச் சென்றார். அங்கு பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு இரண்டரை மாதங்கள் தங்கி, ஜூலை 10 ஆம் தேதி மீண்டும் பாளையங்கோட்டை அடைந்தார். அதற்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் தென் திருநெல்வேலியில் மேலும் ஐந்து முறை சுற்றுப்பயணம் செய்தார். பாளையங்கோட்டையில் ஆங்கில ஆராதனையில் பொதுவாக இருபது முதல் நாற்பத்தைந்து பேர் கலந்துகொண்டதாகவும், தமிழ் சபையினரின் எண்ணிக்கையும் ஏறக்குறைய அதே அளவில் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ரிங்கல்தௌபே தனது நாட்குறிப்பின் இப்பகுதியைச் சபைகளின் நிலை குறித்த பொதுவான கருத்துகளுடன் முடிக்கிறார். அவரது கணிப்புகள் ஆழ்ந்த பக்தி வைராக்கியம் கொண்ட ஒரு மனிதருடையது என்பது தெளிவாகிறது. அவரது எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருந்தன. அந்தக் காலத்தில் அவருக்குத் தமிழ் மொழியில் போதிய அறிவு இல்லை என்பதையும், கிராமங்களில் பேசப்படும் பேச்சுவழக்கு அவருக்குப் புரியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர் தனது நாட்குறிப்பில் “இந்த மாகாணத்தின் வட்டார மொழியை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாததாலும், ஞானஸ்நானம் பெறுவதற்குத் தகுதியானவர்களை வேறுபடுத்திப் பார்க்க எனக்கு எந்த வழியும் இல்லாததாலும், ஞானஸ்நானம் கொடுக்கும் அதிகாரத்தை மெய்ஞானம் மற்றும் ஆபிரகாம் ஆகிய இரண்டு தகுதிவாய்ந்த உபதேசியர்களுக்கு வழங்கினேன். அவர்கள் மூலம் முன்னூறு முதல் நானூறு பெரியவர்கள் ஞானஸ்நானம் பெற்றுள்ளனர்.” என்று கூறுகிறார்:
எல்லைப்புறப் பணிகள் (1806-1807):
அக்டோபர் 1806 முதல் ஆகஸ்ட் 1807 வரையிலான ரிங்கல்தௌபேயின் நாட்குறிப்பு, அக்டோபர் இறுதியில் அஞ்சாங்கோவிலுள்ள ஒரு நண்பரிடமிருந்து அவருக்குக் கடிதங்கள் வந்ததைக் காட்டுகிறது. அந்த நண்பர் அவருக்கு 100 ஸ்டார் பகோடாக்களை அனுப்பியதோடு, திருவிதாங்கூர்-திருநெல்வேலி எல்லையைத் தாண்டிச் சில மைல் தொலைவில் உள்ள மயிலாடியில் பொருத்தமான இடத்தை வாங்க முடியும் என்ற நம்பிக்கையையும் அளித்தார். டிசம்பரில் அவர் எஸ்.பி.சி.கே. (S.P.C.K.) மிஷனரிகளுடன் இதுபற்றி விவாதிக்க திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார். அடுத்த எட்டு மாதங்களுக்கு அவர் திருநெல்வேலி மற்றும் திருவிதாங்கூர் ஆகிய இரண்டு இடங்களுக்கும் வசதியான ஓரிடத்தில் குடியேறத் தேடிக்கொண்டே, அச்சபைகளின் மீது அதிக கவனம் செலுத்தினார். பிப்ரவரியில் அவர் எல்லையின் திருநெல்வேலிப் பக்கத்தில் உள்ள கானானூருக்கு அருகில் ஒரு நிலத்தை வாங்கி, அங்கு ஒரு 'பாடும் பள்ளியை'த் (Singing School) தொடங்கினார். ஆனால் மே முதல் ஆகஸ்ட் வரை அவர் முதலூரில் தங்கியிருந்தார். அங்கிருந்தபோது, தருவ வையில் ஒரு நிலத்தை வாங்கி, ஒரு சிறிய பங்களாவைக் கட்டினார்.
அவரது நாட்குறிப்பிலிருந்து சில முக்கியப் பதிவுகள்:
- அக். 21: படுகாபட்டிக்கு அருகில் சில நாட்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு சிறிய தேவாலயத்தில் நின்றேன்; மக்கள் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்து, தங்கள் குடியேற்றத்திற்கு என் பெயரைச் சூட்ட அனுமதி கேட்டார்கள். ஆனால் நான் அதற்கு 'நாயீன்' என்று பெயரிட்டு, வேதாகமத்திலிருந்து உண்மையான விசுவாசத்தின் தன்மையைப் பற்றிப் பேசினேன். அங்கிருந்து சாத்தான்குளத்திற்கு அருகில் உள்ள சுண்டங்கோட்டைக்குச் சென்றேன், அங்கு ஒரு புதிய ஜெபக்கூடாரம் அல்லது பனை ஓலைக் குடிசை உள்ளது.
- அக். 25: இடையன்குளத்திற்குச் சவாரி செய்தேன். அவர்களின் கோயில் இப்போது ஒரு நல்ல சிறிய தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது, அவர்களுக்கு ஒரு உபதேசியார் இருக்கிறார். தருவைக்குச் சென்றேன், அங்கு ஒரு புதிய குடிசையில் ஜெபம் செய்தேன், அவர்கள் ஒரு புதிய தேவாலயம் கட்டப் போகிறார்கள்.
- மார்ச் 1, 1807: கானானூரில் உள்ள குழந்தைகளுடன் ஒரு பாடல் பள்ளியைத் தொடங்கினேன், அங்கு நான் குடியேற முடியும் என்று எதிர்பார்க்கிறேன். இது எவ்வளவு நம்பிக்கையற்ற பணி என்பதை ஐரோப்பாவில் உள்ள நம் சகோதரர்கள் எவராலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.
- ஆகஸ்ட் 13: (இரவில் வயல்வெளியில் ஒரு மனிதன் ஜெபிப்பதைக் கேட்டபோது) - "இந்த மக்களிடையே கொஞ்சம் ஆவிக்குரிய வாழ்வும் ஜீவனும் இருக்கிறது என்று நம்புகிறேன்; மிஷனரி இன்னும் அதிக ஆவிக்குரிய வாஞ்சையோடு இருந்திருந்தால், அநேகமாக இன்னும் அதிகமாகவே வெளிப்பட்டிருக்கும். நான் அவர்கள் மத்தியில் வாழத் தொடங்கியதிலிருந்து அவர்களைப் பெரிதும் நேசிக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்."
- ஆகஸ்ட் 23: தமிழ் மொழியில் எனது முன்னேற்றம், கிறிஸ்தவ போதனைகள் மற்றும் ஆவிக்குரிய விஷயங்களில் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேசுவதற்குப் போதுமானதாக உள்ளது. ஆனால் நேர்த்தியும், சரளமும், சொல்லாற்றலும் எனக்கு இன்னும் வரவில்லை. மேலும், பூர்வீகக் குடிமக்கள் பேசுவதைப் புரிந்துகொள்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. ஒருபுறம் அவர்கள் பிழையாகவும், கொச்சையாகவும் (uncouthly), வட்டார வழக்கிலும் (provincially) பேசுவது காரணம்; மறுபுறம் அவர்கள் பேசும் அதிவேகமும் (rapidity) ஒரு காரணமாகும். இதனைத் தொடர்ந்து, தமிழ் வேதாகமங்களை வாங்குவதற்கு 'பிரிட்டிஷ் மற்றும் ஃபாரின் பைபிள் சொசைட்டி' (British and Foreign Bible Society) மானியம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு கிடைக்கும் வேதாகமங்கள் எல்லா உபதேசியர்களையும் விட அதிக காரியங்களை போதிக்கும் என்றும் இந்த நாட்குறிப்பை அவர் பின்வரும் வார்த்தைகளுடன் முடிக்கிறார்:
எனது விருப்பம் என்னவென்றால் தருவையில் நான் சுதந்திரமாகச் செயல்பட்டு, ஒரு சிறிய கிறிஸ்தவ மந்தையை உருவாக்க விரும்புகிறேன். அந்தக் கூட்டம் வெறும் பெயரளவில் இல்லாமல், பரலோகத்தின் சுபாவமான என்றென்றும் அழியாத அன்பை தங்கள் ஆத்துமாவில் கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
இறுதி நாட்கள் மற்றும் பிரிவு:
1808 ஆம் ஆண்டிற்கான ரிங்கல்தௌபேயின் நாட்குறிப்புகள் அல்லது கடிதங்கள் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை. 1808 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 1809 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், திருநெல்வேலியுடனான அவரது நேரடித் தொடர்பு முடிவுக்கு வந்தது. அவர் தருவையில் கட்டிய பங்களாவையும், கானானூர் நிலத்தையும் எஸ்.பி.சி.கே. பிரதிநிதிகளிடம் ஒப்படைத்ததாக பிஷப் கால்டுவெல் கூறுகிறார். 1808 முதல் 1816 வரை அவர் திருவிதாங்கூரில், குறிப்பாக மயிலாடியில் வசித்தார். இந்த ஆண்டுகளில் அவர் சுமார் ஏழு கிராமங்களில் சபைகளை உருவாக்கினார். 1815 ஆம் ஆண்டில் இந்தச் சபைகளில் ஞானஸ்நானம் பெற்ற சுமார் 840 பேர் இருந்தனர்.
அவர் பலமுறை பாளையங்கோட்டைக்குச் சென்றுள்ளார். குறைந்தது இரண்டு முறையாவது அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார். அங்குள்ள ஆங்கிலேயர்களுக்கும், ஒருவேளை தமிழ் சபையினருக்கும் ஆராதனைகளை நடத்தினார். 1815 இல் திரு. சாயர் (Mr. Sawyer) இறக்கும் வரை அவருடன் நெருங்கிய நட்பைப் பேணினார். அதற்கு முந்தைய ஆண்டு, சாயர் தனக்கு உதவியாளராக மட்டும் இல்லாமல் (1805 இல் அவர் பரிந்துரைத்தது போல), ஒரு முழு மிஷனரியாகத் தன்னுடன் இணைய வேண்டும் என்று முன்மொழிந்தார். சாயர் அதற்கு விருப்பம் தெரிவித்தார். ஆனால் திருவிதாங்கூரில் இருந்த ஆங்கிலேயப் பிரதிநிதி (British Resident) இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை. அதற்குப் பதிலாக, சி.எம்.எஸ். (C.M.S.) மிஷன் சார்பில் தரங்கம்பாடிக்கு அப்போதுதான் வந்திருந்த ரேனியஸ் அல்லது ஷ்னாரே தென் திருவிதாங்கூரில் பணியாற்ற வரலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.
இருப்பினும், இரண்டு வெவ்வேறு சங்கங்களைச் சேர்ந்த மிஷனரிகள் இணைந்து பணியாற்றுவது புத்திசாலித்தனமாக இருக்காது என்று ரிங்கல்தௌபே நினைத்தார். எனவே சி.எம்.எஸ். மிஷனரிகளுக்காகத் தான் பதவி விலக முடிவு செய்தார். ஆனால் அவர் திருநெல்வேலிக்கு முதலில் வந்ததைப் போலவே, இம்முறையும் தனது சொந்த சங்கம் (L.M.S.) இந்த விஷயத்தில் என்ன விரும்பும் என்பதைப் பற்றி அவர் யோசித்ததாகத் தெரியவில்லை. ஆனால் சங்கங்களுக்குள் பிரச்சனை வந்துவிடுமோ என்று அஞ்சி ரேனியஸ் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
1816 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உடல் நலிவுற்று, கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட ரிங்கல்தௌபே திருவிதாங்கூரை விட்டு வெளியேறினார். லண்டன் மிஷனரி சங்கத்தின் இயக்குநர்களுக்குத் தான் புறப்படுவதை அறிவிக்கும்போது, "என் வேலை முடிந்துவிட்டது, அது நிரந்தரமான முத்திரையைப் பெற்றுள்ளது" என்று எழுதினார். உடல்நலத்தை மேம்படுத்திக்கொள்ள 'கேப் ஆஃப் குட் ஹோப்' (Cape of Good Hope) செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் நமக்குத் தெரியாத காரணங்களுக்காக, அதற்குப் பதிலாக அவர் மலாக்காவுக்குச் சென்றார். அங்கிருந்து எல்.எம்.எஸ். பொருளாளருக்கும் தனது சகோதரிக்கும் எழுதிய கடிதத்தில், தனது உடல்நிலை சற்றுத் தேறியிருப்பதாகவும், தான் படேவியாவுக்குச் (Batavia) செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ரிங்கல்தௌபேயின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும்போது, ஒரு மிஷனரிக்குத் தேவையான தியாகமும், அர்ப்பணிப்பும் அவரிடம் மேலோங்கி இருந்ததைக் காண முடிகிறது. மொழி தெரியாத தேசத்தில், வசதிகள் இல்லாத கிராமங்களில், எதிர்ப்புகள் நிறைந்த சூழலில், அவர் விதைத்த விதைகள் இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கின்றன. ஆரம்பத்தில் அவர் கண்ட மக்கள், பாவம் என்றால் என்னவென்று அறியாதவர்களாகவும், காரணமின்றி ஞானஸ்நானம் பெற விரும்பியவர்களாகவும் இருந்தனர். ஆனால், கிறிஸ்துவின் அன்பை ருசித்தபின், அந்த மக்களிடத்தில் ஆவிக்குரிய ஜீவன் துளிர்ப்பதை அவரே சாட்சி பகர்கிறார். "என் வேலை முடிந்துவிட்டது, அது நிரந்தரமான முத்திரையைப் பெற்றுள்ளது" என்று அவர் கூறிய வார்த்தைகள் எவ்வளவு ஆணித்தரமாகவும் உறுதியுடனும் ஒலிக்கின்றன! கிறிஸ்துவுக்குள் இப்படிப்பட்ட திடநிலையுடன் ஒருவர் பேசுவது, “நல்ல போராட்டத்தைப் போராடினேன்…” என்று சொல்லிய அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளை நினைவூட்டுகிறது.
ரிங்கல்தௌபேக்குப் பிறகு திருநெல்வேலி மிஷனின் வளர்ச்சிப் பாதை எதை நோக்கிச் சென்றது? அடுத்தகட்ட மிஷனரிகளின் வருகை திருச்சபையில் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கியது? என்பதை அடுத்த இதழில் விரிவாகக் காண்போம்.
“அறியாமை இருளில் சுடர் விளக்காய்,
அயராது உழைத்தான் அந்தத் தேவ ஊழியன்!
இயேசு கிறிஸ்துவே அஸ்திபாரமாய் நின்றதால்,
விதைத்தவன் மறைந்தாலும் விதை மரிக்கவில்லை,
விருட்சமாய் வளர்ந்து சாட்சி பகரும்!”
தொடர்ந்து பயணிப்போம்...
படைத்தவரின் பாதையில்,திருமதி. ரெமினா சுஜித்
