கடந்த பதிவுகளில் நாம் சத்தியநாதன் மற்றும் ஜெனிக்கே ஆகியோரின் பணிகளையும், திருநெல்வேலியில் திருச்சபையின் ஆரம்பகால வளர்ச்சியையும் குறிப்பாக முதலூர் கிறிஸ்தவ கிராமம் தோன்றிய வரலாறையும் விரிவாக பார்த்தோம். இந்த மாத பதிப்பில், 1798 முதல் 1802 வரையிலான காலகட்டத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளையும், குறிப்பாக கெரிக்கே மற்றும் ஜெனிக்கே ஆகியோரின் 1800 ஆம் ஆண்டு பயணத்தையும் தொடர்ந்து காண்போம்.
1798-1799: தகவல் பற்றாக்குறை காலம்
1798 மற்றும் 1799 ஆண்டுகளில் சத்தியநாதன் அவர்களின் பணிகள் மற்றும் புதிய இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் 1800 ஆம் ஆண்டிற்கான சில தகவல்களை கெரிக்கே அவர்களின் குறிப்புகளிலிருந்து பெற முடிகிறது. அவர் ஜெனிக்கே உடன் திருநெல்வேலிக்கு வெறும் பதினொரு நாட்கள் மட்டுமே பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் அப்போது வரை எந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. துரதிர்ஷ்டவசமாக, 1796 முதல் 1800 வரையிலான ஞானஸ்நானப் பட்டியல்கள் கிடைக்கவில்லை.
கெரிக்கே மற்றும் ஜெனிக்கேயின் 1800 ஆம் ஆண்டு பயணம்
முந்தைய அத்தியாயத்தின் இறுதியில் குறிப்பிட்டபடி, கெரிக்கே மற்றும் ஜெனிக்கே ஆகியோர் பிப்ரவரி 16 அன்று இராமநாதபுரத்தில் புதிய தேவாலயத்தை பிரதிஷ்டை செய்தனர். இராமேஸ்வரத்தைப் பார்வையிட்ட பின், அவர்கள் தெற்கு நோக்கி புறப்பட்டனர். அதன் பின் கெரிக்கே கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
“20 ஆம் தேதி நாங்கள் துத்துக்குடிக்கு புறப்பட்டோம். கர்னல் மார்டின்ஸ் (Col. Martinz) பயணத்திற்கு பல்லக்கு தூக்குபவர்களை ஏற்பாடு செய்திருந்தார், அதனால் 21 ஆம் தேதி அங்கு வந்தடைந்தோம். அங்கு பாளையங்கோட்டையிலிருந்து வந்த உள்ளூர் குருவானவர் சத்தியநாதனையும், மணப்பாடிலிருந்து வந்த உபதேசியார் அடைக்கலத்தையும் சந்தித்தோம். அடுத்த ஞாயிற்றுக்கிழமை நாங்கள் பல குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஞானஸ்நானம் வழங்கவும், சில ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சபையில் சேர்த்துக்கொள்ளவும் இருந்தது. சபையினர் நற்கருணைக்காக இங்கு வரவிருந்தனர். நாங்கள் அவர்களுடன் டச்சு தேவாலயத்தில் கூடினோம், அங்கு நற்கருணைக்கான ஆயத்தமும் ஞானஸ்நானமும் நடைபெற்றது.”
“22 ஆம் தேதி, திரு. ஜெனிக்கே அதிகாலையில் மணப்பாடிற்கு புறப்பட்டார். இங்குள்ள டச்சு குடும்பங்களின் விருப்பத்தின் பேரில் நான் காலையில் டச்சு தேவாலயத்தில் போர்த்துகீசிய மொழியில் பிரசங்கித்தேன். டச்சு குருவானவர் திரு. க்ளூவே (Mr. Kluwe) அவர்களின் அனுமதியுடன் தமிழிலும் உரையாற்றினேன். பல மக்கள் என்னைச் சந்திக்க வந்தனர், இதில் மீன்பிடி மக்கள் கூட்ட சமுதாயத்தின் முழு தலைவரும் இருந்தார், அவரை டச்சுக்காரர்கள் தங்கள் இளவரசர் என்று அழைக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையைச் சேர்ந்தவர்கள், இந்தப் பகுதி ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களால் நிறைந்துள்ளது.”
“மாலையில் நான் திரு. ஜெனிக்கேயைப் பின்தொடர்ந்தேன், 23 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு திருச்செந்தூருக்கு வந்தேன். அங்கு சிறிது ஓய்வு எடுத்த பின், காலை ஒன்பது மணிக்கு மணப்பாடை அடைந்தோம். அங்கு காலையிலும் மதியத்திலும் தமிழில் கிறிஸ்துவை பிரசங்கித்தேன், மாலையில் ஒரு டச்சுக்காரரின் குழந்தைக்கு ஞானஸ்நானம் வழங்கினேன்.”
மணப்பாடின் தமிழ் சபை
கெரிக்கே மணப்பாடின் தமிழ் சபையைப் பற்றி விரிவாக விவரிக்கிறார்:
“அங்குள்ள தமிழ் சபை ஐம்பது முதல் அறுபது குடும்பங்களைக் கொண்டது, நூற்றுக்கும் மேற்பட்ட ஆத்துமாக்கள் உள்ளனர். அவர்கள் ஐம்பது வீடுகளில் வாழ்கின்றனர், இவை பனைமர உத்திரங்கள் மற்றும் இலைகளால் எளிமையான முறையில் கட்டப்பட்டு, இரண்டு நேரான தெருக்களை உருவாக்குகின்றன. தேவாலயமும் பனைமரங்கள் மற்றும் பனை இலைகளால் எளிமையாக கட்டப்பட்டுள்ளது. டச்சு மனிதர்கள் எப்போதும் ஆலய ஆராதனைகளில் கலந்துகொள்கிறார்கள், தங்களது காணிக்கைகளை சேகரிக்க காணிக்கைப் பெட்டியும் வைத்திருந்தனர், அதனால் சபையினர் ஒரு சிறிய நிதியை தங்கள் சபைக்கென்று சேகரித்துள்ளனர். அவர்கள் அனைவரும் நெசவாளர்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் மிகச் சிறிய குழந்தைகள் கூட அவர்களின் வேலையில் பங்கு கொள்கிறார்கள், இங்கு ஒரு பிச்சைக்காரர்கள் கூட இல்லை, முழுவதும் கிறிஸ்தவர்களைக் கொண்ட கிராமத்தில் இது எனக்கு மிகவும் இனிமையான காட்சியாக இருந்தது.”
அடுத்த நாள் அவர்கள் சபையினரைக் கூட்டி, சபையினர் தேர்ந்தெடுத்த நான்கு பேரை மூப்பர்களாக ஏற்றுக்கொண்டு, சில விதிமுறைகளை வகுத்தனர்:
- ஆண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை தேவாலய ஆராதனைகளுக்கு வர வேண்டும் இதை சபையின் மூப்பர்கள் கண்காணிக்க வேண்டும்.
- சிறுவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்
- பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், அவர்களின் கணவர்கள் மற்றும் சகோதரர்கள் வீட்டிற்கு வெளியே இருக்கும்போது தேவாலயத்திற்கு வர முடியாததால், கிறிஸ்தவத்தின்அடிப்படை ஞான உபதேசங்களை கற்றுக்கொள்ள காலை 9 முதல் 10 மணி வரை வர வேண்டும்
- ஞாயிற்றுக்கிழமைகளில் மற்ற வேலை செய்யக்கூடாது, சபை மக்கள் அனைவரும் காலை மற்றும் மாலை ஆலய ஆராதனைகளுக்கு வர வேண்டும்
- ஏழைகளுக்கான நிதிக்காக ஒரு பெட்டி மூப்பர்கள் மற்றும் உபதேசியாரின் பொறுப்பில் வைக்கப்பட வேண்டும்.
- புகார்கள் மற்றும் ஏதேனும் கருத்து முரண்பாடுகள் வரும் பட்சத்தில் பெரியவர்களின் உதவியுடன் சபை ஊழியரால் தீர்க்கப்படவேண்டும். தேவைப்பட்டால் மேலும் விதிகள் சபையின் ஒப்புதலுடன் வகுக்கப்படவேண்டும்.
முதலூரின் நிலைமை
கெரிக்கே முதலூரைப் பற்றி எழுதுகிறார்:
“மதியத்தில் நாங்கள் வடமேற்கே ஐந்து தமிழ் லீக் தூரம் சென்று அடுத்த ஜெப ஆலயத்தை அடைந்தோம். பல பனைமர மற்றும் ஓலைக் கூரை வீடுகளுடன், இது ஒரு நீள்வட்ட நிலத்தில் அமைந்துள்ளது. மிஷனரிகள் இதை பதினொரு போர்ட்டோ நோவோ பகோடாக்களுக்கு (eleven Porto Novo pagodas) வாங்கி, முதலூர் என்று பெயரிட்டனர், இதை ஒரு முழு கிறிஸ்தவ கிராமமாக அமைக்க இரண்டு ஆண்டுகளாக இங்கு நீடித்த பஞ்சம், கட்டுமானத்தை தடுத்தது, ஏனெனில் இங்கு குடியேற வேண்டிய நல்ல மக்கள் வாழ்வாதாரம் தேடி திருவாங்கூருக்கு சென்றுவிட்டனர். ஆனால் அவர்கள் இப்போது தினமும் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
“இங்கு மக்களுக்கு ஒரு பெரிய சதுர பக்கா கிணற்றின் நன்மை உள்ளது, இது வெட்டப்பட்ட கல்லால் வரிசையாக அமைக்கப்பட்டு நல்ல தண்ணீரைத் தருகிறது. இது இங்கு சற்றே அசாதாரணமான விஷயம், தஞ்சாவூரிலிருந்து இங்கு வரும் எல்லா வழிகளிலும் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிது.”
25 ஆம் தேதி அதிகாலையில், ஏழு குடும்பங்கள் ஜெப ஆலயத்தில் கூடின. கெரிக்கே அவர்களுக்கு கிறிஸ்தவ போதனைகளை பிரசங்கித்தார், மணப்பாடில் செய்த ஏற்பாடுகளைப் பற்றி கூறினார். அந்த சபைக்காக வகுத்த விதிமுறைகளின் நகலை அங்குள்ள உபதேசியார் தாவீதுக்கு (David) கொடுத்தார். இவர் ஒரு இளைஞன் ஆனால் ஆண்டவர் மீது பக்தியுள்ள மற்றும் புத்திசாலியான மனிதர். உள்ளூர் ஊழியர்கள் மற்றும் மணப்பாடு உபதேசியாரின் ஒப்புதலையும் பெற்றுக்கொண்டு இங்குள்ள அனைத்து குடும்பங்களும் திரும்பி வந்தவுடன், அவர்களுக்கும் அந்த குடும்பங்களுக்கும் இதேபோன்ற விதிமுறைகளை அறிமுகப்படுத்த பரிந்துரைத்தார்;
பற்பநாதபுரம் மற்றும் பாளையங்கோட்டை
கெரிக்கே மற்றும் ஜெனிக்கே ஆகியோர் பின்னர் படிப்படியாக பற்பநாதபுரத்திற்கு சென்றனர். அங்கு கெரிக்கே குறிப்பிடுகிறார் கல்லால் கட்டப்பட்ட ஜெப ஆலயம் இருந்தது. அங்குள்ள கிறிஸ்தவர்களின் தலைவர் சந்தியாகோ (Santiago) பஞ்சத்தில் தனது பல கால்நடைகளை இழந்திருந்தார். இதுவும் அவரது மனைவியின் தாக்கமும் அவரது விசுவாசத்தை இழக்க காரணமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் மனந்திரும்பியிருந்தார்.
பற்பநாதபுரத்தின் சபையினர் மாற்று ஞாயிற்றுக்கிழமைகளில் பாளையங்கோட்டையில் ஆராதனைகளில் கலந்துகொள்வார்கள். சந்தியாகோ தலைமையில் பவனியாக நடந்து சென்று பாடல்கள் பாடுவார்கள். மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில், பொதுவாக பாளையங்கோட்டையிலிருந்து ஒரு உபதேசியார் வந்து ஆராதனைகளை நடத்துவார்.
26 ஆம் தேதி மாலையில், கெரிக்கே மற்றும் ஜெனிக்கே பாளையங்கோட்டைக்கு சென்றனர். மார்ச் 2 அன்று கெரிக்கே அங்கு ஆறு ஐரோப்பியர்களுக்கு ஆங்கில ஆராதனையும் பரிசுத்த நற்கருணை ஆராதனையும் நடத்தினார், பின்னர் தமிழ் ஆராதனையும் நடத்தினார்.
சத்தியநாதனைப் பற்றிய கெரிக்கேயின் கருத்து
கெரிக்கே பாளையங்கோட்டையின் இந்திய சபையைப் பற்றியும், குருவானவர் சத்தியநாதனைப் பற்றியும் முழுமையாக திருப்தி அடையவில்லை. அவர் குருவானவர் சத்தியநாதனைப் பற்றி கூறுகிறார்:
“அவருக்கு கர்த்தர் நல்ல திறமைகளைக் கொடுத்துள்ளார், அவரது போதனை மற்றும் பிரசங்கங்கள் தெளிவானது மற்றும் நல்லது, நல்ல செயல்களில் அவர் சுறுசுறுப்பானவர். ஆனால் தனக்கும் கிறிஸ்தவ நோக்கத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் கெட்ட மனிதர்களால் எல்லா வகையான விவகாரங்களிலும் இழுக்கப்படுவதை அவர் அனுமதிக்கிறார்,. பாளையங்கோட்டையிலும் அண்டை கிராமங்களிலும் மட்டும் பிரசங்கிப்பதற்கு பதிலாக, தஞ்சாவூருக்கு இந்தப் பக்கமுள்ள முழு நாட்டிலும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்று நான் இப்போது அவருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.”
இதிலிருந்து கெரிக்கே முதலூரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் எந்த சிறப்பு இயக்கமும் அதாவது குறிப்பிடத்தக்க எந்த ஒரு ஆவிக்குரிய வளர்ச்சியும் நடைபெறுவதைக் காணவில்லை என்பது தெரிகிறது. முதலூர் சபையை முந்தைய சபைகளைப் போல உள்ள அதே வகையான நான்காவது சபையாக மட்டுமே அவர் கருதினார்.
விருதுநகர் மற்றும் மதுரை
கெரிக்கே மற்றும் ஜெனிக்கே பாளையங்கோட்டையில் இன்னும் ஒரு இரண்டு நாட்கள் தங்கி, மணப்பாடு மற்றும் பற்பநாதபுரத்திற்கு மூப்பர்களை நியமித்து விதிமுறைகளை வகுத்தனர். மார்ச் 4 அன்று வடக்கு நோக்கி பயணம் தொடங்கினர்.
மார்ச் 6 அன்று அவர்கள் விருதுபட்டியை (விருதுநகர்) அடைந்தனர். அதன் பின் கெரிக்கே கூறுகிறார்:
“இங்கு எங்கள் முக்கிய வேலை மணப்பாடிலிருந்து இங்கு குடிபெயர்ந்த கிறிஸ்தவ குடும்பங்களைச் சந்திப்பதாகும். அங்கு ஒரு வருடமாக பஞ்சம் கடுமையாக இருந்ததால், நெசவாளர்களால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. நாங்கள் மணப்பாடிலிருந்து கொண்டு வந்த உபதேசியார் அடைக்கலம் முதலில் ஒரு குடும்பத்தைக் கண்டுபிடித்தார், பின்னர் அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் வாழ்வாதார வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் இப்போது திரும்பிச் செல்ல விருப்பம் இல்லாதவர்களாக இருந்தனர். எனவே நாங்கள் இங்கு ஒரு சபையை நிறுவ முடிவு செய்தோம், குறிப்பாக இந்த இடத்தை உள்ளூர் குருவானவரின் பராமரிப்பில் பரிந்துரைக்க முடிவு செய்தோம்.”
7 ஆம் தேதி அவர்கள் மதுரையை அடைந்தனர். ஜெனிக்கே அங்கு சில நாட்கள் தங்கினார், கெரிக்கே திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக மெட்ராஸுக்குச் சென்றார். ஜெனிக்கே புனித வெள்ளியன்று தஞ்சாவூருக்குத் திரும்பினார்.
ஜெனிக்கேயின் மரணம்
ஜெனிக்கே தனது உடல்நிலைக்காக இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார், ஆனால் அது அவரது உடல் பெலவீனத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவரது பலவீனம் தொடர்ந்து அதிகரித்து, மே 10, 1800 அன்று தஞ்சாவூரில் அவர் மரணமடைந்தார். அவருக்கு நாற்பத்தொரு வயது, இந்தியாவில் அவரது பணியின் பதிமூன்றாவது ஆண்டு அது.
ஸ்வார்ட்ஸ் இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, பிப்ரவரி 13, 1798 அன்று மரணமடைந்திருந்தார். கிளாரிந்தாவின் அழைப்பிற்கு பதிலளித்து ஸ்வார்ட்ஸ் திருநெல்வேலியில் திருச்சபையை நட்டார், ஜெனிக்கே மற்றும் சத்தியநாதன் நீர்ப்பாய்ச்சினர். இப்போது தேவன் அதை விளையச்செய்தார், ஆனால் அவர்கள் குறிப்பாக பணியாற்றிய அந்த சபைகளில் அல்ல.
1801: சத்தியநாதனின் விரிவான பயணங்கள்
1801 ஆம் ஆண்டிற்கான திருநெல்வேலியின் நேரடி செய்திகள் நமக்கு நடைமுறையில் இல்லை. கால்டுவெல் நகலெடுத்த 1800 முதல் 1803 வரையிலான ஞானஸ்நானப் பட்டியல் இந்த ஆண்டிற்கு அங்கு எந்த ஞானஸ்நானமும் காட்டவில்லை. உண்மையில், குருவானவர் சத்தியநாதன் 1801 ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் இல்லை.
கெரிக்கே பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது அறிவுறுத்தல்களின்படி, சத்தியநாதன் பரந்த பகுதியில் சுற்றுப்பயணம் தொடங்கினார்.
1800 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் பாஞ்சாலங்குறிச்சி பயணம் மேற்கொண்டதாக கேள்விப்படுகிறோம். அங்கு ஒரு வாரம் தங்கி கிறிஸ்தவர்களுக்கு போதனை செய்து, ஐந்து பேருக்கு கர்த்தரின் இராப்போஜனத்தை வழங்கினார். பின்னர் அவர் இராமநாதபுரத்தின் கலெக்டரைச் சந்திக்க மாப்பிள்ளையூரணி சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கி, அங்கிருந்த சில பாளையக்காரர்களுடனும் அவர்களின் மக்களுடனும் பேசவும், கலெக்டரின் பரிவாரங்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரசங்கிக்கவும் வாய்ப்புகளைப் பயன்படுத்தினார்.
ஆண்டின் இறுதியில், அவர் மதுரை மற்றும் திண்டுக்கலைப் பார்வையிட்டு தஞ்சாவூர் வரை பணியாற்றினார். அடுத்த ஆண்டின் பிப்ரவரியில், அவர் விரைவில் மீண்டும் முதலூருக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அங்கு உபதேசியார்களால் போதிக்கப்பட்ட பல குடும்பங்கள் அவர் வந்து அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்க காத்திருந்தனர்.
கடைசி பாளையக்காரர் கிளர்ச்சி
ஆனால் அப்போதுதான் கடைசி பாளையக்காரர் கிளர்ச்சி வெடித்தது. இது திருநெல்வேலியின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் குழப்பங்களை ஏற்படுத்தியது. குருவானவர் சத்தியநாதன் தஞ்சாவூரில் தங்க வேண்டியிருந்தது. பின்னர் பருவமழையால் மேலும் தாமதமாகி, 1802 வசந்த காலம் வரை திருநெல்வேலிக்குத் திரும்ப முடியவில்லை.
1802 செப்டம்பரில் கெரிக்கே முதலூர் மக்களுக்கு அளித்த உரையிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம், 1801 பிப்ரவரி முதல் மே வரை நீடித்த குழப்பங்களின் போது அங்குள்ள கிறிஸ்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர்களின் ஆதரவாளர்களாக கருதப்பட்டதால், கிளர்ச்சியாளர்களின் வன்முறை குறிப்பாக அங்கிருந்த கிறிஸ்தவர்களுக்கு எதிராக திருப்பப்பட்டது.
அந்த ஆண்டின் டிசம்பரில், திருச்சிராப்பள்ளி உபதேசியார் ஞானாயுதம் பாளையங்கோட்டையில் உள்ள மிஷனின் செய்திகளைக் கொண்டு வர, அதற்கான சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய அனுப்பப்பட்டார். அவர் சபைகளைப் பார்வையிட்டதாகவும், களக்காடுவில் அப்போது நிலைகொண்டிருந்த கேப்டன் ட்ராட்டரைச் (Captain Trotter) சந்தித்ததாகவும் தெரிகிறது. அவர் ஏற்கனவே மிஷனில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். அதே படைப்பிரிவின் ஜார்ஜ் மேஜர் பிரவுனும் (George Major Brown) அப்படித்தான். அவர் அந்த நேரத்தில் பாளையங்கோட்டை மிஷன் வீட்டில் ஐரோப்பியர்களுக்கு வழக்கமாக ஆராதனைகளை நடத்தி அவர்களின் குழந்தைகளுக்குக் கற்பித்து வந்தார்.
1802: பெரிய மாற்றத்தின் தொடக்கம்
குருவானவர் சத்தியநாதன் இறுதியாக திருநெல்வேலி வந்தடைந்தபோது, ஏப்ரல் 2 முதல் 19 வரை முதலூரில் 253 அத்திக்கலுவின் (Attikalu) 66 மக்களுக்கும் (பறையர் சமூதாயத்தை சேர்ந்தவர்களுக்கும்) ஞானஸ்நானம் வழங்கினார். மே மற்றும் ஜூன் மாதங்களில் முதலூரின் மேலும் 21 மக்களுக்கும் (சாணார் சமூதாயத்தை சேர்ந்தவர்களுக்கும்) ஞானஸ்நானம் வழங்கினார்.
[இக்கட்டுரையில் சாதியின் பெயர் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் மற்றவர்களால் தாழ்வாக கருதப்பட்ட மக்கள் மத்தியிலும் கிறிஸ்துவின் சுவிசேஷம் எவ்வித பாகுபாடும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதை காண்பிப்பதற்க்காகவே; வரலாற்று நுணுக்கங்களுக்காகவே சாதியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.]
பின்னர் திடீரென்று இத்தகைய ஆவிக்குரிய எழுச்சி பெரும் வேகத்துடனும் கணிசமான பகுதியிலும் பரவத் தொடங்கியது. செப்டம்பர் இறுதியில் கெரிக்கேயின் வருகை அநேகர் கிறிஸ்துவை ஏற்றுகொள்வதற்கும் மற்றும் அநேகர் கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றதற்கும் ஒரு காரணமாக இருந்தது.
கெரிக்கேயின் செப்டம்பர் 1802 பயணம்
கெரிக்கே செப்டம்பர் தொடக்கத்தில் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு, திண்டுக்கலில் சில நாட்கள் தங்கி அங்குள்ள சபையை மேலும் கிறிஸ்துவுக்குள் வலுப்படுத்த உதவினார். 15 ஆம் தேதி விருதுபட்டியை (விருதுநகர்) அடைந்தார். அங்கு கிறிஸ்தவ நெசவாளர்கள் அனைவரும் தெற்கு திரும்பிச் சென்றுவிட்டதையும் மற்றும் சிலர் செல்லவிருந்தனர் என்பதையும் கண்டார்.
19 ஆம் தேதி அவர் புவானியை (Puvani) அடைந்தார், அங்கு பதினான்கு கிராமங்களில் வாழும் அறுபது பேர் சபையை உருவாக்கினர். 20 ஆம் தேதி அங்கு பதினாறு பேருடன் கர்த்தரின் இராப்போஜனத்தை (நற்கருணை) கொண்டாடி, 21 ஆம் தேதி பாளையங்கோட்டையை அடைந்தார்.
அங்கு அவர் கேப்டன் ட்ராட்டருடன் தங்கி, 26 ஆம் தேதி ஆராதனைகளை நடத்தினார். ஆங்கில ஆராதனையில் பதின்மூன்று பேரும், தமிழ் ஆராதனையில் நாற்பத்தைந்து பேரும் நற்கருணையில் பங்கேற்றனர். மேலும் அவர் அங்கும் மற்றும் பதினைந்து அண்டை கிராமங்களிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவ சபை 105 ஆத்துமாக்களைக் கொண்டிருந்தது என குறிப்பிடுகிறார்.
பாளையங்கோட்டையில் இருந்தபோது, திருவாங்கூரில் சீர்திருத்த சபைகளை உருவாக்க முடியுமா என்று பார்க்க அங்கு செல்லுமாறு ஆங்கிலேய ரெசிடென்ட் அவரை அழைத்தார். ஆனால் பயணம் செய்ய நேரம் இல்லை என்று முடிவு செய்தார்.
பற்பநாதபுரம் மற்றும் முதலூரில் அசாதாரண நிகழ்வுகள்
செப்டம்பர் 27 அன்று அவர் தெற்கு நோக்கி புறப்பட்டு பற்பநாதபுரம் அடைந்தார். அங்குள்ள சபை தொண்ணூறு பேரைக் கொண்டிருந்தது, அவர்களில் முப்பத்தினான்கு பேர் பரிசுத்த நற்கருணையைப் பெற்றனர். அங்கு அவர் ஒருவருக்கு (செட்டியாருக்கு) ஞானஸ்நானம் வழங்கினார், அவர் சந்தியாகோவால் கிறிஸ்துவிடம் அழைத்து வரப்பட்டவர். சபையினர் அவரை சந்தியாகோவுடன் சேர்ந்து தங்கள் மேற்பார்வையாளராக ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தனர்.
செப்டம்பர் 28 அன்று அவர் முதலூரை அடைந்தார். அங்கு இரண்டு நாட்கள் தங்கி சில மக்களுக்கு (சாணார் சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு) ஞானஸ்நானம் வழங்கிய பின், மற்ற கிராமங்களில் தொடர்ந்து ஐந்து நாட்கள் அசாதாரணமான வெகுஜன ஞானஸ்நானங்களை நடத்தினார்.
மாலையில், ஒரு உபதேசியாருடன் நான் முதலூருக்கு பயணம் செய்தேன், இந்த ஊரில் கிறிஸ்தவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அவர்களில் பலர், வயதானவர்களும் இளைஞர்களும், என்னைச் சந்திக்க கிட்டத்தட்ட முழு வழியும் (சாத்தன்குளம் வரை) வந்தனர். அவர்கள் என்னை அவர்களின் திருச்சபைக்கு அழைத்துச் சென்றனர், இது பனைமரத் தண்டுகள் மற்றும் இலைகளால் கட்டப்பட்டு ஓலையால் வேயப்பட்டிருந்தது, அதை அவர்கள் விளக்குகளால் நிரப்பியிருந்தனர். நான் ‘Hallelujah loud, praise and honour’ என்ற பாடலைத் தொடங்கினேன், (இந்தப் பாடல் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; இதற்கான சரியான தமிழ் பாடல் எது என்பதைத் தெளிவாகக் கண்டறிய முடியவில்லை) அவர்களின் சிறந்த பாடலைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். நான் ஜெபித்து, பின்னர் அவர்களுக்கு உரையாற்றினேன். பாளையக்காரர்களின் படையெடுப்பின் போது அவர்கள் அனுபவித்த துன்பங்களை நினைவுபடுத்தினேன்; எவ்வாறு கிறித்தவ வெறுப்பாளர்கள் அவர்களின் திருச்சபையும் அனைத்து கிறிஸ்தவ புத்தகங்களையும் எரித்தனர்; அவர்களில் பலர் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பல்வேறு வழிகளில் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு, அவர்களை மீண்டும் அவர்களது மதத்திற்குத் திரும்ப வற்புறுத்தப்பட்டனர் எனபதையும் நினைவுபடுத்தினேன். அவர்கள் கர்த்தருக்கு உண்மையாக இருக்க கிருபையுடன் கொடுக்கப்பட்ட பலத்தையும், அந்த கசப்பான துன்பத்தின் காலத்திற்குப் பிறகு அவர்களின் சபையில் நடைபெற்ற கர்த்தரின் அற்புதமான கிருபையால் ஏற்ப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சியையும் நினைவுபடுத்தினேன். அதன் பின் நான் அவர்களை நன்றியுணர்வுக்கும் கிறிஸ்துவின் சேவையில் விசுவாசத்துடனும் உறுதியுடன் இருக்கவும் அறிவுறுத்தினேன்.
“அடுத்த நாள் காலையிலிருந்து, கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஒவ்வொருவராக தேவாலயத்தில் என்னிடம் வரத் தொடங்கினர். நான் பெரும்பாலான நாளை அவர்களுக்கு அறிவுரை கூறவும் தனிப்பட்ட முறையில் அவர்களுடன் பேசவும் செலவிட்டேன். உயர் பதவியில் உள்ள பிற மதத்தில் உள்ள ஒருவர் பல மாதங்களாக ஞானஸ்நான பெற விரும்பும் சபை மக்கள் போதிக்கப்பட்டு தயார்படுத்தப்படும் நேரங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். கல்வியறிவு உள்ள மனிதராக இருந்ததால், எங்கள் புத்தகங்களைப் படிப்பதிலிருந்தும் அவர் நிறைய கற்றுக்கொண்டிருந்தார். உள்ளூர் குருவானவர் அவருக்கு ஞானஸ்நானம் வழங்க முடியாது என்று கூறியபோது அவர் மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் நான் இந்த முடிவை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது, ஏனெனில் அவர் தனது முதல் மனைவி குழந்தையில்லாததால் இரண்டாவது மனைவியை திருமணம் செய்திருந்தார். இரண்டாவது மனைவியால் குழந்தைகள் இல்லையென்றால், அவளை அவளது பெற்றோரிடம் திருப்பி அனுப்பி அவளுக்கு ஆதரவு வழங்குவதாகவும், அப்போது ஞானஸ்நானத்தின் மூலம் சபையில் சேர்க்கப்பட முடியுமா என்றும் அவர் கேட்டார். ஆனால் இதைப் பற்றி பல்வேறு சந்தேகங்களும் தயக்கங்களும் இருக்கலாம் என்று நான் அவருக்குக் காட்டினேன். மற்றபடி, கிறிஸ்தவர்கள் மற்றும் அவிசுவாசிகள் இருவரிடமும் அவருக்கு நல்ல பெயர் உள்ளது, அவருக்கு புத்தியும் திறமையும் உள்ளது. மதியத்தில் உள்ளூர் குருவானவருக்கும் உபதேசியார்களில் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட சில தவறான புரிதல்களைத் தீர்ப்பதில் நான் ஈடுபட்டிருந்தேன்.”
“30 ஆம் தேதி: இன்று அதிகாலையில் நான் இருபத்தொரு பேரைப் பரிசோதித்து உறுதிப்படுத்தினேன், பின்னர் அவர்கள் மற்ற இருபத்தேழு பேருடன் சேர்ந்துபரிசுத்த நற்கருணை ஆராதனையில் கலந்துக்கொண்டனர். ‘சமாதானத்தைத் தேடி அதைப் பின்தொடருங்கள்’ என்ற தலைப்பின் அடிப்படையில் கர்த்தரின் வார்த்தையை அவர்களிடம் போதித்தேன் மேலும் நான் சபையினருக்கு இந்த கர்த்தரின் வார்த்தையின்படி நடக்குமாறு அறிவுறுத்தினேன். இந்த பிரசங்கம் பலருக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. உள்ளூர் குருவானவர் சத்தியநாதனுக்கு எதிராக பல்வேறு அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்த உபதேசியார் இந்த பிரசங்கத்தைக் கேட்ட போது மிகவும் மன வியாகுலப்பட்டு துக்கபட்டார். ஆலய ஆராதனை முடிந்தவுடன், அவர் வந்து குருவானவர் சத்தியநாதனின் காலில் விழுந்து, கண்ணீருடன் மன்னிப்பு கேட்டார். மாலையில் நான் மீண்டும் ஆலய ஆராதனையை நடத்தினேன். நீண்ட காலமாக போதனை பெற்ற இரண்டு கிராமங்களின் தலைவர்கள், இருபத்தாறு பெரியவர்கள், மற்றும் சபையில் பிறந்த மூன்று குழந்தைகள் ஞானஸ்நானம் பெற்றனர்.” இதனுடைய தொடர்ச்சியை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.
இந்த வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும்போது, நாம் ஒரு முக்கியமான உண்மையைக் காண்கிறோம். “தேவனின் இராஜ்யத்தின் வளர்ச்சி எப்போதும் மனித திட்டங்களின்படி நடைபெறுவதில்லை அது கர்த்தர் குறித்து வைத்துள்ள காலத்தில் அவரது திட்டத்தின்படியே நடக்கிறது”. ஸ்வார்ட்ஸ் நட்டார், ஜெனிக்கே மற்றும் சத்தியநாதன் நீர்ப்பாய்ச்சினர், ஆனால் அதை விளையச்செய்தவர் தேவன் தான். அது அவர்கள் எதிர்பார்த்த இடத்திலும் எதிர் பார்த்த நேரத்திலும் அல்ல. வேதத்தில் உள்ள ஒரு வசனத்தைக் காண்பிக்க விரும்புகின்றேன்: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான்; தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.” (1 கொரிந்தியர் 3:6-7)
நடுவதும் (கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விதைப்பதும்) நீர்ப்பாய்ச்சுவதும் (கிறிஸ்தவ ஜீவியத்தில் அவர்கள் வேரூன்ற உதவி செய்வதும்) நமது கடமை. ஆனால் அதின் பலனைத் தருவது கர்த்தரே. சில நேரங்களில் அதன் பலனை உடனடியாகக் காண முடியாமல் போகலாம் என்பதற்காக சோர்வடைவது தேவையில்லை; ஏற்ற நேரத்தில், நம்முடைய உண்மையான ஊழியத்தின் விளைச்சலை கர்த்தர் வெளிப்படுத்துவார்.
இன்றைய காலத்திலும் நமது திட்டங்கள் தோல்வியடையும்போதும், நமது முயற்சிகள் பலனளிக்காமல் போகும்போதும், தேவன் தமது சொந்த வழியில் தமது இராஜ்யத்தை கட்டிக்கொண்டிருக்கிறார். பாளையக்காரர் கிளர்ச்சியின் துன்பங்களும், பஞ்சத்தின் கஷ்டங்களும் கூட தேவனின் நோக்கங்களைத் தடுக்க முடியவில்லை. மாறாக, அவை விசுவாசிகளின் நம்பிக்கையை சுத்திகரித்து, அவர்களை பெரிய ஆத்தும அறுவடைக்குத் தயார்படுத்தின.
“இன்னல்கள் சூழ்ந்தபோதும், திருச்சபை நிலைகுலையவில்லை;
கர்த்தர் தன் கரங்களை விட்டு விடவில்லை ,துன்பத்தின் நடுவிலும் செதுக்கினார் அவர்,
சாட்சியின் ஒளியாக இன்று பிரகாசிக்கிறது அது”
தொடர்ந்து பயணிப்போம்…
