முன்னைய பதிவுகளில் நாம் திருநெல்வேலியின் பழமையான வரலாற்றினையும், அப்பகுதியில் ரோம கிறிஸ்தவம் எவ்வாறு காலூன்றியது என்பதையும் விரிவாக ஆராய்ந்தோம். குறிப்பாக, இப்பகுதி மக்கள் கிறிஸ்தவத்தையும் ரோம கிறிஸ்தவத்தின் போதனைகளையும் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதை விளக்கமாக பார்த்தோம். இந்த மாத பதிப்பில், அந்த வரலாற்று தொடரின் அடுத்த அத்தியாயத்தை தொடர்ந்து காண்போம்.

1600ம் ஆண்டிலிருந்து, இப்பணித்தளத்தின் வரலாறு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது:

  • தென்னிந்தியாவில் ஜெசுயிட் சபையின் மிகப்பெரிய மற்றும் முக்கிய மையமாக விளங்கிய மதுரை பணித்தளம் (Madura Mission)
  • கடலோர பணித்தளம் (Coast Mission),
  • திருநெல்வேலி (Tinnevelly) உள்நாட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள். (Inland Mission)

மதுரை பணித்தளம் (Madura Mission)

மதுரை பணித்தளமும் நோபிலியும் (The Madura Mission and Nobili) (1600-1744)

கருவாடு வியாபாரத் தொடர்பில், பரதவ மக்கள் கூட்டத்தினர் (Paravas) பல்வேறு நகரங்கள் மற்றும் பெரிய கிராமங்களில் வசித்து வந்தனர். குறிப்பாக, மதுரையில் (Madura) ஒரு குழுவினர் வாழ்ந்தனர். 1595ல் பாதிரியார் கொன்சால்வ் பெர்னாண்டஸ் (Fr. Gonzalve Fernandez) தலைமையில் மதுரை ஒரு மிஷன் நிலையமாக திறக்கப்பட்டது. அவர் விரைவில் ஒரு தேவாலயம் மற்றும் மருத்துவமனையைக் கட்டினார். பிராமணர்களிடையே சுவிசேஷம் அறிவித்து வந்தவர் இந்து குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக பள்ளியையும் திறந்தார். எனினும், பரதவ மக்கள் கூட்டத்தினரை தவிர மற்ற மக்கள் கூட்டத்தினரிடையே அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

1606ல், பாதிரியார் ராபர்ட் தே நோபிலி (Fr. Robert de Nobili) மதுரைக்கு வந்தார். அவர் அக்காலத்தில் உயர்வாக கருதப்பட்ட மக்கள் கூட்டத்தினரிடையே புதிய மற்றும் துணிச்சலான முறையில் பணியாற்றத் தொடங்கினார். உயர்வாக கருதப்பட்ட இந்து பிராமணர்கள் மட்டுமல்லாமல், அந்தக் காலக்கட்டத்தில் இம்மக்களால் தாழ்வாக கருதப்பட்ட வேளாளர்கள் (Vellalas) போன்ற சூத்திர மக்கள் கூட்டத்தினரும் - போர்த்துகீசியர்கள் மற்றும் சாதி ஒதுக்கப்பட்டவர்கள் மூலம் வந்த கிறித்தவத்தை ஏற்க மறுத்தனர். போர்த்துகீசிய பரங்கிகளை (வெளிநாட்டவர்களை அக்காலத்து மக்கள் பரங்கிகள் என்று அழைத்தனர்) அவர்கள் மாட்டிறைச்சி உண்பவர்களாகவும், தேவாலயங்களில் காலணி அணிபவர்களாகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் கூட்டத்தினரின் சேவையை ஏற்றுக்கொள்பவர்களாகவும் பார்த்தனர்.

நோபிலி தன்னை ஒரு பரங்கி அல்ல, ஒரு ரோமானிய அரச அல்லது போர்வீரர் குலத்தைச் சேர்ந்தவர் என்று அறிவித்தார். அவர் உயர் சாதி சந்நியாசியின் உடையையும் வாழ்க்கை முறையையும் பின்பற்றினார். பிராமண வேலையாட்களால் மட்டுமே சேவை செய்யப்பட அனுமதித்தார். பாதிரியார் பெர்னாண்டஸ் மற்றும் பிற போர்த்துகீசியர்கள் அல்லது தாழ்ந்த சாதி கிறிஸ்தவர்களுடனான தொடர்புகளை ரகசியமாக மட்டுமே வைத்துக்கொண்டார். நகரின் பிராமணர் பகுதியில் தனக்கென தனி தேவாலயத்தையும் கட்டினார்.

மற்றொரு புறம், நோபிலி "உயர் இந்து மதக்" கோட்பாடுகளைக் கற்றுக்கொண்டு, கிறிஸ்தவக் கோட்பாடுகளை அதன் சொற்களால் விளக்க முயன்றார். உயர்தர தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் முழுமையான தேர்ச்சி பெற்றதால், மத விவாதங்களில் மிகவும் அறிவுள்ள பிராமணர்களை சமாளிக்க முடிந்தது. கிறிஸ்தவ வரலாறு மற்றும் கோட்பாடுகளை உள்ளடக்கிய "நான்காவது வேதம்" என்ற நூலை வெளியிட்டார்.

1611ல் அவர் 87 உயர் சாதி இந்துக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார், 1623ல் அது 300 ஆக உயர்ந்தது. 1658ல், தனது மேலதிகாரிகளின் ஒப்புதலுடன், உயர் சாதியினர் மற்றும் தாழ்ந்த சாதியினரிடையே பணிபுரிவதற்கான ஒரு முறையை உருவாக்கினார். சந்நியாசி மிஷனரிகள் பிராமணர்களுக்கும், பண்டார சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட பிற மிஷனரிகள் தாழ்ந்த சாதியினருடனும் மிசனரி பணி செய்தனர்.

1648ல் நோபிலி உடல்நிலை காரணமாக யாழ்ப்பாணத்திற்கும் (Jaffna), பின்னர் மயிலாப்பூருக்கும் (Mylapore) அனுப்பப்பட்டார். அங்கு தனிமையில் வாழ்ந்து, கடுமையான தவ வாழ்க்கையை தொடர்ந்து, 1656ல் காலமானார். அப்போது மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியில் பிராமண குருமார்களுடன் தொடர்புடைய சுமார் ஆயிரம் கிறிஸ்தவர்களும், மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் இரண்டரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்ந்த சாதி கிறிஸ்தவர்களும் இருந்தனர்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மிஷன் இதே பாதையில் தொடர்ந்தது. கிறிஸ்தவ சபைகள் பாண்டிச்சேரி (Pondicherry), மைசூர் (Mysore), கோல்கொண்டா (Golconda/Hyderabad), மறவர் நாடு (இராமநாதபுரம்) மற்றும் திருநெல்வேலி வரை பரவின. 1703ல் பிரெஞ்சு ஜெசுயிட்டுகள் பாண்டிச்சேரியிலிருந்து வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளின் பணிகளை ஏற்றுக்கொண்டனர்.

போர்கள், பஞ்சங்கள் மற்றும் கடுமையான துன்புறுத்தல்களால் கிறிஸ்தவர்களும், மிஷனரிகளும் பாதிக்கப்பட்டனர். மறவர் நாட்டில் 1686-1695 காலக்கட்டத்தில் கடும் துன்புறுத்தல்கள் நடந்தன. பாதிரியார் ஜான் தே பிரிட்டோ (Fr. John de Britto) 1693ல் வோர்லூரில் (Worlur) மரித்தார். சில ஆண்டுகள் அமைதி நிலவியது, ஆனால் 1710, 1714, 1715 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் துன்புறுத்தல்கள் தொடர்ந்தன.

குறிப்பாக 18ஆம் நூற்றாண்டில், நோபிலி மற்றும் அவரை சார்ந்தவர்கள் பின்பற்றிய கொள்கைகள் மற்றும் செயல் முறைகளுக்கு எதிராக கடும் எதிர்ப்புகளை மதுரை மிஷன் சந்தித்தது. 1623ல் பதினைந்தாம் கிரகோரியின் (Gregory XV) நிருபம், பிராமண பூநூலை சமூக அந்தஸ்து மற்றும் பதவியின் அடையாளமாகவும், இந்து குளியல் விதிகளை சுகாதார விஷயமாகவும் கருத அனுமதித்தது.

1704ல், மலபார் சடங்குகள் என்று அழைக்கப்பட்ட விவகாரத்தை கையாள இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட கர்தினால் டி டூர்னான் (Cardinal de Tournon), மிஷனரிகள் இந்து மதத்துடன் இணக்கமாக இருக்க கூடிய அளவை கணிசமாக குறைத்தார். குறிப்பாக சாதி ஒதுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குள் பிராமண மிஷனரி நுழைய வேண்டும் என்றும் நோயுற்ற சாதி ஒதுக்கப்பட்டவர்களுக்கு திருவருட்சாதனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். 1706ல் போப் இந்த உத்தரவுகளை ஏற்றுக்கொண்டார்.

மதுரை மிஷனின் குருக்கள் இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதைத் தவிர்த்தனர். 33 ஆண்டுகள் அவர்களும் அவர்களது நண்பர்களும் தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தினர். ஆனால் 1727 மற்றும் 1754ம் ஆண்டிலும் ரோம் இந்த உத்தரவுகளை உறுதிப்படுத்தியது. 1739ல் அனைத்து பிஷப்புகளும் மிஷனரிகளும் இதற்கு கீழ்ப்படிவதாக சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இறுதியாக, 1744ல் பதினான்காம் பெனடிக்டின் (Benedict XIV) நிருபம் முந்தைய முடிவுகளை உறுதிப்படுத்தியது. அதே சமயம், சில மிஷனரிகள் தாழ்ந்த சாதியினரிடையே மட்டும் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது.

இந்த முடிவுகள் தாழ்ந்த சாதியினருக்கும் உயர் சாதியினருக்கும் முற்றிலும் தனித்தனி தேவாலயங்கள் கட்டப்படுவதற்கு வழிவகுத்தது. 1650 முதல் இரட்டை தேவாலயங்கள் கட்டும் முறை பின்பற்றப்பட்டது. அதாவது இரண்டு முற்றிலும் தனித்த பகுதிகள் மற்றும் தனி நுழைவு வாயில்களுடன், ஆனால் தாழ்ந்த சாதி கிறிஸ்தவர்கள் உயர் சாதிப் பகுதியின் ஆல்டர் பகுதியினை ஒரு வாயில் வழியாகப் பார்க்க முடியும்படி அமைக்கப்பட்டிருந்தது. 1744க்குப் பிறகு மதுரை, காமையநாயக்கன்பட்டி (Kámai yánayakanpatti) (அப்போது திருநெல்வேலியின் முக்கிய நிலையங்களில் ஒன்று), மற்றும் திருநெல்வேலியில் தனியாக தாழ்ந்த சாதியினருக்கென்று தேவாலயங்கள் கட்டப்பட்டன.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, போப்பின் ஆணைகளை அமல்படுத்துதலும், தாழ்ந்த சாதி மிஷனரிகளை நியமித்தலும் மிஷன் குருக்கள் எதிர்பார்த்த விளைவுகளையே ஏற்படுத்தின. தாழ்ந்த சாதி மிஷனரிகளுடன் தொடர்பு கொண்ட அனைத்து சூத்திர கிறிஸ்தவர்களையும் அவர்களது சாதியினர் புறக்கணித்தனர். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கிறிஸ்தவத்திற்கு வந்தனர் - வெவ்வேறு ஆதாரங்களின்படி பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை. அந்த நேரத்தில் மிஷனுடன் தொடர்புடைய கிறிஸ்தவர்களின் மொத்த எண்ணிக்கை:

மறவர் நாடு மற்றும் மீனவர் கரையோரத்தில் 120,000,

மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியில் (மதுரை என்பது திருநெல்வேலி உள்நாட்டையும் உள்ளடக்கியது) 150,000,

கர்நாடகத்தில் (Carnatic) 80,000,

மைசூரில் 35,000 ஆக இருந்தது.

கடலோர பணித்தளம் (Coast Mission)

கடற்கரையோர மிஷனும் உள்நாட்டு விரிவாக்கமும் (1600-1773)

கடற்கரையோர மிஷனின் பாதிரியார்கள் இந்த உத்தரவுகளை (பெனடிக்டின் நிருபம்) தங்கள் பணிக்கு ஒரு கடும் அடியாக உணர்ந்தனர். ஆனால் விரைவில் போர்த்துகீசிய அரசாங்கம் ஜேசுயிட் சமுதாயத்தை அழிக்க வேண்டுமென்றே முடிவெடுத்து அதில் வெற்றி பெற்றபோது, மிஷன் முழுவதுமாக சரிந்து விழுந்தது. 1759ல், மேற்குக் கடற்கரையில் இருந்த அனைத்து ரோம மிஷனரிகளும் நாடு கடத்தப்பட்டனர். உள்நாட்டிலும் கிழக்குக் கடற்கரையிலும் இருந்தவர்களுக்கான நிதியும் நிறுத்தப்பட்டது. உள்நாட்டிலும் கிழக்குக் கடற்கரையிலும் இருந்த சில மிஷனரிகள் ஒவ்வொருவராக இறக்கும் வரை அங்கேயே தங்கினர். மேற்குக் கடற்கரையிலிருந்து சில கோவன் (Goan) பாதிரியார்கள் அனுப்பப்பட்டனர். ஆனால் மிஷன் பகுதி முழுவதிலும் உள்ள பணி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்டது என்று சொல்வது மிகையாகாது.

1600 முதல் 1773 வரை, கடற்கரையோர மிஷன் வளர்ச்சியையும் கஷ்டங்களையும் சந்தித்தது. 1609 முதல் 1621 வரை, கொச்சின் (Cochin) பிஷப்புடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜேசுயிட் பாதிரியார்கள் கடற்கரையிலிருந்து விலக வேண்டியிருந்தது. சபைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. முத்துக்குளிப்பு தொழில் பன்னிரண்டு ஆண்டுகள் நடைபெறாததும் இதற்கு காரணமாக அமைந்தது. 1616ல், ஒரு பாதிரியார் கூற்றுப்படி, பெரும்பாலான தேவாலயங்கள் அழிக்கப்பட்டன, பல கிறிஸ்தவ கிராமங்கள் கிட்டத்தட்ட வெறிச்சோடிப்போயின. இந்துக்களிடையே சிதறடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இந்து பழக்கவழக்கங்களுக்கு திரும்பினர். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இருந்த இடத்தில் ஆறாயிரம் பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

1621ல் பாதிரியார்கள் திரும்பி வந்ததால், பணிகள் மீண்டும் முன்னேறியது. 1644ல், கடற்கரையில் பணியாற்றிய பன்னிரண்டு பாதிரியார்களின் கீழ் மொத்தம் இருபத்தாறாயிரம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். இதில் திருநெல்வேலி (Tinnevelly) உள்நாட்டில் ஆயிரத்து ஐந்நூறு பேர் அடங்குவர்.

1658ல், டச்சுக்காரர்கள் தூத்துக்குடி (Tuticorin) மற்றும் முத்துக்குளிப்பு கடற்கரையைக் கைப்பற்றினர். கடற்கரை நகரங்களிலிருந்து பாதிரியார்களை வெளியேற்றி, மீன்பிடி மக்களை புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்திற்கு மாற்ற முயன்றனர். டச்சுக்காரர்களின் குருவானவர் பிலிப் பால்டேயஸ் (Philip Baldaeus) கூறியதாவது:

"ரோமன் கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்ததிலிருந்து, மீன்பிடி மக்கள் கிறிஸ்தவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தனர். அவர்களை புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்திற்கு இழுப்பது மிகவும் கடினம். ஜெப மாலை பயன்படுத்துவதும், சிலுவை அடையாளம் செய்வதும் தவிர, தாங்கள் பின்பற்றுவதாகக் கூறும் கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுகளை அவர்கள் அறியவில்லை. 1661ல், கடற்கரையோர தேவாலயங்களைப் பார்வையிட்டு அங்கு சீர்திருத்தத்தை கொண்டுவர முயற்சிக்குமாறு தூத்துக்குடியிலிருந்து கொல்லம் (Quilon) வரை பயணம் மேற்கொள்ள எனக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த நாட்டில் இன்னும் பெரும் எண்ணிக்கையில் போப்பின் பாதிரியார்கள் இருந்ததால் எனது முயற்சிகள் பலனளிக்கவில்லை."

பின்னர் அவர் கூறுகையில், மீன்பிடி கிறிஸ்தவர்கள் விசுவாச அறிக்கை, கர்த்தரின் ஜெபம், பத்து கட்டளைகள், மற்றும் ஹெயில் மேரி ஆகியவற்றை மனப்பாடமாகச் சொல்ல முடிந்தது என்றும், அவர் புறப்பட்ட பிறகு, "லிஸ்பன் (Lisbon) நகரைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய ஜான் பெரேரா அல்மெய்யா (John Fereira Almeya) ஒரு வருடம் முழுவதும் மீன்பிடி மக்களை சீர்திருத்த முயன்றார், ஆனால் என்னை விட குறைவான வெற்றியே பெற்றார்" என்றும் குறிப்பிட்டார்.

தூத்துக்குடியைப் பற்றி பால்டேயஸ் குறிப்பிடுகையில், "இது சுவர்கள், அகழிகள் அல்லது வாயில்கள் இல்லாத ஒரு பெரிய கிராமம் தான். மூன்று விசாலமான தேவாலயங்களும், கடலில் இருந்து நல்ல தோற்றத்தை அளிக்கும் கல்லால் கட்டப்பட்ட ஏராளமான அழகிய வீடுகளும் உள்ளன."

சிறிது காலத்திற்குப் பிறகு, டச்சுக்காரர்கள் மீன்பிடி மக்களை தங்கள் ஆலயத்துக்கு வரும்படி கட்டாயப்படுத்த முயன்றபோது, சாதித் தலைவர் சீர்த்திருத்த டச்சு தேவாலயத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்று தடை விதித்தார். ஒரே ஒரு நபர் மட்டுமே சென்றார். அவர் தேவாலயத்திலிருந்து வெளியே வந்தபோது தலைவர் அனுப்பிய ஆயுதம் ஏந்திய மனிதர்கள் அவரைக் கொன்றனர். டச்சுக்காரர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. எனினும், பின்னர் வந்த டச்சு ஆளுநர்கள் ரோம பாதிரியார்கள் தூத்துக்குடிக்குத் திரும்ப அனுமதித்தனர். 1700க்குள் அவர்களுக்கும் டச்சு அதிகாரிகளுக்கும் இடையே நல்ல உறவுகள் ஏற்பட்டன. தூத்துக்குடியில் உள்ள டச்சு தேவாலயம் 1750ல் கட்டப்பட்டது. இறுதியில் அது தென் இந்திய திருச்சபையின் (Church of South India) பயன்பாட்டுக்கு மாறியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1700ல் கடற்கரையில் இருந்த முக்கிய கிறிஸ்தவ கிராமங்கள் தெற்கிலிருந்து வடக்காக பெரியதாழை (Periyathalai), மணப்பாடு (Manappad), ஆலந்தலை (Alandalai), புன்னைக்காயல் (Punnaikayal), மற்றும் தூத்துக்குடி (Tuticorin) ஆகியவை.

1719ல், மீன்படி கிறிஸ்தவர்கள் மிஷனரிகளுக்கு எதிராக ஒரு வகையான கலகம் செய்தனர். திருச்சிராப்பள்ளி (Trichinopoly)யிலிருந்து பாதிரியார் பெர்தோல்டி (Fr. Bertholdi) திருச்சபையில் ஒழுங்கை மீட்டெடுக்கவும் ஆன்மீக வாழ்வை புதுப்பிக்கவும் உதவ அனுப்பப்பட்டார்.

1720ல் அவர் எழுதியதாவது: "தங்களது இயல்பான சூழ்ச்சி மனப்பான்மையால் ஈர்க்கப்பட்டு, டச்சுக்காரர்களால் வழிநடத்தப்பட்டு, ரோம கிறிஸ்தவத்தை மறைமுகமாக அழிக்க அவர்களின் உணர்ச்சிகளைப் பயன்படுத்திக்கொண்டனர். வெளிப்படையான தாக்குதல்கள் பலனளிக்காத நிலையில், மீன்பிடி மக்கள் தங்கள் மிஷனரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, சூழ்ச்சிகள் மற்றும் வன்முறை மூலம் அனைவரையும் கடற்கரையிலிருந்து வெளியேற்றினர்."

அவர் வந்தபோது, புயல் தணிந்திருந்தது, மிஷனரிகளும் திரும்பி வந்திருந்தனர். ஆனால் ரோம திருச்சபைக்குள் கடுமையான மாற்றங்கள் இருந்தன. அவர் தூத்துக்குடியில் ஒரு மாதம் இக்னேஷியன் தியானத்தை நடத்தினார். இது சாதித் தலைவர் ஸ்டீபன் டா குரூஸ் (Stephen da Cruz) உட்பட பலரை மீண்டும் ரோம கிறிஸ்தவத்திற்கு மாற வைத்தது. புன்னைக்காயலிலும் மணப்பாட்டிலும் இதே போன்ற தியானங்கள் நடத்தப்பட்டன.

1760ல், கடற்கரையில் முப்பத்தைந்து தேவாலயங்களுடன் எட்டு மிஷன் நிலையங்கள் இருந்தன.

திருநெல்வேலி (Tinnevelly) உள்நாட்டுப் பகுதியில் கிறிஸ்தவம் (Inland Mission)

இப்போது திருநெல்வேலி மாவட்டத்தின் உள்பகுதிகளில் கிறிஸ்தவம் வளர்ந்த விதத்தை பார்ப்போம். 1600க்குள், கிறிஸ்தவம் கடற்கரையிலிருந்து உள்நோக்கி பரவத் தொடங்கியது. முக்கியமாக மீன்பிடி மக்களிடையே, மேலும் பிற தாழ்த்தப்பட்ட சாதியினரிடையேயும் பரவியது. 1600ல், கடற்கரை பாதிரியார்களில் ஒருவர் உள்நாட்டுப் பணிக்கு நியமிக்கப்பட்டார். 1602ல் மிஷனிலிருந்து ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்ட வருடாந்திர கடிதம் கூறுவதாவது:

"பாதிரியார்கள் உள்நாட்டில் சற்று தூரம் ஊடுருவியுள்ளனர். அங்கு ஐந்து தேவாலயங்களும், 2,400 கிறிஸ்தவர்களும் உள்ளனர். உள்நாட்டில் பன்னிரண்டு லீக்குகள் தொலைவில், முன்பு நாயக்கர்களும் நாட்டின் தலைவர்களும் வசித்த பெரிய நகரத்திற்கு சற்று வெளியே புனித பர்த்தலோமியோவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயம் ஒன்று உள்ளது. கடவுளின் உதவியுடன் ஒரு பெரிய கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே அங்கு ஐம்பது கிறிஸ்தவர்கள் உள்ளனர். நகரத்திற்குள்ளேயே ஒரு தேவாலயம் கட்ட நகரின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பாதிரியார்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மட்டுமே காரியங்கள் தாமதமாகின்றன." இந்த பெரிய நகரம் பாளையங்கோட்டை (Palamcottah) அல்லது திருநெல்வேலியாக (Tinnevelly) இருக்க வேண்டும்.

அடுத்த ஆண்டில், ஒரு பாதிரியார் உள்நாட்டில் பதினான்கு லீக்குகள் தூரம் சென்று, ஒன்பது தேவாலயங்களைக் கட்டியதாக தெரிவிக்கப்பட்டது. 1621ல், முன்பு குறிப்பிட்டபடி பாதிரியார்கள் பன்னிரண்டு ஆண்டுகள் கடற்கரையில் இல்லாத நிலையில், உள்நாட்டுப் பணி புதுப்பிக்கப்பட்டது. ஒரு பாதிரியார் சபைகளைப் பார்வையிட்டு புதுப்பிக்க உள்நாட்டில் நீண்ட பயணம் மேற்கொண்டார். திருக்கலூரில் (Tirukalur) (ஸ்ரீவைகுண்டம் அருகே) சுமார் எழுநூறு கிறிஸ்தவர்களையும், நாயக்கர் ராஜ்யத்தின் இரண்டாவது முக்கிய நகரமான பாளையங்கோட்டை, அல்லது திருநெல்வேலியான பாளையத்திலும் (Palayam) கிறிஸ்தவர்களைக் கண்டார்.

1644க்குள், திருக்கலூர் ஒரு முறையான மிஷன் நிலையமாக மாறியது. அங்கு ஒரு தேவாலயமும் ஐந்நூறு கிறிஸ்தவர்களும் இருந்தனர். உள்நாட்டில் முறையான தேவாலயம் இருந்த ஒரே இடம் இது தான். மற்ற இடங்களில் சிறிய சிற்றாலயங்கள் மட்டுமே இருந்தன. திருக்கலூர் பாதிரியார் பார்வையிட்ட கிராம சபைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது: “ ஸ்ரீவைகுண்டம் (Srivaigundam) (133 கிறிஸ்தவர்கள்), பாளையம் (70), மற்றும் கயத்தார் (Kayattar) (18), பாளையங்கோட்டையிலிருந்து வடமேற்காக வீரவநல்லூர் (Viravenallur) வழியாக கடையநல்லூர் (Kadaiyanallur) வரை நீண்ட சிறு சபைகளின் வரிசை, மேலும் மலைகளுக்கு அருகே களக்காடு (Kalakad) உட்பட தென்மேற்கே சில சபைகள்,”.

1650 முதல், திருநெல்வேலி மாவட்டத்தின் உள்பகுதிகள் (குறைந்தபட்சம் மீன்பிடி மக்கள் அல்லாத சபை) மதுரை (Madura) அல்லது திருச்சிராப்பள்ளியிலிருந்து இயக்கப்பட்டதாகத் தெரிகிறது. 1680 வாக்கில் கயத்தார் ஒரு குறிப்பிட்ட மிஷன் நிலையமானது, ஆனால் 1688ல் காமையநாயக்கன்பட்டி (Kamaiyanayakanpatti) மிஷனரியின் வசிப்பிடமாக மாறியது.

1680 வாக்கில், வடக்கன்குளம் (Vadakankulam) சாந்தை (Sandai) என்ற சாணார் பெண்ணின் மனமாற்றத்துடன் அவர்களுக்கென்று முதல் ரோம கிறிஸ்தவ சபை தொடங்கியது. 1685ல் அங்கு ஒரு ரோம தேவாலயம் கட்டப்பட்டது. 1701ல் அது ஒரு மிஷன் நிலையமாக்கப்பட்டது. மிஷன் முறிவடையும் வரை வடக்கன்குளமும் காமையநாயக்கன்பட்டியும் தொடர்ந்து செயல்பட்டன.

1715ல், வடக்கன்குளம் பங்கில் 4,128 கிறிஸ்தவர்கள் இருந்தனர். இவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் சாணார்கள். எனினும் 1740 வாக்கில் சில வெள்ளாளர்களும் (Vellala) அங்கு சேர்ந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டில் சிறிது காலம், பாளையங்கோட்டையிலிருந்து தென்காசிக்கு (Tenkasi) செல்லும் சாலையில் ஆலங்குளம் (Alankulam) அருகே உள்ள குருகல்பட்டி (Gurukalpatti) என்ற சிறிய கிராமம் காமையநாயக்கன்பட்டிக்கு பதிலாக மிஷனரியின் வசிப்பிடமாக இருந்தது.

பிரபல மிஷனரியும் அறிஞருமான பாதிரியார் கான்ஸ்டன்ட் பெஸ்கி (Fr. Constant Beschi) 1715 முதல் 1716 வரை அங்கு வசித்தார். ஒரு முறை கிராமத்து பிராமணர்கள் அவரைக் கொல்ல இருந்தபோது, கயத்தாரில் உள்ள கிறிஸ்தவர்கள் காப்பாற்றினார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்திற்குச் சற்று பிறகு, அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு 1740 வரை அங்கு பணியாற்றினார். அந்த ஆண்டில், மராட்டியர் படையெடுப்பின் போது, மராட்டியர்கள் ஆக்கிரமித்த மாவட்டங்களிலிருந்து அனைத்து மிஷனரிகளும் தப்பி ஓட வேண்டியிருந்தது. பெஸ்கி மணப்பாட்டிற்கு வந்து இறக்கும் வரை அங்கு வாழ்ந்தார். [1742 முதல் 1746]

வீழ்ச்சியும் புதுப்பிப்பும் (1773-1837)

மதுரை மிஷனுடன் தொடர்புடைய மறவர் நாட்டைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இதன் தெற்குப் பகுதி தற்போது இராமநாதபுரம் (Ramnad) மாவட்டமாக உள்ளது. இப்பகுதியில் மிஷன் பணி 1660-ஆம் ஆண்டளவில் தொடங்கியது. 1715-இல், கடற்கரைப் பகுதிகளிலும், இராமநாதபுரத்திற்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கே உள்ள தீவுகளிலும் தேவாலயங்கள் இருந்தன. உள்நாட்டில் தேவாலயங்கள் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை, ஆனால் அடிக்கடி ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் துன்புறுத்தல்களால் அவற்றின் எண்ணிக்கையும் வலிமையும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தன.

1742-ஆம் ஆண்டில் மறவர் அரசில் பணியாற்றிய பாதிரியார் ரோசி (Fr. Rossi), தரங்கம்பாடியின் (Tranquebar) புராட்டஸ்டன்டுகள் மறவர் நாட்டிற்குள் ஊடுருவியதாகவும், லஞ்சம் மற்றும் சூழ்ச்சிகள் மூலம் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களை மாற்ற முயன்றதாகவும், ஆனால் அது வெற்றி பெறவில்லை என்றும் குறிப்பிட்டார். இதனைப் பற்றி நமது அடுத்த அத்தியாயத்தில் விரிவாக காண்போம். 1731-இல், திருச்சிராப்பள்ளி (Trichinopoly) மாவட்டத்திலிருந்து பெஸ்கி (Beschi) எழுதியதாவது:

"லூத்தரன்களால் இந்த மிஷனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நரக வெறியுடன் இருந்து, மந்தையைச் சுற்றி இரையைத் தேடி அலைகின்றனர்."

ஏற்கனவே குறிப்பிட்டபடி, ஜேசுயிட் பாதிரியார்கள் 1759-இல் மேற்குக் கரையிலிருந்து வெளியேற்றப்பட்டனர், மற்றும் மிஷனே 1773-இல் கலைக்கப்பட்டது. எனினும், கிழக்குக் கடற்கரையிலும் உள்நாட்டிலும் இருந்த சில பாதிரியார்கள், உள்ளூர் கிறிஸ்தவர்களின் நன்கொடைகளில் வாழ்ந்து, போர்த்துகீசிய கிராங்கனூர் (Cranganore) பேராயர் மற்றும் கொச்சின் (Cochin) ஆயரின் கீழ் தொடர்ந்து பணியாற்றினர். 1775-இல், மீனவர் கடற்கரையில் ஆறு பாதிரியார்களும், திருநெல்வேலியின் (Tinnevelly) உள்நாட்டில் வடக்கன்குளத்தில் (Vadakankulam) ஒருவரும், மறவர் நாட்டில் ஒருவரும் இருந்தனர்.

போர்த்துகீசிய ஆயர்கள் கோவாவிலிருந்து (Goa) இந்திய அல்லது இந்தோ-போர்த்துகீசிய பாதிரியார்களை அனுப்பி மிஷன்களுக்கு உதவினர். ஜேசுயிட் பாதிரியார்கள் படிப்படியாக இறந்ததும், பணி முழுவதும் இந்த பாதிரியார்களிடம் விடப்பட்டது. கடற்கரையில், 1790 வரை வீரபாண்டியபட்டினம் (Virapandiyapatnam), ஆலந்தலை (Alandalai), மணப்பாடு (Manappad), மற்றும் ஊவரி (Uvari) ஆகிய இடங்களில் ஜேசுயிட் பாதிரியார்கள் இருந்தனர். மணப்பாடு கடைசியாக பாதிரியார் தங்கியிருந்த கடற்கரை நிலையமாக இருந்தது.

வங்காளம் (Bengal) மற்றும் புதுச்சேரியில் (Pondicherry) ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த பிரெஞ்சு சோசைட்டி டெஸ் மிஷன்ஸ் எட்ராங்ஜெர்ஸ் (French Société des Missions Étrangères), 1771-இல் ரோமால் ஜேசுயிட்டுகளின் கர்நாடக மிஷனின் பொறுப்பை பெற்றது. 1776, 1778, மற்றும் 1785-இல் மதுரை மற்றும் மீனவர் கடற்கரை மிஷன்களின் பொறுப்பையும் தெளிவற்ற வார்த்தைகளில் பெற்றது.

எனினும், மேற்குக் கடற்கரையிலுள்ள போர்த்துகீசிய பாதிரியார்கள் அந்த மாவட்டங்களின் மீதான தங்கள் அதிகாரத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் பிரெஞ்சு மிஷனரிகளின் பணிக்கு இயல்பாக எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், வெறும் மந்தமான ஒத்துழைப்பை மட்டுமே வழங்கினர். கோவன் பாதிரியார்களும் அதை தடுக்க எதுவும் செய்யவில்லை. எனவே, பிரெஞ்சு மிஷனரி சமூகம், தனது முயற்சிகளில் இவ்வாறு தடைப்பட்டு, பணியாளர்களும் குறைவாக இருந்ததால், மதுரை மற்றும் மீனவர் கடற்கரை மாவட்டங்களுக்கு உதவ எதுவும் செய்ய முடியவில்லை.

இறுதியாக, மேலும் திட்டவட்டமான அதிகாரங்களுக்கான பிரெஞ்சு சமூக ஆயர்களின் வேண்டுகோள்களுக்கு, 1836-இல் கோரோமண்டல் கடற்கரை மற்றும் மதுரை மிஷன் மாவட்டத்தின் விகாரியேட் அப்போஸ்தல ஊழியர்களை உருவாக்குவதன் மூலம் பதிலளிக்கப்பட்டது. இந்த பகுதிகளின் அனைத்து மிஷன் பணிகளும் போர்த்துகீசிய ஆயர்களின் அதிகார வரம்பிலிருந்து நீக்கப்பட்டன. அதே நேரத்தில், பிரெஞ்சு சமூகத்தின் வேண்டுகோளின் பேரில், மதுரை மற்றும் மீனவர் கடற்கரை மிஷன்கள் 1814-இல் மீண்டும் நிறுவப்பட்ட ஜேசுயிட் சமூகத்திடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. புதிய மிஷனின் முதல் பாதிரியார்கள் 1837-இல் வந்தனர்.

மேற்குக் கடற்கரையிலிருந்து ஜேசுயிட் பாதிரியார்கள் நாடு கடத்தப்படும் வரை, கோவன் பாதிரியார்கள் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டனர். அதன் பிறகு, பிரெஞ்சு சமூக மிஷனரிகள் மற்றும் பின்னர் வந்த ஜேசுயிட்டுகளின் சாட்சியின்படி, இந்த பாதிரியார்களின் தரம் வேகமாக குறைந்தது. பெரும்பாலானோர் இந்தோ-போர்த்துகீசியர்கள், மற்றும் ஒரு அதிகாரி கூறுகையில், அவர்களிடம் போர்த்துகீசியர்களின் அனைத்து குறைபாடுகளும் தீய குணங்களும் இருந்தன. அவர்களுக்கு தமிழ் சிறிதளவே தெரியும், சமூக உயர்வு குறித்த தங்கள் சொந்த உணர்வால் நிரம்பியிருந்தனர், பெரும்பாலும் குடிகாரர்களாகவும் சண்டைக்காரர்களாகவும் இருந்தனர், போர்த்துகல் அரசர்களுக்கு முன்னாள் போப்புகள் வழங்கிய சிறப்பு சலுகைகளுக்கு அப்பால் கிறிஸ்தவத்தைப் பற்றி தெரியாதவர்களாக இருந்தனர்.

அந்த காலகட்டத்தின் பிரெஞ்சு மிஷனரி ஒருவர், அவர்கள் பொதுவாக அறியாமையுடனும், சோம்பேறிகளாகவும், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருந்ததாகவும், சாதுரியமற்ற தங்கள் தன்மையால் சபைகளை தங்களுக்கு எதிராக தூண்டிவிட்டதாகவும் விவரிக்கிறார்.

கோவன் பாதிரியார்களைப் பற்றிய இந்த விவரிப்புகள் போர்த்துகீசிய எதிர்ப்பு பாரபட்சத்தால் சிறிது நிறமேற்றப்பட்டிருக்கலாம், ஆனால் 1820 மற்றும் 1830-க்கு இடையில் பாளையங்கோட்டையில் (Palamcottah) இருந்த புராட்டஸ்டன்ட் மிஷனரிகளின் கூற்றுப்படி பெரும்பாலானவர்கள் அறியாமையுடன் இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்கின்றனர். எனினும், விதிவிலக்குகளும் இருந்தன. 1820-இல் ஹஃப் (Hough), சிலர் மிகவும் கல்வியறிவு பெற்றிருந்ததாகவும், 1829-இல் ரேனியஸ் (Rhenius) "மாவட்டத்தை விட்டு சமீபத்தில் சென்ற திரு. பியடேட் (Mr. Piedade), ரோமன் கத்தோலிக்க விகாரியார்" பற்றி "அவர் இங்கிருந்த காலத்தில் மிக நன்றாக நடந்துகொண்டார், நம்பிக்கை கொண்டவராகவும் சுவிசேஷத்தை மதிப்பவராகவும் தோன்றுகிறார்" என்றும் கூறுகிறார்.

எந்த நிலையிலும், கோவன் பாதிரியார்கள் எண்ணிக்கையில் போதுமானதாக இல்லை, பொதுவாக நிலையான குருத்துவப் பொறுப்புகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் திருச்சடங்குகளை நிர்வகிக்க சுற்றுப்பயணம் செய்தனர். மேலும் அவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடமிருந்து எந்த மேற்பார்வையையோ உதவியையோ பெற்றதாகத் தெரியவில்லை. இந்த நிலைமைகளில், சபைகள் எண்ணிக்கையில் கணிசமான இழப்புகளையும், தரத்தில் மிகவும் கடுமையான இழப்புகளையும் சந்திப்பது தவிர்க்க முடியாததாக இருந்தது. கணிசமான எண்ணிக்கையிலானோர் இந்து மதத்திற்குத் திரும்பினர்.

பின்னர் வரும் அத்தியாயங்களில் நாம் காணப்போவதுபோல், சிலர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை வழங்கத் தவறிய உயிர்த்துடிப்புள்ள நம்பிக்கைகளையும் கிறிஸ்தவ வாழ்க்கையின் நடைமுறைக்கான உதவியையும் புராட்டஸ்டன்ட் கிறிஸ்த்தவத்தில் கண்டனர்., சில வெளிப்புற கடைபிடிப்புகளின் சாதி அல்லது குழு பழக்கமாக மட்டுமே மாறிய ஒரு சீரழிந்த மற்றும் ஒழுங்கற்ற பலர் பெயரளவில் ரோம கிறிஸ்தவர்களாக இருந்தனர்

கடற்கரை சபைகளில் எண்ணிக்கையில் ஏற்பட்ட உண்மையான இழப்பு பெரிதாக இல்லை, மேலும் திருநெல்வேலியின் உள்நாட்டிலுள்ள முக்கிய சபைகள் அனைத்தும் எண்ணிக்கையில் கணிசமாக குறைந்தபோதிலும் இருந்துகொண்டிருந்தன. இவ்வாறு, 1820-இல் ஹஃப் அறிவித்தபடி,

“ திருநெல்வேலி மாவட்டத்தில் (மீனவர் கடற்கரையையும் சேர்த்து) சுமார் 30,000 ரோமன் கிறிஸ்தவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஐம்பத்து மூன்று தேவாலயங்கள் இருந்தன, ஒவ்வொன்றிலும் ஒரு மறைக்கல்வி ஆசிரியர் இருந்தார், எட்டு பாதிரியார்கள் மாவட்டத்தில் பணியாற்றினர். வடக்கன்குளத்தில் ஒரு பள்ளி இருந்தது” .

1823-இல் ரேனியஸ், கடற்கரையில் தூத்துக்குடி (Tuticorin), கொம்பாடி (Kombádi), காயல்பட்டினம் (Kayalpatnam) ஆகிய இடங்களிலும், உள்நாட்டில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி (Tinnevelly), பேட்டை (Pettai), சிவலாபேரி (Sivalaperi), திருக்கலூர் (Tirukalur), கயத்தார் (Kayattar), வீரவநல்லூர் (Viravanallur), தென்காசி (Tenkási), வடக்கன்குளம், களக்காடு (Kalakkad) ஆகிய இடங்களிலும் தேவாலயங்களைக் குறிப்பிடுகிறார். பல ரோமன் கிறிஸ்தவர்கள் நிலக்கிழார்கள் மற்றும் வணிகர்கள் போன்ற மரியாதைக்குரிய நிலையில் இருந்தனர் என்று அவர் கூறுகிறார். மற்ற ஆதாரங்களிலிருந்து, இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழ்ந்த சபைகளைப் பற்றியும், கர்னல் மார்டினெஸ் (Col. Martinez) 1803-ஆம் ஆண்டளவில் கட்டிய தேவாலயத்தைக் கொண்ட இராமநாதபுரத்தில் இருந்த சிறிய சபையைப் பற்றியும் அறிகிறோம்.

இந்தக் காலக் கட்டத்திலிருந்தே சீர்த்திருத்த கிறிஸ்தவம் திருநெல்வேலிக்குள் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தது. அடுத்த அத்தியாத்தில் சீர்திர்த்த திருச்சபையின் துவக்கம் மற்றும் அவற்றின் சமுதாய மற்றும் கிறிஸ்தவ சீர்திருத்தங்களைப் பற்றி காண்போம் .

தொடர்ந்து பயணிப்போம்….

பராபரனின் பாதையில்,

ரெமினா சுஜித்