கடந்த பதிவுகளில் நாம் திருநெல்வேலியின் டச்சு கிறிஸ்தவம் மற்றும் ரோம கிறிஸ்தவத்தின் போதனைகளையும்மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதை விளக்கமாக பார்த்தோம். இந்த மாத பதிப்பில், அந்த வரலாற்று தொடரின் அடுத்த அத்தியாயமான .திருநெல்வேலி (Tinnevelly) பகுதிகளில் சீர்திருத்த திருச்சபையினரின் (Protestants) தொடக்கத்தை (1730 முதல் 1790 வரை) தொடர்ந்து காண்போம்

துத்துக்குடி (Tuticorin) அல்லது மீனவர் கரையோரத்தில் உள்ள வேறு ஏதேனும் வர்த்தக நிலையங்களில் டச்சு குருவானவர்களால் (Dutch chaplains) போதிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்ற சில தனிநபர்களைத் தவிர, 1770 வரை திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர்கள் காணப்படவில்லை. முதல் சபை 1780-ல் உருவானது. இதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு சீர்திருத்த திருச்சபை சபைகள் (Protestant) இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இவைதான் தற்போதைய திருநெல்வேலி மற்றும் மதுரை-இராமநாதபுரம் திருமண்டலங்களின் (dioceses) முதல் திருச்சபைகள் ஆகும்.

1706-ல், இந்தியாவின் முதல் சீர்திருத்த திருச்சபை மிஷனரிகளான சீகன்பால்க் மற்றும் ப்ளுட்ஸ்கோ (Ziegenbalg and Plutscho) தரங்கம்பாடியில் (Tranquebar) கால் பதித்தனர். டென்மார்க் மன்னர் பிரெடரிக் IV ஆல் நிறுவப்பட்ட மிஷனின் முதல் உறுப்பினர்களாக அவர்கள் இருந்தனர். அப்போது தரங்கம்பாடி டேனிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தரங்கம்பாடியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மட்டுமே பணியாற்றினர். ஆனால் 1727-ல் தஞ்சாவூர் இராச்சியத்திற்குள் தங்கள் பணியை விரிவுபடுத்த முடிந்தது. தஞ்சாவூரிலும், தரங்கம்பாடியிலிருந்து நாற்பது மைல்கள் தொலைவில் உள்ள மகாதேவப்பட்டினத்திலும் (Mahadevapatnam) சபைகள் உருவாகத் தொடங்கின.

1729-ல் மறவர் நாட்டிலிருந்து (அப்போது அவ்வாறுதான் அழைக்கப்பட்டது) இராமநாதபுரம் அருகிலிருந்து சில குடும்பங்கள் மகாதேவப்பட்டினத்திற்கு வந்தனர். அவர்கள் ஏற்கனவே அங்கிருந்த உபதேசியார் சத்தியநாதனை (Sattiyanidan) அறிந்திருந்தனர். அவர் மூலமாக மனம் மாறி தரங்கம்பாடியில் ஞானஸ்நானம் பெற்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர், அதன் பிறகு இராமநாதபுரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் சில சிறிய கிறிஸ்தவக் குழுக்கள் இருந்தன. இவர்கள் தரங்கம்பாடி மிஷனின் தொலைதூர கிளையாக விளங்கினர்.

[சொந்த ஊருக்குத் திரும்பிய பின் அவர்கள் தங்கள் நம்பிக்கையை பகிர்ந்து கொண்டதால், 1730-ல் இந்த விசுவாசிகளில் ஒருவர் மூலம் இராமநாதபுரம் மன்னரும் அவரது அரசவையினரும் தரங்கம்பாடி மிஷனைப் பற்றி அறிந்தனர். இது எதற்கும் வழிவகுக்கவில்லை என்றாலும், இந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது...]

இராமநாதபுரம் படையில் வீரராக இருந்த சவரிமுத்து (Savarimuttu) என்ற விசுவாசி, தரங்கம்பாடி மிஷனரிகளின் பணிகளை பற்றி தனது நண்பர்களிடம் கூறினார். மிஷனரிகள் அவருக்கு வழங்கிய புதிய ஏற்பாட்டை (New Testament) அரசவை ஊழியர் ஒருவரிடம் காண்பித்தார். இந்த செய்தியும், புதிய ஏற்பாடும் மன்னரை சென்றடைந்தது. மன்னர் சவரிமுத்து மூலமாக மிஷனரிகளுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார்.

அதன் உள்ளடக்கம் பின்வருமாறு:

"என்.என்., இரகுநாத தேவரின் (மன்னரின் முழுப் பெயர் முத்து விஜய இரகுநாத சேதுபதி கோட்டை தேவர்) பணியாளர், வணக்கம் தெரிவிக்கிறார். தரங்கம்பாடியில் நீங்கள் பல தர்ம காரியங்களை நிறுவியுள்ளதாக மிதியப்புலி (சவரிமுத்துவின் முந்தைய பெயர்) மூலம் அறிந்தோம். எங்களுக்கு அனுப்பப்பட்ட புத்தகத்தை படித்தோம். அது மேன்மையான போதனைகளையும் பல நல்ல விஷயங்களையும் கொண்டுள்ளது. குருவானவர்கள் சர்வ வல்லமையுள்ள ஏக தேவனின் போதகர்கள் என்றும், எல்லா மக்களும் தங்களைப் போல மெய்யான தெய்வ பக்தியை அடைய முயற்சியோடு உழைக்கிறார்கள் என்றும் கண்டோம். நீங்களும் உங்கள் மக்களும் இங்கு வந்தால் நன்கு வரவேற்கப்படுவீர்கள். நல்ல தொண்டுகளை இங்கு துவங்க விரும்பினால், இராஜா ஒரு கிராமத்தையும் அதற்குரிய நிலத்தையும் வழங்க முன்வருகிறார். உங்களிடம் ஏதேனும் வெளிநாட்டு அபூர்வ பொருட்கள் இருந்தால், இக்கடிதம் கொண்டு வந்தவர் மூலம் அனுப்பலாம். உங்களுடனான எங்கள் நட்பு சூரியனும் சந்திரனும் உள்ளவரை நீடிக்கும்."

மிஷனரிகள் இந்த மரியாதைக்குரிய சொற்களில் பெரிய நம்பிக்கை வைக்கவில்லை. ஆயினும் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என உணர்ந்து, டியாகோ (Diogo) என்ற உபதேசியாரை (catechist) சவரிமுத்துவுடன் அனுப்பினார்கள். அவர்களின் பதில் கடிதத்தில்:

அவர்களுக்கு அனுப்பிய கடிதத்திற்கும் கருணையான முன்மொழிவுகளுக்கும் நன்றி தெரிவித்தார்கள். மேலும் 'ஒரே தேவனும், ஒரே மத்தியஸ்தரும் உண்டு' என்ற வேத வசனத்தை சேர்த்து, உலக மீட்பராகிய இயேசுவின் நாமமும், உலகத்தின் ஆண்டவராகிய அவரின் இரட்சிப்பும், அவரால் கிட்டிய மீட்பும் அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும், உயர்ந்தவர் முதல் தாழ்ந்தவர் வரை தெரிந்திருக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார்கள்.

டியாகோவும் சவரிமுத்துவும் விரைவான பயணம் மேற்கொண்டனர். சுமார் நூற்று நாற்பது மைல் தூரத்தை ஒன்பது நாட்களில் கடந்தனர். அவர்கள் சென்ற பாதை பெரும்பாலும் காடுகள் வழியாகவும், கடற்கரையோரமாகவும் சென்றது. அலைகளின் ஏற்ற இறக்கத்தால் ஆழமும் அகலமும் மாறிக்கொண்டிருந்த பல நீர்நிலைகளைக் கடக்க வேண்டியிருந்தது.

சவரிமுத்து மூலமாக, டியாகோ இராமநாதபுரம் (Ramnad) வந்தடைந்த அன்று மாலையே மன்னரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். மிஷனரிகளின் கடிதத்தை மன்னரிடம் சமர்ப்பித்தார். கடிதத்தை வாசித்த மன்னர், "மத்தியஸ்தர்" என்றால் என்ன என்று கேட்டார். உபதேசியார் (catechist) அதற்கான உரிய விளக்கமளித்து, தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட 'இரட்சிப்பின் திட்டம்' என்ற சிறு புத்தகத்தை மன்னரிடம் வழங்கினார். மேலும் சில உரையாடல்கள் நடைபெற்றன. மிஷனரிகள் தங்களுக்கான வீட்டையும், அவர்கள் விரும்பும் நிறுவனங்களையும் கட்டிக்கொள்ள ஒரு கிராமம் தருவதாக மன்னர் மீண்டும் உறுதியளித்தார்.

தங்கியிருந்த இடத்தில், டியாகோ மன்னரின் குடை பிடிப்பவரை சந்தித்தார். அவர் கூறியதாவது: மன்னர் சிலர் கூறுவது போல ரோமன் கத்தோலிக்கராக ஞானஸ்நானம் (Baptism) பெறவில்லை, ஆனால் கிறிஸ்தவத்தைப் பற்றி சிறிது கேள்விப்பட்டிருந்தார்.

எனினும், அவர் பலதார மணத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். தனது மனைவியரைக் கவனித்துக் கொள்ள பதினைந்து திருநங்கைகளை வைத்திருந்தார். இந்த திருநங்கைகள் அரசவையில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தனர். சிறிது காலத்திற்கு முன், ஒரு ரோமன் மிஷனரி இராமநாதபுரம் வந்திருந்தார். மன்னர் அவருக்கு மஞ்சள் நிற கௌரவ ஆடையும், குடியிருப்பதற்கு சருகணி (Sarugani) என்ற கிராமத்தையும் வழங்கினார். மற்றொரு ரோமன் மிஷனரி, ராஜசிங்கமங்கலம் (Rajasingamangalam) அருகே ஒரு கிராமத்தில் தேவாலயம் கட்ட அனுமதி பெற்றிருந்தார்.

ஒரு வார காலத்திற்குப் பிறகு, மன்னரின் பல அமைச்சர்களைச் சந்தித்த டியாகோ திரும்பிச் செல்ல அனுமதி பெற்றார். டச்சுக் குடியேற்றமான கீழக்கரை (Kilakarni) சென்று பார்வையிட்ட பின், இராமநாதபுரத்திலிருந்து பதினொரு மைல் வடமேற்கில் உள்ள வலசை (Valasai) சென்றார். அங்கு பெரும்பாலான விசுவாசிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்காக ஞாயிறு ஆராதனைகளை நடத்தினார். அவர்கள் "தங்கள் அறிவிலும், கிறிஸ்துவை அறிக்கையிடுவதிலும் பலவீனமாக இருந்தனர் என்பதை அவர்களுடைய பேச்சினாலும் வாழ்க்கையினாலும் “ கண்டுகொண்டார். ஆனால் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் இருபது அல்லது இருபத்தைந்து பேர் இருந்திருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது.

அடுத்த ஆறு ஆண்டுகளில் இராமநாதபுரம் விசுவாசிகளை உபதேசியார்கள் இருமுறை மட்டுமே சந்தித்தனர். 1736-ல் மிஷனரிகள் தங்களை கவனிக்காததால் விசுவாசிகள் மனம் தளர்ந்திருப்பதாக இரண்டாவது முறையாக வந்த உபதேசியார்கள் தெரிவித்தனர். பரிசுத்த நற்கருணையில் (Holy Communion) பங்கேற்க வேண்டும் என்ற தீவிர ஆர்வத்தால், அவர்கள் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் சேர முடிவெடுக்கும் நிலையில் இருந்தனர். எனினும், அடுத்த ஆண்டில் உள்ளூர் குருவானவர் வருவார் என்ற வாக்குறுதியின் பேரில் காத்திருக்க தயாராக இருந்தனர்.

இந்த வாக்குறுதிப்படி, 1737 மே மாதத்தில் ஆரோன் வலசையில் ஏழு நாட்கள் தங்கியிருந்தார். தரங்கம்பாடிக்கு (Tranquebar) திரும்பிய பின், வேளாளர் சாதியைச் சேர்ந்த யோசுவா (Joshua) என்ற உபதேசியார் இராமநாதபுரத்தில் தங்கி பணியாற்ற அனுப்பப்பட்டார். மூன்று மாதத்திற்கு ஒருமுறை தரங்கம்பாடி வந்து அறிக்கை அளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

யோசுவா ரோமன் கத்தோலிக்கர்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்தார். 1738-ல் அவர்கள் அவரை தாக்கி, அவரது வீட்டை இடித்தனர். இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக, மிஷனரிகள் அவரை அங்கிருந்து அழைத்துக் கொண்டனர். அதன் பிறகு, அவரோ வேறு எந்த உபதேசியாரோ ஒரு மாதத்திற்கும் மேல் அந்த மாவட்டத்தில் தங்கியிருக்கவில்லை.

1730 முதல், இராமநாதபுரப் பகுதியில் உள்ள சிறிய விசுவாசிகள் குழுக்களின் ஆவிக்குரிய வளர்ச்சியும் , அவர்களின் உறுதிப்பாடும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதற்கு ரோமன் கத்தோலிக்கர்களின் விரோதம் மட்டுமல்லாமல், போர்களால் ஏற்பட்ட குழப்பங்களும் காரணமாக இருந்தன. உண்மையில், 1740 முதல் 1772 வரையிலான காலத்தில், இராமநாதபுரம் போரிலிருந்து விடுபட்டிருந்த ஆண்டுகள் மிகக் குறைவு. ஒன்று வேறு உள்ளூர் தலைவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தது, அல்லது தென்னிந்தியாவில் அக்காலத்தில் நடந்த பெரிய போர்களில் ஏதோ ஒரு வகையில் சிக்கிக் கொண்டிருந்தது.

எனினும், தரங்கம்பாடி மிஷனரிகள் தங்களால் முடிந்தவரை இந்த தொலைதூர சிறிய விசுவாசிகள் குழுக்களுக்கு உதவினர். பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறையாவது, சில சமயங்களில் இருமுறை, ஒரு உபதேசியாரையோ அல்லது உள்ளூர் குருவானவரையோ அவர்களைச் சந்திக்க அனுப்பினர்.

1740-ல் ஆரோன் (Aaron) அவர்களை சந்தித்தபோது, சிலரை ஞானஸ்நானத்திற்கு (Baptism) தயார் செய்து, முதல் முறையாக அந்த மாவட்டத்திலேயே ஞானஸ்நானம் வழங்கினார். இராமநாதபுரத்தில் ஆறு பேருடன் கர்த்தரின் இராப்போஜனத்தை (நற்கருணை) நடத்தினார். அரசைவண்டி (Arasaivandai) கிராமத்தில், வலசையிலிருந்து (Valasai) குடிபெயர்ந்த விசுவாசிகள் தற்போது வசித்து வந்தனர். அங்கு பதினைந்து பேருக்கு ஆராதனை நடத்தி, ஆறு பேருக்கு பரிசுத்த நற்கருணை (Holy Communion) வழங்கினார்.

இக்காலத்தில், சக்கரக்கோட்டை (Sakkarakottai - இராமநாதபுரத்திற்கு வெளியே), கேன்கொண்டான் (Kenkondan), பாண்டியூர் (Pandiyur), மற்றும் முடலூர் (Mudalur) ஆகிய இடங்களில் தனித்தனி குடும்பங்களாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ விசுவாசிகள் வாழ்ந்து வந்தனர்.

1751 ஆம் ஆண்டிலிருந்து குருவானவர்கள் மற்றும் உபதேசியார்கள் இராமநாதபுரம் சென்றபோது மிகச் சில கிறிஸ்தவர்களையே காண முடிந்தது, சில நேரங்களில் ஒருவரும் இல்லை என்று தராங்கப்பாடி திருச்சபையின் குறிப்புகளில் காணப்படுகிறது. 1762 ஆம் ஆண்டில் டியோகோ என்பவர் இராமநாதபுரம் சென்றபோது எந்த கிறிஸ்தவர்களையும் காண முடியவில்லை என்று அவரது குறிப்புகளில் காணப்படுகிறது.

திருநெல்வேலி (Tinnevelly) பகுதியின் திருச்சபை வரலாற்றைப் பொறுத்தவரை, இது தரங்கப்பாடி திருச்சபையுடன் நேரடியாக தொடர்புடையதாக இல்லாமல், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூரில் ஸ்வார்ட்ஸ் தலைமையில் இயங்கிய "ஆங்கில திருச்சபையுடன்" (English Mission) தொடர்புடையதாக இருந்தது. இந்த திருச்சபை கிறிஸ்தவ அறிவை மேம்படுத்தும் சங்கத்தின் (Society for Promoting Christian Knowledge - S.P.C.K) ஆதரவுடன் செயல்பட்டது.

1709 ஆம் ஆண்டிலிருந்தே S.P.C.K தரங்கப்பாடி திருச்சபைக்கு பணம், புத்தகங்கள் மற்றும் அச்சு இயந்திரம் ஆகியவற்றை வழங்கி ஆதரித்து வந்தது. 1728 இல் டானிஷ் திருச்சபை சென்னையில் கிளை திருச்சபையை துவங்கியபோது, S.P.C.K அதன் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இதனால் இது "ஆங்கில திருச்சபை" என்று அறியப்பட்டது.

1750 ஆம் ஆண்டில் தரங்கம்பாடி திருச்சபையில் இணைந்த ஸ்வார்ட்ஸ், தஞ்சை மன்னரின் நட்பைப் பெற்று, தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் பணியாற்றினார். 1766 இல் திருச்சிராப்பள்ளியில் நிரந்தரமாக நியமிக்கப்பட்டார்.

பாளையங்கோட்டையில் (Palamcottah) இருந்த சவரிமுத்து என்ற விசுவாசி, வேதாகமத்தை (Bible) ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் இந்துக்களுக்கும் வாசித்து விளக்கினார் என்று ஸ்வார்ட்ஸின் நாட்குறிப்பில் காணப்படுகிறது. ஒரு ஆங்கில சார்ஜெண்டின் மனைவி எங்கள் சபையைச் சேர்ந்தவர் என்றும், ஒரு இளம் இந்து கணக்காளர் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1773 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி தஞ்சாவூர் திருச்சபை பதிவேட்டில், பாளையங்கோட்டையைச் சேர்ந்த 18 வயது வேளாளர் ஒருவர் சாமுவேல் என்ற பெயரில் ஞானஸ்நானம் (Baptism) பெற்றதாகவும், அவரது மூத்த சகோதரர் மலையப்பன் ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்துதல் (Confirmation) பெற்றுக்கொண்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1778 ஆம் ஆண்டில் குருவானவர் ஸ்வார்ட்ஸ் (Rev. Schwartz) முதன்முதலாக பாளையங்கோட்டை (Palamcottah) சென்றார். அவரது பயணம் குறித்த விரிவான குறிப்புகள் அவரது நாட்குறிப்பில் காணப்படுகின்றன. பிப்ரவரி மாத நடுப்பகுதியில் திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டார். ஒரு ஐரோப்பியர் பாளையங்கோட்டையிலும் மதுரையிலும் சில குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் (Baptism) வழங்கவும், அவருக்கு திருமணம் செய்து வைக்கவும் அழைத்திருந்தார். இப்பயணம் கடினமானதாகவும் ஆபத்தானதாகவும் இருந்தபோதிலும், அப்பகுதியில் கணிசமான விசுவாசிகள் வாழ்ந்து வந்ததாலும், இதுவரை எந்த குருவானவரும் அங்கு செல்லாததாலும், இப்பயணம் பல வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதினார்.

மதுரையில் கிழக்கிந்திய தளபதி திரு. ரஸ்ஸலின் இல்லத்தில் ஐரோப்பியர்களுக்காக ஒரு ஆராதனையை நடத்தினார். பெரிய கோவிலையும் பார்வையிட்டார். பல இந்துக்களுடனும் உரையாடினார். அங்கிருந்து புறப்பட்டபோது சீனாவுடன் வர்த்தகம் செய்யும் ஒரு கப்பல் தலைவரைச் சந்தித்து, அவருடன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அடுத்த நாள் அந்த கப்பல் தலைவருடன் கோயில்பட்டி (Koilpatti) சென்றடைந்தார். அங்கே பாறையிலிருந்து பாய்ந்த தெளிந்த நீரோடையில் இருவரும் நீர் அருந்தினர். பிராமணர்கள் எச்சரித்தபடியே, இருவருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. சீனக் கப்பல் தலைவருக்கு 24 மணி நேரத்திற்குப் பிறகும், ஸ்வார்ட்ஸுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகும் காய்ச்சல் வந்தது.

கோயில்பட்டியிலிருந்து புலிகள் நிறைந்த ஆபத்தான காடுகள் மற்றும் புதர்கள் வழியாகப் பயணித்து, கர்த்தரின் பாதுகாப்புடன் மறுநாள் காலை தச்சநல்லூர் (Tachanallur) வந்தடைந்தார். திருநெல்வேலிக்கு (Tinnevelly) அருகில் உள்ள இவ்விடத்தில் ஐரோப்பிய சீருடையில் மீன்பிடி மக்கள் படை ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்படையில் 50 முதல் 60 வரை எங்கள் சபை விசுவாசிகள் இருந்தனர். அவர்களுக்காக ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு, அதில் அவர்கள் ஒன்று கூடி ஆராதனை நடத்தினர். பல ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் வந்திருந்தனர். குழந்தைகளின் கிறிஸ்தவ அறிவையும் விசுவாசத்தையும் சோதித்தார்.

மதியம் பாளையங்கோட்டைக்கு (Palamcottah) சென்றபோது நடந்த சில முக்கிய நிகழ்வுகளை குருவானவர் ஸ்வார்ட்ஸ் (Rev. Schwartz) தமது குறிப்புகளில் விவரிக்கிறார். சில குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் (Baptism) வழங்க இருந்தபோது, ஒரு இளம் பிராமண பெண் தனது வளர்ப்பு மகனுடன் வந்து, தனக்கு ஞானஸ்நானம் வழங்குமாறு கேட்டார். அந்தக் குழந்தைக்கு ஏற்கனவே பிறந்தபோதே அவசர ஞானஸ்நானம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த பிராமண பெண் ஏற்கனவே ஒரு ஆங்கில அதிகாரியின் துணைவியாக இருந்தார். அவருடன் வாழத் தொடங்கிய சிறிது காலத்திலேயே, கிறிஸ்தவ விசுவாசத்தை (Christian Faith) ஏற்றுக்கொள்ள விரும்புவதாக ஸ்வார்ட்ஸுக்கு செய்தி அனுப்பினார். ஆனால் அவர் பாவமான வாழ்க்கையில் இருக்கும்வரை ஞானஸ்நானம் வழங்க முடியாது என ஸ்வார்ட்ஸ் மறுத்துவிட்டார்.

ஆங்கில அதிகாரி அவரை திருமணம் செய்துகொள்வதாக தனிப்பட்ட முறையில் வாக்குறுதி அளித்திருக்கலாம் என்று சூழ்நிலைகளிலிருந்து ஸ்வார்ட்ஸ் ஊகித்தார். அந்த அதிகாரி வாத நோயால் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மிகச் சிறந்த சேவை செய்ததால், தனது சொத்துக்கள் அனைத்தையும் அவருக்கே விட்டுச் சென்றார். அந்த அதிகாரி அவருக்கு ஆங்கிலம், வேதாகம வரலாறு மற்றும் கிறிஸ்தவத்தின் முக்கிய உபதேசங்களை கற்றுக் கொடுத்திருந்தார்.

"சில ஆண்டுகளுக்கு முன் நான் உங்களிடம் கிறிஸ்தவ உபதேசங்களையும் ஞானஸ்நானத்தையும் கேட்டேன். ஆனால் என் வாழ்க்கை முறையால் நீங்கள் மறுத்துவிட்டீர்கள். இப்போது மீண்டும் உங்களிடம் உபதேசமும் ஞானஸ்நானமும் கேட்கிறேன். முன்பு இருந்த காரணம் இப்போது இல்லை" என்று அவர் கூறினார். அவரது மதிப்புமிக்க வாழ்க்கைக்கு அனைவரும் சாட்சியாக இருந்ததால், ஸ்வார்ட்ஸ் பாளையங்கோட்டையில் இருக்கும் வரைக்கும் அவருக்கு உபதேசம் வழங்கினார். பல பிராமணர்கள் அவரிடம் வந்தபோது, வெறுக்கத்தக்க புறஜாதி பழக்கங்களை விட்டுவிடுமாறு வெளிப்படையாக எடுத்துரைத்தார். அவர் மிகுந்த உணர்ச்சியுடன் ஞானஸ்நானம் பெற்றாள், அவருக்கு கிளாரிண்டா என்ற பெயர் கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்பினார், அது செய்யப்பட்டது. தேவனுடைய வார்த்தையைக் கேட்கவும், ஆவிக்குரிய (Spiritual) பயிற்சிகளில் பங்கேற்கவும் எப்போதும் தயாராக இருந்தார்.

பாளையங்கோட்டையில் தங்கியிருந்தபோது, ஐரோப்பியர்களுக்கு மூன்று முறை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளைப் பற்றி போதித்ததாகவும், பாளையங்கோட்டையிலும் திருநெல்வேலி (Tinnevelly) நகரிலும் பல இந்துக்களிடமும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் பேசியதாகவும் ஸ்வார்ட்ஸ் குறிப்பிடுகிறார்.

மார்ச் 4 ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் இருந்த போலேக்கு எழுதிய கடிதத்தில், "இங்கே பரந்த வயல் உள்ளது; உண்மையான மற்றும் விசுவாசமான வேலையாட்களுக்காக ஜெபிப்போம். கிறிஸ்துவுக்காக தேவன் அத்தகையவர்களை அனுப்புவாராக; ஆம், கூட்டம் கூட்டமாக அனுப்புவாராக!" என்று எழுதினார்.

அதே ஆண்டின் பிற்பகுதியில், மறவர் நாட்டில் பணிபுரிந்த தரங்கம்பாடி உபதேசியார்கள் (Catechist) ஒருவர் பாளையங்கோட்டை சென்று, கிளரிண்டா இந்துக்களுக்கும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் நற்செய்தியை பரப்புவதில் காட்டிய ஆர்வத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். பாளையங்கோட்டைக்கு வெளியேயுள்ள இடங்களிலிருந்தும் பல பெண்கள் அவரது வீட்டிற்கு வந்து சென்றனர்.

1779 ஆம் ஆண்டின் துவக்கத்தில், தரங்கம்பாடி குருவானவர்களில் ஒருவரான பிலிப் அவர்கள் தென்பகுதிக்கான பயணத்தை மேற்கொண்டார் என்று அவரது குறிப்புகளில் காணப்படுகிறது. 1778 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் தரங்கம்பாடியிலிருந்து புறப்பட்டு, டிசம்பர் 31 அன்று இராமநாதபுரத்தை அடைந்து, 1779 ஜனவரி 12 வரை அங்கு தங்கியிருந்தார். அங்கு பல இந்து மக்களுடன் வேத விவாதம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார், ஆனால் விசுவாசிகளைப் பற்றி எந்த குறிப்பும் காணப்படவில்லை.

எட்டையபுரம் வழியாக பாளையங்கோட்டை (Palamcottah) சென்றடைந்த அவர், கிளரிண்டா என்னும் விசுவாசியை சந்தித்தார். அவரது சபைப் பதிவேட்டில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

"கிளரிண்டாவின் வேண்டுகோளின்படி, பரிசுத்த நற்கருணைக்கான (Communion) ஆயத்த ஆராதனையை பல மணி நேரம் நடத்தினேன். அவர் மிகுந்த பய பக்தியுடன் பரிசுத்த நற்கருணையில் (Communion) பங்கு பெற்றார். ஆவிக்குரிய வாழ்வில் சிறந்து விளங்கும் அவர், தம்மை தேடி வரும் பிராமணர்கள், மற்ற இந்துக்கள் மற்றும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு கர்த்தரின் வார்த்தைகளை போதித்து வருகிறார். அவர் தங்கியிருந்த காலத்தில், உபதேசியார்களையும் அவ்வாறே செய்யுமாறு வேண்டிக்கொண்டார்."

முந்தைய ஆண்டில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பெரும் கலவரம் நடந்த சேரன்மகாதேவிக்கும் சென்றார். பின்னர் ஒட்டாரம்பட்டி அருகிலுள்ள புவானி கிராமத்திற்கும் சென்று, அங்குள்ள பாளையக்காரரின் முதன்மை நிர்வாகியுடன் உரையாடினார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த புவானி கிராமம்தான் பாளையங்கோட்டைக்கு வெளியே ஆரம்பகால கிறிஸ்தவ சபையின் (Christian congregation), இருப்பிடமாக மாறியது.

1779 ஆம் ஆண்டில், குருவானவர் போலே (Rev. Pohle) பாளையங்கோட்டை பயணம் மேற்கொண்டார். "ஜூன் 16 ஆம் நாள் பல்லக்கில் பாளையங்கோட்டைக்கு புறப்பட்டேன். இது என் முதல் நாட்டுப்புறப் பயணம். தேவனுடைய கிருபாலோசனையால் ஜூலை 8 ஆம் நாள் திருச்சிராப்பள்ளி திரும்பினேன்" என்று அவரது பயணக் குறிப்பில் காணப்படுகிறது. மேலும் அவரது பயணக்குறிப்பில் ஸ்வார்ட்ஸ் குருவானவர் குறிப்பிடிருந்த கிளரிண்டா பற்றியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் கிழக்கிந்திய தளபதி ரஸ்ஸலுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்த அவர், விருதுப்பட்டி, கோயில்பட்டி (Koilpatti) மற்றும் கயத்தார் வழியாக பயணித்தார். பாளையங்கோட்டையில் தளபதி கேப்டன் பரிங்டனின் இல்லத்தில் தங்கினார்.

"ஜூன் 26 அன்று முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இந்து மதத்தவர் ஞானஸ்நானம் (Baptism) பெற விருப்பம் தெரிவித்தார். இது எதிர்பாராத ஒன்று. குறுகிய தங்குதல் காலத்தில் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைகளை முழுமையாக போதிப்பது சிரமமாக தோன்றியது. எனினும் ஏன் ஞானஸ்நானம் பெற விரும்புகிறீர் என வினவியபோது, 'இரட்சிப்பு பெற வேண்டும்' என்றார். மேலும் அவர் நமது விசுவாசிகளில் ஒருவரின் பணியாளர் என அறிந்தேன். அதனால் முற்றிலும் மறுக்க இயலவில்லை. அந்த விசுவாசி முன்னர் தஞ்சாவூர் அரண்மனையில் பணிபுரிந்த மராட்டிய பிராமணரின் துணைவியார். அவரும் அரச பரம்பரையைச் சார்ந்தவர், அதனால் ராஜ கிளரிண்டா என அழைக்கப்படுகிறார். உண்மையான விசுவாசி என அறியப்படும் அவர், தமது குடும்பத்தினரின் ஆவிக்குரிய நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அவரை சந்தித்ததில் பெரிதும் ஆனந்தம் அடைந்தேன்." என்று அவரது பயணக் குறிப்பில் காணப்படுகிறது.

குருவானவர் போல் (Rev. Pohle) அவர்களால் அந்த மனிதருக்கு உபதேசம் ஏற்பாடு செய்யப்பட்டது. கிறிஸ்தவத்தின் அடிப்படை விசுவாசங்கள் ஏற்கனவே அவருக்கு தெரிந்திருந்தது கண்டறியப்பட்டது. ஜூன் 27 ஆம் நாள் பணப்பொறுப்பாளர் திரு. லைட் அவர்களின் பங்களாவில் ஆங்கில ஆராதனை நடத்தப்பட்டது. அடுத்த நாள் திரு. லைட்டின் குழந்தைக்கு ஞானஸ்நானம் வழங்கப்பட்டது.

"ஜூன் 29 அன்று ராஜா கிளரிண்டாவின் வேலையாளுக்கு பரிசுத்த ஞானஸ்நானம் வழங்கப்பட்டு, ஜான் என்று பெயர் சூட்டப்பட்டது. நான் ஞானஸ்நானம் கொடுத்த முதல் இந்து மதத்தவர் இவர்தான். அவரது அறிவு பலவீனமாக இருந்தபோதிலும், அவரது வெளிப்படையான எளிமையும், இரட்சிப்புக்காக ஞானஸ்நானம் பெற கொண்டிருந்த பெரும் ஆர்வமும், எங்களிடமிருந்தும் பிற சீர்திருத்த திருச்சபையினர் (Protestants) அல்லது உபதேசியார்களிடமிருந்தும் (Catechist) அவர் கொண்டிருந்த பெரும் தூரமும், மரணத்தின் நிச்சயமற்ற தன்மையும் கருத்தில் கொள்ளப்பட்டு, அவரை ஞானஸ்நானம் இல்லாமல் விட்டுச்செல்ல மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

ஆனால் அவரது நன்மை விரும்பியான கிளரிண்டா அவருக்கு மேலும் உபதேசம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஞானஸ்நானம் வழங்கப்பட்டது. தேவையான புத்தகங்களும் திறமையும் கொண்ட மற்றொரு விசுவாசி இதில் உதவுவார். அவர்கள் இருவரும் ஞானப்பெற்றோர்களாக இருப்பதால் இதில் கவனமாக இருக்க கடமைப்பட்டவர்கள்."

ஜூன் 30 அன்று, ஜானுக்கும் ராஜ கிளரிண்டாவின் வளர்ப்பு மகளான 18 வயது மரியமாடிக்கும் திருமணம் நடத்தப்பட்டது. அன்று இரவே பாளையங்கோட்டையிலிருந்து (Palamcottah) புறப்பட்டார்.

1779 அல்லது 1780 ஆம் ஆண்டிலிருந்துதான் பாளையங்கோட்டையில் (Palamcottah) நமது திருச்சபை உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கால்டுவெல் அவர்களால் தஞ்சாவூரில் (Tanjore) கண்டெடுக்கப்பட்ட திருநெல்வேலி (Tinnevelly) திருச்சபையின் 1780-1805 காலகட்ட பதிவேட்டில், 1780 ஆம் ஆண்டில் 13 வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 40 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1785 ஆம் ஆண்டில் கிளரிண்டாவும் சிலரும் திருநெல்வேலிக்கு (Tinnevelly) ஒரு குருவானவரை அனுப்புமாறு கோரி தஞ்சாவூர் சென்றனர். 1784 மார்ச் 30 அன்று தரங்கம்பாடி குருவானவர்களால் எழுதப்பட்ட கடிதத்தில் இந்த முக்கியமான விஜயம் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது:

"பாளையங்கோட்டையின் ராஜ கிளரிண்டா தஞ்சாவூர் வந்தபோது, குருவானவர் ஸ்வார்ட்ஸ் (Rev. Schwartz) பயணத்தில் இருந்தார். அவர் குழுவைச் சேர்ந்த இரண்டு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஏற்கனவே தஞ்சாவூர் வந்திருந்தனர். உள்ளூர் குருவானவர் ராயப்பன் அவர்களை எங்களிடம் அனுப்புவதை தவிர வேறு வழி காண இயலவில்லை. அவர்களில் ஒருவர் வண்ணார் சாதியைச் சேர்ந்த பிரபல மருத்துவர். அவர் முன்னதாக புதிய ஏற்பாடு மற்றும் இங்கு அச்சிடப்பட்ட திருச்சபை வரலாற்றை பெற்றிருந்தார். அவற்றை ஊக்கத்துடன் படித்ததில் போப்பாண்டவரின் தவறுகளை உணர்ந்து, தனது சக மதத்தினரிடம் அதைப் பற்றி வலியுறுத்தியதால் பல இடங்களில் பரவி பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. மேலும் அறிவுரை கேட்க ஆர்வமுள்ள இம்மக்களின் சார்பாக, குருவானவரோ அல்லது உள்ளூர் குருவானவரோ தங்களுடன் வரவேண்டும் என்று கோர இவ்விருவரும் தஞ்சாவூர் வந்தனர்.

கிளரிண்டா தனது வளர்ப்பு மகனை தஞ்சாவூருக்கு அழைத்து வந்தார். அவனுக்கு பிறப்பின்போது அவசர ஞானஸ்நானம் வழங்கப்பட்டு, பின்னர் குருவானவர் ஸ்வார்ட்ஸால் (Rev. Schwartz) உறுதிப்படுத்தப்பட்டது. அவனை கல்விக்காக ஸ்வார்ட்ஸிடம் ஒப்படைக்க கொண்டு வந்தார். 1784 ஜனவரி இறுதியில் தஞ்சாவூரிலிருந்து புறப்படும்போது அவனை அங்கேயே விட்டுச் சென்றார். அவர் அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தார்."

இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்தது ஆரம்பக் கால கிறிஸ்தவத்தையும் அம்மக்களின் விசுவாசமும் அவர்களின் ஆர்வமும்தான் ஆனால் பின்வரும் அத்தியாயங்களில் அது பல மடங்கு அதிகரித்தது தான் நம்முடைய திருநெல்வேலி திருமண்டலத்தின் பெரும் வளர்ச்சிக்கும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கிறிஸ்துவுக்குள் அதிகமாக வளரவும் உதவியது. மேலும் கிறிஸ்தவம் எவ்வாறு தொடர்ச்சியாக திருநல்வேலியில் அடியெடுத்து வைத்தது என்பதை அடுத்து வரும் அத்தியாயங்களில் காண்போம்.

தொடர்ந்து பயணிப்போம்…..

படைத்தவரின் பாதையில்,

திருமதி. ரெமினா சுஜித்